சண்டிகர் மேயர் தேர்தல் முடிவையே மாற்றிய உச்ச நீதிமன்றம் - புதிய உத்தரவு என்ன?

காணொளிக் குறிப்பு, சண்டிகர் மேயர் தேர்தலில் குறைந்த இடங்களை வைத்திருந்த பா.ஜ.க. வென்றது எப்படி?
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவையே மாற்றிய உச்ச நீதிமன்றம் - புதிய உத்தரவு என்ன?

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.

 பாஜக வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் முடிவுக்கு தடை விதிக்க பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அதேநேரம் மூன்று வாரங்களுக்குள் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று சண்டிகர் நிர்வாகத்துக்கும் சண்டிகர் நகராட்சிக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

சண்டிகர் நகராட்சியில் மொத்தம் 35 இடங்கள் உள்ளன. இதில் பாஜகவுக்கு 14 கவுன்சிலர்களும் அகாலிதளத்துக்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர். மேயர் தேர்தலில், சண்டிகர் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாக்களிக்க உரிமை உள்ளது. அதன்படி, சண்டிகர் எம்பியான பாஜகவின் கிர்ரோன் கெர் வாக்களிக்க தகுதியானவர்.

மறுபுறம், ஆம் ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும் காங்கிரஸுக்கு 7 கவுன்சிலர்களும் உள்ளனர். அதாவது, இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் இருந்தன. பாஜகவை விட அதிக வாக்குகளை கொண்ட ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தங்களது இந்தியா கூட்டணியின் வேட்பாளராக குல்தீப் குமாரை அறிவித்தது.

ஜனவரி 30ஆம் தேதி தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்ட நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குல்தீப் குமாருக்கு 12 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

தேர்தல் முடிவை காங்கிரஸ், ஆம் ஆத்மி ஏற்க மறுப்பு

ஆனால், இந்த முடிவை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன.

தேர்தலை நடத்தும் அதிகாரி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவை குற்றஞ்சாட்டுகின்றன. இது தொடர்பாக சமூக ஊடகத்தில் காணொளி ஒன்று பரவி வருகிறது. அதில், தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்குச்சீட்டில் எதோ எழுதுவது போல பதிவாகியுள்ளது. வாக்குச் சீட்டில் அவர் குறியீடுகளை வரைந்ததாகவும் பின்னர் அவற்றை செல்லாதவை என அறிவித்ததாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பான வீடியோவை தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், `மேயர் தேர்தலில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். நாட்டில் இதுவரை எத்தனை தேர்தலில் இதுபோன்று அவர்கள் மோசடிகளை செய்துள்ளனர் என்பது யாருக்கு தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல்,காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ள பாஜக டெல்லியில் தொடர்ந்து ஆட்சியில் இருக்க என்ன செய்யும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாளில் கோட்சே காந்தியை கொன்றார். இன்று கோட்சே ஆதவாளர்கள் காந்தியின் கொள்கைகளையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் பலி கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தல்

தேர்தல் அதிகாரி கூறியது என்ன?

மேயர் தேர்தல் முடிவுகள் சர்ச்சை குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியான அனில் ஏ.என்.ஐ. செய்தி முகாமையிடம் பேசினார். அப்போது, வாக்குச்சீட்டில் குறியீடு இருந்ததால் 8 வாக்குச்சீட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். பாஜக வெற்றிபெற்றதாக அறிவித்த பின்னர், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் முகவர்களிடம் வாக்குச்சீட்டுகளை சரிபார்க்க வரும்படி கூறியதாகவும் ஆனால், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சினர் வாக்குச்சீட்டுகளை கைப்பற்றி கிழித்து எறிந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

தேர்தல் முடிவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

பாஜக வேட்பாளரை வெல்ல வைக்க தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டில் குளறுபடி செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் இதனை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜனவரி 31ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் முடிவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சண்டிகர் நிர்வாகத்துக்கும் சண்டிகர் நகராட்சிக்கும் உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டதால், குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

தேர்தல் அதிகாரி அனில் மசிஹுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அடுத்த அறிவிப்பு வரும் வரை மாநகராட்சி கூட்டத்தை கூட்ட தடை விதித்து உத்தரவிட்டது. ''உச்ச நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அவரிடம் சொல்லுங்கள்'' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

சண்டிகர் மேயர் தேர்தல்

சண்டிகர் மேயர் ராஜினாமா

சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று (பிப்ரவரி 19) உச்ச நீதிமன்றத்தில் வரவிருந்த நிலையில், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மனோஜ் சோன்கர் தனது மாநகராட்சி மேயர் பதவியை நேற்று (பிப்ரவரி 18) ராஜினாமா செய்தார்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பூனம் தேவி, நேஹா முசாவத், குருச்சரண் காலா ஆகியோர் டெல்லியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்ததால் 3 கவுன்சிலர்களும் தங்கள் கட்சியில் இணைந்ததாக வினோத் தாவ்டே கூறினார்.

இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் அதிகாரி நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளதாகக் கூறி கண்டித்தது.

அந்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

ஆம் ஆத்மி வேட்பாளரே சண்டிகர் மேயர் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசாரணையில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

உச்ச நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வழக்கறிஞர் ஷதன் ஃபராசத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொய் வழக்கில் தலைமை அதிகாரிக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வாக்குச் சீட்டில் முறைகேடு செய்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அவர் மீது ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்” என்றார்.

சண்டிகர் மேயர் தேர்தல்

பட மூலாதாரம், ANI

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ன சொன்னார்?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “142வது பிரிவின் கீழ் முழுமையான நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய இந்த நீதிமன்றம் கடமைப்பட்டது. தேர்தல் ஜனநாயகத்தின் செயல்முறையை வஞ்சகத்தால் முறியடிக்க முடியாது." என்றார்.

மேலும் தொடர்ந்த தலைமை நீதிபதி சந்திரசூட், “மனுதாரர் 12 வாக்குகள் பெற்றிருப்பது தேர்தல் முடிவில் தெளிவாகத் தெரிகிறது. 8 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. அது தவறு. அந்த வாக்குகள் ஒவ்வொன்றும் மனுதாரருக்கு ஆதரவாக சட்டப்பூர்வமாக போடப்பட்டது.

தேர்தல் நடைமுறையை முற்றிலும் தனிமைப்படுத்துவது சரியாக இருக்காது என்பது எங்கள் கருத்து. அதேசமயம் தலைமை அதிகாரி வாக்குகளை எண்ணும் கட்டத்தில் மட்டும் பலவீனம் தென்பட்டது. "முழு செயல்முறையையும் (மேயர் தேர்தல் தொடர்பானது) ஒதுக்கி வைப்பது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு சேதத்தை அதிகப்படுத்துவதாகும்." என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)