வரும் ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா விளையாடுவாரா? அடுத்த கட்ட திட்டம் என்ன?

    • எழுதியவர், விதான்ஷு குமார்
    • பதவி, விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி ஹிந்திக்காக

இந்தியக் கிரிக்கெட்டில் சமீபத்தில் எழுந்துள்ள புயல் இந்திய அணியுடன் தொடர்புடையது அல்ல. ஐ.பி.எல்.லின் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸுடன் தொடர்புடையது.

சர்ச்சையின் மையத்தில் இருப்பவர் - ரோகித் சர்மா.

அடுத்த சீசனில் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தவுடன், இணையத்தில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றமடந்துள்ளனர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை இழந்தது. அறிவிப்பு வந்த முதல் நாளில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கத்தை நான்கு லட்சம் பேர் ‘அன்ஃபாலோ’ செய்திருக்கிறார்கள்.

ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி மற்றும் தொப்பிகளுக்கு தீ வைக்கும் படங்கள் இணையத்தில் வைரலானது.

ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினர். அதேசமயம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்த நடவடிக்கையைப் பற்றித் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

முன்னாள் இந்திய வீரர்கள் கூறுவது என்ன?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் இடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியின் இடத்துக்கு இணையானதுதான் என்றார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரோகித் சர்மா அணியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். என்னுடைய பார்வையில் இது தோனி சென்னை அணியில் வகிக்கும் அதே இடம்தான். ரோகித் சர்மா தனது ரத்தம் மற்றும் வியர்வையால் மும்பை அணியை கட்டமைத்துள்ளார். மேலும் ஒரு கேப்டனாக அவர் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார்,” என்றார்.

இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும் தற்போதைய இந்திய டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவ், ‘உடைந்த இதயம்’ எமோஜியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதுவும் வைரலாகியிருக்கிறது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவை ஆதரித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா சோர்வாக இருப்பதாகவும், அணிக்கு புதிய சிந்தனை தேவை என்றும் கூறினார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் அவர் கூறுகையில், “இதில் எது சரி, எது தவறு என்று பார்க்காமல், அணியின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேட்டிங்கில் ரோகித்தின் பங்களிப்பும் சரிந்திருக்கிறது,” என்றார்.

மும்பை அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடித் தந்தவர்

இந்த முறை ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் நீக்குவது குறித்து உண்மையில் யாருக்கும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஐ.பி.எல் தொடரின் மிக வெற்றிகரமான கேப்டனான ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.

அவரது சிறப்பான பேட்டிங் பாணியும், கேப்டன்ஷிப்பில் நிபுணத்துவமும் அவரை அணிக்கு மாற்று இல்லாத வீரராக்குகிறது.

அவர் 2011-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். முதல் வருடத்தில் அவர் 33.81 சராசரியில் 372 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, அவர் மும்பை அணிக்காக 31 சராசரியில் 5,230 ரன்கள் எடுத்தார், இதில் 40 அரை சதம் மற்றும் 1 சதம் அடங்கும்.

இந்த காலகட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக இருந்தது. இது அவரது அணிக்கு வலுவான தொடக்கத்தைப் பெற அடிக்கடி உதவியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது பேட் சற்று அமைதியாகிவிட்டாலும், இந்த ஃபார்ம் விரைவில் மேம்படக்கூடும். மேலும் பல வருட டி20 கிரிக்கெட்டை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

2013-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரிக்கி பாண்டிங் பாதியிலேயே விட்டுச் சென்றபோது ரோகித் சர்மா கேப்டனாக இருந்தார்.

இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை வென்றது. கேப்டனாக இருந்த ஏறக்குறைய 10 ஆண்டுகளில், ரோகித் சர்மா 158 போட்டிகளில் அணிக்குத் தலைமை தாங்கினார். இவற்றில் 87 போட்டிகளில் வெற்றி பெற்றார், அவர் 67 இல் தோல்வியடைந்தார்.

இந்த முடிவுக்கு என்ன காரணம்?

அணியின் இந்த முடிவுக்கு ரோகித்தின் ஃபார்ம் தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் குஜராத் அணிக்குக் கொடுத்தது. ஹர்திக் புதிய அணியை முதல் சீசனிலேயே சாம்பியனாக்கினார். அதே சமயம் கடந்த ஆண்டு குஜராத் இரண்டாவது இடத்தில் இருந்தது.

சமீப ஆண்டுகளில் மும்பையால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. இரண்டு முறையும் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அந்த அணி கடைசியாக 2020-இல் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் குறைவான ரன்களையே எடுத்தார்.

2022-ஆம் ஆண்டில், அவர் 14 போட்டிகளில் 19 சராசரியுடன் 268 ரன்கள் எடுத்தார். அதே சமயம் 2023-இல் 16 போட்டிகளில் 20.75 சராசரியில் 332 ரன்கள் எடுத்தார். கடந்த இரண்டு சீசன்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

T20-இல் கூட, ரோகித் சர்மா நவம்பர் 2022 முதல் இந்திய அணிக்காக விளையாடவில்லை, மேலும் அவரிடமிருந்து கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியாவிடம் சென்றது. இருப்பினும், ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு ரோகித், விராட் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு டி20-யில் இருந்து ஓய்வு அளிக்க இந்திய நிர்வாகம் விரும்பியதாகவும், இது டி20-யில் அவர்களின் வாழ்க்கை முடிவடையும் என்பதற்கான அறிகுறி அல்ல என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது.

ரோகித்தின் அடுத்த முடிவு என்ன?

தற்போது ரோகித் சர்மாவின் அடுத்த நகர்வில்தான் அனைவரது பார்வையும் பதிந்துள்ளது.

அவர் ஹர்திக்கின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவாரா அல்லது வேறு ஏதேனும் அணியில் கேப்டன் பதவியைப் பெற விரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐ.பி.எல். ஏலம் இன்றுடன் டிசம்பர் 20-ஆம் தேதியும் நடக்கிறது. அனைத்து அணிகளும் தங்கள் அணியை மேலும் வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில அணிகள் ரோகித் சர்மாவின் பெயரைக் கருத்தில் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2022 மெகா ஏலத்தில் ரோகித் சர்மாவை ரூ. 16 கோடிக்கு மும்பை தக்க வைத்துக் கொண்டது. எனவே அவரை வாங்க விரும்பும் அணியிடம் குறைந்தபட்சம் ரூ.16 கோடி இருக்க வேண்டும்.

ரோகித் சர்மா மும்பை இந்தியன்சை விட்டு வெளியேறுவாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோகித்துக்கு வணக்கம் தெரிவித்து பதிவிட்டபோது, அதை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவும் லைக் செய்திருந்தார். இதனால் ரோகித் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி சீனியர் வீரர்களை புறக்கணிக்கும் அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ அதுபோன்ற வீரர்களை வாங்கி மெருகேற்றி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டதை நிபுணர்களும், ரசிகர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் ரோகித் சர்மா இதைச் செய்ய விரும்புவாரா அல்லது அவருக்குப் பிடித்த அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் செலவழித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பாரா?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)