காணொளி: அமெரிக்கா மூழ்கடித்த இரான் போர்க் கப்பலை காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கும் உண்டா?

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா மூழ்கடித்த இரான் போர்க் கப்பலை காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கும் உண்டா?
காணொளி: அமெரிக்கா மூழ்கடித்த இரான் போர்க் கப்பலை காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கும் உண்டா?

இந்தியப் பெருங்கடலில் இரான் நாட்டின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்ததாக கடந்த 4ஆம் தேதி அமெரிக்கா தெரிவித்தது. பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் தாக்குதல் புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் தெற்கு இலங்கை நகரமான காலி அருகே நடந்தது.

இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் வந்திருந்தது என்றும், எந்த எச்சரிக்கையும் இன்றி தாக்கப்பட்டதாகவும் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி கூறுகிறார்,

இந்த நிலையில், இரான் நாட்டிலிருந்து இவ்வளவு தொலைவில் இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இந்தத் தாக்குதல் சட்டப்படி சரியானதா? இந்தப் போர் இந்தியாவிற்கு நெருக்கமாக வருகிறதா? இது தொடர்பாக இந்தியா என்ன செய்திருக்க முடியும் என பல கேள்விகள் எழுந்துள்ளன.

இரானியப் போர்க்கப்பலை மூழ்கடிக்க 'மார்க் 48' நீர்மூழ்கி ஏவுகணைகளை பயன்படுத்தியதாக அமெரிக்கா கூறியது. இதை நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் அல்லது விமானங்களிலிருந்தும் ஏவ முடியும்.

அமெரிக்கக் கடற்படையின் கூற்றுப்படி, அவர்களின் அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களிலும் இந்த மார்க் 48 நீர்மூழ்கி ஏவுகணைகள் உள்ளன.

சரி, இரான் நாட்டிலிருந்து இவ்வளவு தொலைவில் இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு வருவோம்.

மார்ச் 2 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமெரிக்க விமானப்படை ஜெனரல், "முழு பிராந்தியத்திலும், உலகம் முழுவதும் எங்களது நடவடிக்கைகள் தொடரும்" என கூறினார்.

இந்த வார்த்தைகளே அமெரிக்காவின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.

சரி, இந்த தாக்குதல் சட்டப்பூர்வமானதா?

பிபிசி சிங்கள சேவையின்படி, இந்தப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட இடம் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இருந்ததாக இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

கடல்சார் மற்றும் சர்வதேச வர்த்தக சட்ட நிபுணரான மூத்த வழக்கறிஞர் ராகுல் நரிச்சனியா பிபிசியிடம் பேசுகையில், "எந்தவொரு நாட்டின் கடற்கரையிலிருந்தும் 12 கடல் மைல் வரையிலான பகுதி பிராந்திய கடல் பகுதி என அழைக்கப்படும். இதன் பொருள் அங்கு நடக்கும் எந்தவொரு சம்பவமும் நிலத்தில் நடந்தது போலவே கருதப்படும், சட்ட விதிகளும் அவ்வாறே பொருந்தும். இதற்கு அப்பால், 200 கடல் மைல் வரையிலான பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலம். இங்கே அந்த நாட்டுக்கு எண்ணெய், எரிவாயு, மீன்பிடித்தல் போன்றவற்றில் சில உரிமைகள் கிடைக்கும். ஆனால் இந்தப் பகுதி பிராந்திய கடல் பகுதி போன்றது அல்ல" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இப்போது, இந்த சம்பவம் இலங்கையின் பகுதியில் நடந்திருந்தால், அந்தப் பிரச்னையை சர்வதேச அளவில் எழுப்ப இலங்கைக்கு முழு உரிமை உண்டு என்றார்.

இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரி ரியர் அட்மிரல் சுதீர் பிள்ளை பிபிசியிடம் பேசும் போது, "அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த மோதலைத் தொடங்கியது சட்டபூர்வமானதா அல்லது அரசியல் ரீதியாகச் சரியானதா என்பது தனித்த மற்றும் விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் போர் தொடங்கிய பிறகு, திறந்த கடலில் அமெரிக்காவின் எதிரி போர் கப்பல் இருந்தால் அது சட்டபூர்வமான ராணுவ இலக்காக கருதப்படும்'' என்றார்.

பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தவிர வளைகுடா நாடுகளையும் இரான் குறிவைத்ததிலிருந்து இந்தத் தாக்குதல்களின் தொடர்ச்சி காணப்படுவதாக பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் கூறினர்.

இலங்கை அருகே நடந்ததையும் அந்தச் சூழலிலேயே பார்க்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

சரி, இந்தியா இந்த விஷயத்தில் ஏதாவது செய்திருக்க முடியுமா?

இரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கையுடன் இணைந்து தானும் பல உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இந்தியக் கடற்படை மார்ச் 5ஆம் தேதி தெரிவித்தது.

அட்மிரல் சுதீர் பிள்ளை கருத்தின்படி, இந்தச் சூழலில் இந்தியா அந்தக் கப்பலைத் தாக்குதலிலிருந்து காக்க சட்டப்பூர்வமாக எதையும் செய்திருக்க முடியாது. ஏனெனில் அப்படிச் செய்திருந்தால் இந்தியாவே இந்த மோதலில் ஒரு தரப்பாகக் கருதப்பட்டிருக்கும்.

தொடர்ந்து விளக்கிய அவர், "அந்தக் கப்பல் இந்தியப் பிராந்திய கடல் எல்லைக்குள் அல்லது இந்தியத் துறைமுகத்தில் இருந்திருந்தால், இந்தியாவின் நடுநிலைத்தன்மை காரணமாக அதற்குப் பாதுகாப்பு கிடைத்திருக்கும், மேலும் எந்தவொரு தரப்பும் அங்குத் தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்காது.

ஆனால் கப்பல் இந்திய எல்லைக்குள்ளும் இல்லை, இந்திய துறைமுகத்திலும் இல்லை எனும் போது, கடற்படை போர் விதிகளின்படி போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் அதை ஒரு ராணுவ இலக்காகக் கருதலாம். இந்தியா அந்தக் கப்பலுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருந்தால், அது மோதலில் இந்தியா ஒரு பக்கம் சேருவதாகப் பார்க்கப்பட்டிருக்கும்'’ என்கிறார் அவர்.

பிபிசியிடம் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் நடந்த கடற்படை பயிற்சிக்குப் பிறகு, அந்தப் போர்க்கப்பலின் பாதுகாப்பு என்பது அந்த நாடு மற்றும் அந்தக் கப்பலின் சொந்தப் பொறுப்பே.

இந்த விவகாரத்தை பொருத்தவரை ராஜீய ரீதியாக இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கிறது மற்றும் இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு