You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிட்னி மால் தாக்குதல்: மக்களை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் யார்? அடையாளத்தை வெளியிட்ட போலீஸ்
- எழுதியவர், போண்டியிலிருந்து டிஃபானி டர்ன்புல்&கேட்டி வாட்சன், லண்டனிலிருந்து டௌக் ஃபால்க்னர்
- பதவி, பிபிசி
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மால் ஒன்றில் கத்தியால் தாக்கி ஆறு பேரைக் கொன்ற நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர் 40 வயதான ஜோல் கோச்சி என்பது தெரிய வந்துள்ளது.
சனிக்கிழமை சிட்னி மாலுக்கு சென்ற அவர், திடீரென கத்தியால் அங்கிருந்த மக்களைத் தாக்கினார். இந்தச் சம்பவத்தில் ஐந்து பெண்கள், ஓர் ஆண் என ஆறு பேர் கொல்லப்பட்டனர், ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல், "கோச்சியின் மனநலத்துடன் தொடர்புடையது" என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜோல் கோச்சி பெண்களை இலக்கு வைத்துத் தாக்கினாரா என்ற கேள்விக்கு ஊடகத்திடம் பதிலளித்த நியூ சௌத் வேல்ஸ் காவல் ஆணையர் கேரன் வெப், "அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக" தெரிவித்தார்.
ஆனால், இத்தாக்குதலை தான் "தீவிரவாத நடவடிக்கை" என விவரிக்க மாட்டேன் என்றும் இதில் "கொள்கை ரீதியிலான நோக்கம் இல்லை" என போலீசார் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான குயின்ஸ்லாந்தை சேர்ந்த கோச்சியை காவல்துறையினர் முன்பே அறிந்துள்ளனர். சிட்னியில் அவருடைய சிறிய சேமிப்புக் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையிலும் இத்தாக்குதலுக்கான நோக்கம் குறித்துத் தெரியவரவில்லை என காவல்துறை ஆணையர் கூறினார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை விவரித்துள்ளனர்.
"இந்த செயல் பைத்தியக்காரத்தனம்," என வருத்தத்துடன் விவரித்தார் ஒரு பெண்.
போண்டியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் மாலில் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு மேல் இச்சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல அந்நேரத்தில் வணிக வளாகத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்திருந்தனர்.
நேரில் பார்த்த ஒருவர் தனது இரண்டு சிறிய குழந்தைகளுடன் கடை ஒன்றின் அருகில் இருந்தபோது, ஒரு நபர் "மக்களைக் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதைக்" கண்டார்.
"இது படுகொலை" என்று பெயர் வெளியிட விரும்பாத அவர், ஏபிசி நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் கூறினார்.
அந்த ஆயுததாரி உள்ளூர் நேரப்படி 3:10 மணிக்கு வணிக வளாகத்திற்குச் சென்று சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து இந்த கொடுமையான செயலில் ஈடுபட்டதாக காவல்துறை கூறுகிறது.
அவர் வணிக வளாகத்தில் இருந்தவர்களை ஏன் தாக்கினார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தீவிரவாதம் ஒரு நோக்கமாக இருக்கலாம் என்ற யூகம் நிராகரிக்கப்படவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
அருகில் பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்நபரை நேராக எதிர்கொண்ட போதுதான் இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது. அப்போது, அந்நபர் போலீஸ் அதிகாரியை நோக்கி கத்தியை உயர்த்தினார். அப்போது அந்நபரை போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
"மக்கள் அலறிக்கொண்டே ஓடினர்" என்றும் பின்னர் போலீஸ் அதிகாரியை மக்கள் பின்தொடந்து சென்றதாகவும் பெயரிடப்படாத மற்றொரு நேரில் பார்த்த சாட்சி கூறினார்.
"பெரிய கத்தியுடன்" ஆயுதம் ஏந்திய அந்த நபர் "எங்களை நோக்கி வரத் தொடங்கினார். அப்போது 'கீழே போடு' என்ற சத்தத்தைக் கேட்டோம். பின்னர், அந்த அதிகாரி அந்நபரை சுட்டார்" என அவர் கூறினார்.
"அவர் சுடவில்லை என்றால், அந்த நபர் தொடர்ந்து பலரை கொன்றிருப்பார். அவ்வளவு வெறித்தனத்துடன் அந்த நபர் இருந்தார்." என்கிறார் அவர்.
‘எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தோம்'
தாக்குதல் நடந்த வெஸ்ட்ஃபீல்ட் மால், சிட்னியின் மத்திய வணிக மாவட்டத்தின் கிழக்கில் உள்ள ஒரு பெரிய வணிக மையமாகும். இது, புகழ்பெற்ற போண்டி கடற்கரைக்கு அருகில் உள்ளது.
இது நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான வணிக வாகளங்களுள் ஒன்றாகும். வழக்கமான சனிக்கிழமைகளைப் போலவே இன்றும் இந்த மாலில் நூற்றுக்கணக்கான மக்கள் நிரம்பியிருந்தனர். இதில் பலர் சிறு குழந்தைகள் ஆவர்.
இந்த தாக்குதல்கள் நடந்தபோது அதைத் தடுக்க சக்தியின்றி பார்த்துக் கொண்டிருந்ததாக, இதனால் அதிர்ச்சியில் உள்ள கடைக்காரர்கள் விவரிக்கின்றனர்.
நியூ சௌத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் இருந்து வருகை தந்த 33 வயதான ஜானி, தனக்கு அலறல் சத்தம் கேட்டதாகவும் திரும்பிப் பார்த்த போது, ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் தாக்கப்படுவதைப் பார்த்ததாகவும் கூறினார்.
"அவர் கத்தியால் குத்தப்பட்டார். எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தனர், என்ன செய்வது என்றே தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
காயமடைந்த பெண், டாமி ஹில்ஃபிகர் கடைக்கு ஓடினார், உள்ளே நுழைந்தவுடன், ஊழியர்கள் விரைவாக கதவுகளைப் பூட்டினர் என்றார்.
“மற்ற கடைக்காரர்களில் சிலர் உடைகளைப் பயன்படுத்தி, ரத்தப்போக்கை நிறுத்த முயற்சித்தனர்," என்று அவர் கூறினார்.
"குழந்தைக்கு சிறிய காயம் மட்டுமே இருந்தது, ஆனால் அந்த பெண் மிகவும் மோசமாக இருந்தார் ... நிறைய ரத்தம் வெளியேறியது, அப்பெண் பீதியடைந்திருந்தார்," என்று அவர் கூறினார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், ஒருவர் காயமடைந்து கிடந்ததைக் கண்டதாகவும், என்ன நடக்கிறது என்பதையே அப்போது உணர முடியவில்லை என்றும் கூறினார்.
"அப்போது மக்கள் அனைவரும் எங்களை நோக்கி ஓடிவருவதை நாங்கள் பார்த்தோம். பின்னர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. என் கணவர் எங்களை ஒரு கடைக்குள் இழுத்துச் சென்றார். அப்போது அக்கடையில் இருந்த பெண் ஒருவர் கதவைப் பூட்ட முயற்சித்தார். அவரால் முன் கதவைப் பூட்ட முடியவில்லை. அதனால் நாங்கள் அலுவலகத்திற்குள்ளே சென்றோம். அலுவலகம் முழுவதும் பூட்டப்பட்டிருந்தது, பின்னர் போலீசார் எங்களை அழைத்துச் செல்லும் வரை நாங்கள் உள்ளேயே இருந்தோம்” என்றார் அவர்.
சம்பவம் குறித்து தமக்கு விளக்கமளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார்.
"துரதிர்ஷ்டவசமாக, பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் அனைத்து ஆஸ்திரேலியர்களின் எண்ணங்களும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன" என்று அவர் ‘எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
"காயமடைந்தவர்கள் குறித்து நாங்கள் வருத்தம் கொள்கிறோம். அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கும், எங்கள் துணிச்சலான காவல்துறை மற்றும் முன்களத்தில் இருந்தவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
'நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன்'
சிட்னி மாலில் தாக்குதல் நீடித்த 45 நிமிட நேரமும் ஹூமா ஹுசைனியும் முகமது நவீதும் அங்கிருந்த ஒரு அறையில் மறைந்திருந்தனர்.
பிபிசியிடம் பேசிய ஹூமா"நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன்," என்றார். அப்போதும் கூட அவளுடைய குரல் நடுங்கியபடியே இருந்தது.
லுலுலெமன் கடைக்கு வெளியே தாக்குதல் நடத்திய அந்த நபரிடம் இருந்து சில மீட்டர் இடைவெளியில்தான் அவர் இருந்தார். அவர் ஒரு முன்கை அளவுக்கு நீளமான ஒரு பெரிய கத்தியை அந்த நபர் வைத்திருந்ததாக அவர் கூறினார்.
அவருக்குப் பின்னால் இரண்டு இளம்பெண்கள் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தனர்.
ஒரு பெண் மற்றொரு பெண்ணை எழுப்ப முயற்சிப்பதைப் பார்த்த ஹூமா விவரிக்கிறார்: "[அவள்] நகரவில்லை."
துப்பாக்கிச் சத்தம் கேட்கும் போது அவர் பயந்திருக்கிறார். அது காவல்துறையிடமிருந்து வந்தது என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
"தாக்குதல் நடத்திய நபரிடம் துப்பாக்கியும் இருக்கிறது என்று நினைத்தேன்." என்றார் அவர்.
"பத்தே நிமிடங்களில் விரைந்து சென்ற போலீஸ்"
வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பில் இருந்த நபர்களில் மற்றொருவரான ஒலிண்டா நெமர், "மிகவும் பயங்கரமானது" என்று அந்த காட்சியை விவரித்தார்.
"அவர் மக்களை குத்துவதை நான் பார்க்கவில்லை, ஆனால் அவர் கத்தியுடன் ஓடுவதை நான் பார்த்தேன்," என்று அவர் கூறுகிறார்.
"மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர், அலறினர். முதலில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை, எனவே நாங்கள் அனைவருடனும் ஓடினோம்." என்றார் அவர்.
22 வயதான அவர் மற்றவர்களுடன் ஒரு கடைக்குள் ஓடி, தனக்குப் பின்னால் கதவை மூடிக்கொண்டதாக கூறுகிறார். பல பேர், உள்ளே இருந்து போலீஸை அழைத்துள்ளனர்.
"10 நிமிடங்களுக்குள் போலீசார் இங்கு வந்துள்ளனர், ஒருவேளை குறைவாக இருக்கலாம்." என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)