கடினமான முடிவுகளை எடுப்பதற்கு ‘டாஸ்’ போட்டுப் பார்ப்பதுதான் சிறந்த வழிமுறையா?

உளவியல், முடிவு, டாஸ், நாணயம்
    • எழுதியவர், கிட் யேட்ஸ்
    • பதவி, கணித விரிவுரையாளர், பாத் பல்கலைக்கழகம்

நமது வாழ்வில் ஒவ்வொரு நாளும் நாம் பல முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஆனால், கடினமான முடிவுகளை எடுக்க நாம் திணறும்போது, அதற்கு 'டாஸ்' போட்டு பார்ப்பது சரியான முடிவுள் எடுக்க நமக்கு உதவுமா?

பல சமயங்களில் ஒரு உணவகத்தின் விரிவான மெனுவிலிருந்து எதை ஆர்டர் செய்வதென்று தெரியாமல் நீங்கள் திணறிப்போகலாம். சர்வர் மற்ற அனைவரது ஆர்டர்களையும் எடுத்த பிறகே உங்கள் ஆர்டரை நீங்கள் கொடுப்பீர்கள்.

பல தேர்வுகளும் நமக்கு நல்லவையாகத் தோன்றும். ஆனால் அவற்றில் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க எத்தனிப்பதன் மூலம், நாம் எல்லாவற்றையும் தவறிவிடக்கூடிய அபாயத்தை எதிர்நோக்குகிறோம்.

பெண்

பட மூலாதாரம், Getty Images

இணையம், என்றுமில்லாத வகையில் நுகர்வோர் விருப்பங்களை நேரடியாக நம் வீடுகளுக்கும், நம் கைகளில் உள்ள அலைபேசிகளுக்கும் கொண்டு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தேர்வு என்பது முதலாளித்துவத்தின் உந்து சக்தியாகக் காணப்பட்டது. சந்தையில் போட்டியிடும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இடையே நுகர்வோர் செய்யும் தேர்வே எந்த வணிகங்கள் செழித்து வளர்கின்றன என்றும் எவை செத்து மடிகின்றன என்றும் தீர்மானிப்பதாக நீண்ட காலமாக நம்பப்பட்டது.

இருப்பினும், சமீபத்திய ஆய்வாளர்களும் கோட்பாட்டாளர்களும், அதீத தேர்வுகள், நுகர்வோரிடையே பலவிதமான கவலைகளைத் தூண்டும் என்று கூறுகின்றனர்.

ஒரு சிறந்த வாய்ப்பை இழக்க நேரிடுமோ என்ற பயத்தில் இருந்து, மோசமான தேர்வைச் செய்வதன் கவலை வரை.

பரந்த அளவிலான தேர்வுகளால் முன்வைக்கப்படும் எதிர்பார்ப்புகளால், சிலருக்கு எந்த அனுபவமும் திருப்திகரமாக இல்லாமல் போகும் உணர்வு ஏற்படுகிறது. , ம், மற்றவர்கள் பகுப்பாய்வு முடக்கத்தை அனுபவிக்கவும் வழிவகுக்கும். அதீத தேர்வுகள் ஒரு மோசமான நுகர்வோர் அனுபவத்தை வழங்குகின்றன, மேலும் வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்கும் வாய்ப்பைக் குறைக்கின்றன. இது ‘தேர்வு முரண்பாடு’ என்று அழைக்கப்படுகிறது.

நுகர்வோர் நடத்தை மீதான ஆய்வுகள், அதிகப்படியான தேர்வுகள், ஒருவர் ஒரு பொருளை வாங்கும் முன் தவறான தகவல்களைக் கொடுத்து அவரது முடிவைக் குழப்பும் என்று கூறுகின்றன.

உளவியல், முடிவு, டாஸ், நாணயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இணையம், என்றுமில்லாத வகையில் நுகர்வோர் விருப்பங்களை நேரடியாக நம் வீடுகளுக்கும், நம் கைகளில் உள்ள அலைபேசிகளுக்கும் கொண்டு வந்திருக்கிறது

‘மிகச் சிறந்தது, நல்லவற்றின் எதிரி’

தேர்வு சார்ந்த விஷயங்களில், ஒரு பிரச்சனைக்கு கச்சிதமான தீர்வு இருக்கிறது என்ற கருத்து " Nirvana fallacy" என்று அழைக்கப்படுகிறது.

நமது இலட்சியப்படுத்தப்பட்ட முன்முடிவுகளுக்கு ஏற்ப எந்தத் தீர்வும் நிதர்சனத்தில் இல்லை.

நாம் எடுக்க விரும்பும் முடிவில் இருந்து நாம் சற்று பின்வாங்கும்போது, ஒரு மிகச்சிறந்த தேர்வு இருந்தாலும், நம்மைத் திருப்திபடுத்தக்கூடும் வேறு பல நல்ல தேர்வுகளும் இருக்கத்தான் செய்கிறது.

மிகச் சிறந்ததாக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் போதுமானதாக இருக்கும் ஒரு தேர்வைத் தேர்ந்தெடுப்பது, ‘satisficing’ என்று அழைக்கப்படுகிறது. இது ‘திருப்தியானது’ (satisfying) மற்றும் ‘போதுமானது’ (suffice) ஆகிய சொற்களின் கலவை.

பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவஞானியுமான வால்டேர் தனது ‘தத்துவ அகராதி’ எனும் நூலில் பதிவு செய்திருப்பதைப் போல: ‘மிகச் சிறந்தது, நல்லவற்றின் எதிரி’.

உளவியல், முடிவு, டாஸ், நாணயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பலவற்றினிடையே எதைத் தேர்வு செய்வது என்று சிரமப்படும் போது, ஒரு நாணயம் போல, ஒரு பகடையைப் போல ஒரு வெளிப்புரக் காரணி மூலம் எட்டப்படும் முடிவு, உங்கள் உண்மையான விருப்பத்தில் கவனம் செலுத்த உதவும்

எளிய தீர்வு

ஆனால், அதிர்ஷ்டவசமாக, இந்தச் சிக்கலைச் சமாளிப்பதற்கு ஒரு எளிய வழி உள்ளது.

அதுதான் ‘டாஸ் போட்டுப் பார்ப்பது’, ‘தாயம் உருட்டிப் பார்ப்பது’ போன்ற.

உங்களைட் திருப்திப்படுத்தக்கூடிய பலவிதமான தேர்வுகள் உங்கள் முன் இருக்கும்போது, ஒரு நாணயத்தைச் சுண்டிப் பார்ப்பது அல்லது ஒரு பகடையை உருட்டிப்பார்ப்பது மூலம் உங்களுக்குக் கிடைக்கும் முடிவே சிறந்த தேர்வாக இருக்கலாம்.

சில சமயங்களில் ஒரு ‘நல்ல தேர்வை’ விரைவாக , ஒரு ‘கச்சிதமான தேர்வை’ மிகத் தாமதமாக எடுப்பதைவிடச் சிறந்தது. இது ஒரு முடிவை எடுக்கவே முடியாமல் முடங்கி விடுதை விட மிகச் சிறந்தது.

பலவற்றினிடையே எதைத் தேர்வு செய்வது என்று சிரமப்படும் போது, ஒரு நாணயம் போல, ஒரு பகடையைப் போல ஒரு வெளிப்புரக் காரணி மூலம் எட்டப்படும் முடிவு, உங்கள் உண்மையான விருப்பத்தில் கவனம் செலுத்த உதவும்.

இந்த வழிமுறை, அதுவரை தெளிவில்லாமல் இருந்த ஒரு முடிவின் விளைவுகளைக் கற்பனை செய்ய நமக்கு உதவும்.

சுவிட்சர்லாந்தில் இருக்கும் பேசல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சமீபத்தில் நடத்திய சோதனைகள், இதுபோல டாஸ் போட்டு எடுக்கப்படும் முடிவுகள், அதீத எண்ணிக்கையிலான தேர்வுகளால் ஏற்படும் முடக்கத்தைச் சமாளிக்க உதவும் என்பதை நிரூபித்துள்ளன.

சோதனை முடிவு சொல்வது என்ன?

இந்தச் சோதனையில், பங்கேற்பாளர்கள் கற்பனையான ஒரு கடையின் மேலாளரைப் பணி நீக்கம் செய்வதா அல்லது மீண்டும் பணியில் அமர்த்துவதா என்று முடிவெடுக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு சில அடிப்படை பின்னணித் தகவல்கள் தரப்பட்டன.

பங்கேற்பாளர்களின் மூன்று குழுக்களாகப் பிரிகப்பட்டனர்.

ஒரு ஆரம்பக் கருத்தை மட்டுமே வைத்து இந்த முடிவினை எடுப்பது கடினமாக இருக்கும் என்பதால், மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள், கணினியால் உருவாக்கப்பட்ட ஒரு நாணயத்தைச் சுண்டி ஒரு முடிவுக்கு வரலாம் என்று கூறப்பட்டது.

டாஸ் விழுவதைப் பொறுத்து குழுக்கள் அவர்களது முதற்கட்ட முடிவையே பின்பற்றுவதா அல்லது மறுதலிப்பதா என்பதைப் பரிந்துரைக்க வேண்டும்.

பங்கேற்பாளர்கள் நாணயம் தரும் முடிவை புறக்கணிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

மூன்று குழுக்களிடமும் கூடுதல் தகவல்கள் தேவையா அல்லது அவர்கள் ஏற்கனவே அறிந்தவற்றின் அடிப்படையில் தங்கள் முடிவை எடுப்பதில் மகிழ்ச்சியடைகிறார்களா என்று கேட்கப்பட்டது. கூடுதல் தகவல்களைக் கேட்டவர்கள் அதைப் பெற்றவுடன், பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் இறுதி முடிவைச் சொல்ல வேண்டும்.

இதன் முடிவில், நாணயத்தைச் சுண்டிய குழுக்கள், மற்ற குழுவை விடவும் தங்கள் முதல் முடிவில் திருப்தி அடைவதற்கான சாத்தியங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருந்தன. அவர்கள் கூடுதல் தகவல்களைக் கேட்கவில்லை. டாஸ் போட்டுப் பார்த்தது, ஆராய்ச்சிகளில் அதிக நேரத்தைச் செலவழிக்காமல் ஒரு முடிவை எடுக்க அவர்களுக்கு உதவியது.

உளவியல், முடிவு, டாஸ், நாணயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘டாஸ்’ நமக்குத் தரும் முடிவை நாம் நிராகரிக்கத் தீர்மானித்தாலும், ஒரு வாதத்தின் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டிய கட்டாயம் நமது முடிவெடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்தலாம்

கடினமான முடிவுகளை எளிதாக எடுக்க முடியுமா?

சுவாரஸ்யமாக, ‘டாஸ்’-இன் முடிவு, பங்கேற்பாளரின் முதல் முடிவினை உறுதிப்படுத்தியதை விட, எதிர்மாறாகப் பரிந்துரைத்தபோது கூடுதல் தகவலுக்கான கோரிக்கைகள் குறைவாக இருந்தன. ‘டாஸ்’ அவர்களின் முதல் முடிவை வலுப்படுத்திய போதை விட, எதிர் நிலைப்பாட்டை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் பங்கேற்பாளர்கள் தங்கள் முதல் தேர்வில் உறுதியாக இருந்தனர்.

ஒரு நாணயம், ஒருவரின் வாழ்க்கையின் திசையை முடிவுசெய்ய அனுமதிப்பது நம்மில் பலருக்கு சங்கடமாக இருக்கும். ஆனால் அதன் முடிவை நாம் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். வெளிப்புறக் காரணியால் பரிந்துரைக்கப்பட்ட தேர்வு, குறிப்பிட்ட விருப்பத்தை ஏற்றுக்கொள்வதைத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுபவர்கள், ஒரு தேர்வினால் குழம்பியிருக்கும் பொது, ஒரு நாணயத்தைச் சுண்டி ‘டாஸ்’ போட்டு அதன் மூலம் ஒரு முடிவெடுக்கலாம் என்பது ஆறுதலளிக்கும் ஒரு விஷயம் தான்.

‘டாஸ்’ நமக்குத் தரும் முடிவை நாம் நிராகரிக்கத் தீர்மானித்தாலும், ஒரு வாதத்தின் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டிய கட்டாயம் நமது முடிவெடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்தலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: