You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரேசிலில் சங்கேத மொழி மூலம் 50 லட்சம் பேர் திரண்டது எப்படி?
பிரேசிலில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் கடந்த ஞாயிறன்று முன்னாள் அதிபர்ஜேர் போல்சனாரோ ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைந்ததைக் கண்டு உலகமே அதிர்ச்சியுற்றது.
சரியாக ஈராண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலைப் போல, பிரேசிலின் முககிய கட்டடங்களுக்குள் நுழைந்த அவர்கள், அதிபர் தேர்தல் முறைகேடு நடந்துள்ளது, ஜேர் போல்சனாரோவே உண்மையான வெற்றியாளர் என்பன போன்ற தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.
ஆனால், பிரேசில் பாதுகாப்புப் படை, சமூக வலைதள மதிப்பீட்டாளர்களின் கண்ணில் மண்ணைத் தூவி, இந்த மாபெரும் வன்முறைப் போராட்டம் சத்தமின்றி ஒருங்கிணைக்கப்பட்டது எப்படி?
உண்மை அறிய முயன்று கொண்டிருக்கிறோம்.
விருந்துக்கான அழைப்புகள்
அதிபர் தேர்தலில் போல்சனாரோவே உண்மையான வெற்றியாளர் என்று கூறி, இணையதளங்களில் அவரது ஆதரவாளர்கள் சதி கோட்பாடுகளை அண்மைக் காலத்தில் பரப்பி வருகின்றனர்.
பிரேசில் நாடாளுமன்ற தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் தீவிரமடைந்த இத்தகைய சொல்லாடல்கள், தொடர்ச்சியான மெல்லிய உருவகங்களுடன் மறைந்தபடி இருந்தன. பிரேசிலியன்களே 'செல்மா' விருந்தில் பங்கேற்க வாருங்கள் என்ற அழைப்பே அவற்றில் முதன்மையானது.
'செல்மா' என்ற சொல் காடு என்று பொருள்படும் போர்ச்சுகீசிய வார்த்தையான 'செல்வா' என்ற சொல்லில் இருந்து வருகிறது. பிரேசில் ராணுவத்தால் வாழ்த்தாகவும், போர் முழக்கமாகவும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.
வன்முறைக்கு 4 நாட்கள் முன்னதாக, டெலிகிராம் சமூக வலைதளத்தில் 'செல்மா' விருந்து குறித்த வீடியோ வைரலானது. அதில் விருந்துக்கான மூலப்பொருட்கள் குறித்து ஒருவர் விவரிக்கிறார். பிரேசிலியன் சர்க்கரையின் குறியீடான தொழிற்சங்கங்கள் மற்றும் 5 பெரிய மக்காச்சோளக் கதிர்கள் பங்கேற்கும் என்று அவர் கூறுகிறார்.
மக்காச்சோளம் என்பது மற்றொரு வார்த்தை பிரயோகம். 'மில்ஹோ' என்பது மக்காச்சோளத்தை குறிக்கும். அதேநேரத்தில், 'மில்ஹாவோ' என்பது மில்லியனை (10 லட்சம்) குறிக்கும். போராட்டத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதை இதன் பொருளாக கொள்ளலாம்.
தப்பி ஓடும் சமூக வலைதள மதிப்பீட்டாளர்கள்
பெரும்பாலான சமூக வலைதளங்கள் வன்முறைக்கான அழைப்பை தடை செய்வதுடன், உடனே அகற்றியும் விடுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, சமூக வலைதள மதிப்பீட்டாளர்களிடம் இருந்து தப்பிக்க இதுபோன்ற உருவகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். டிக்டோக் தளத்தில் நீக்கப்பட்ட ஒரு வீடியோவில் தோன்றும் பெண், தனது கணக்கு அகற்றப்படுவதை விரும்பாததால், டிக்டோக்கில் இனி அரசியலைப் பற்றி பேசவில்லை என்று கூறுகிறார். பின்னர் அவர் 'செல்மா'ஸ் விருந்து பற்றி பேசத் தொடங்குகிறார்.
சாவோ பாலோவில் செல்மாவின் உறவினர் 'டெல்மா' மற்றும் ரியோ டி ஜெனிரோவில்அவரது சகோதரி 'வெல்மா' என்பன போன்று ஒவ்வொரு இடத்திலும் விருந்து அழைப்புக்கு வெவ்வேறு பெயர்களை சூட்டி மக்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால், இந்த விருந்து அழைப்புகள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.
வார இறுதியில் #festadaselma போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலான முக்கிய சமூக ஊடக தளமான ட்விட்டர் தற்போது ஆய்வில் இருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க மூன்று அரசு கட்டடங்களை முற்றுகையிட மக்களுக்கு அழைப்பு விடுத்து இந்த ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மதிப்பீட்டாளர் பற்றாக்குறை
ட்விட்டர் நிறுவனத்தை இலோன் மஸ்க் கையகப்படுத்திய பிறகு, ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பிரேசிலில் தேர்தல் குறித்த தவறான தகவல் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தும் பணியில் இருநத மதிப்பீட்டாளர்களும் அவர்களில் அடக்கம். ட்விட்டரில் தீங்கு விளைவிக்கும் பதிவுகளை தொடர்ந்து அகற்றி வருவதாக அந்நிறுவனமும், மஸ்கும் மீண்டும் மீண்டும் கூறி வந்தனர்.
இணையத்தில் பரவும் தவறான தகவல்கள் ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதலாக உருப்பெறுவது இதுவே முதல் முறையல்ல. 2021-ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது, வன்முறையை தூண்டியதில் சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவல்கள் முக்கிய பங்கு வகித்ததை ட்விட்டர் நிறுவனத்தில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி ஒப்புக் கொண்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்