You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிட்லர் தயாரித்த நாஜி 'டைட்டானிக்' திரைப்படம் - ஹாலிவுட் படத்திற்கு பதிலடி கொடுத்ததா?
- எழுதியவர், ஃபெர்னாண்டோ ட்யூரெட்
- பதவி, பிபிசி வேர்ல்ட்
டைட்டானிக் கப்பல் மூழ்கிய அந்தத் திரைப்படக் காட்சியை மக்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த விபத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அந்தப் படம் 1997ல் வெளியானது. லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் நடித்த இப்படம் பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆனால், 80 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் நடந்த அந்தச் சம்பவம் ஜெர்மனியின் நாஜி அரசாங்கத்தையும் ஒரு பெரிய திரைப்படத்தையும் உருவாக்க தூண்டியது. நாஜிக்களின் அந்தப் படம் தயாரிக்கப்பட்டு விட்டாலும், அது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்காக மட்டுமே திரையிடப்பட்டது. இன்னொரு வியப்பூட்டும் தகவல் என்னவென்றால், படத்தில் காட்டப்பட்ட கப்பல், டைட்டானிக்கை விட மோசமான விபத்தைச் சந்தித்து மூழ்கியது. அனைத்து ஆடம்பர வசதிகளும் கொண்ட அந்தக் கப்பலின் பெயர், 'எஸ் எஸ் கேப் அர்கோனா’. 1942 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை இது 'தெற்கு அட்லாண்டிக் ராணி' என்று அழைக்கப்பட்டது. பால்டிக் கடலில் உள்ள ஜெர்மன் கடற்படைத் தளத்தில் அந்தக் கப்பல் துருப்பிடித்துக் கொண்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான், அந்த கப்பல் ஹிட்லரின் கடற்படையால் கடற்படை முகாம்களாக மாற்றப்பட்டது. ஆனால் அதே ஆண்டில், கேப் அர்கோனாவை தலைப்புச் செய்தியாக்கிய ஒரு நிகழ்வு நடந்தது. கடற்படைத் தளத்தில் சும்மா கிடந்த அந்தக் கப்பல் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமானது. தற்செயலாக, அதன் வடிவமும் தோற்றமும் 1912இல் கடலில் மூழ்கிய 'ஆர்எம்எஸ் டைட்டானிக்' கப்பலை ஒத்திருந்தது. அதே டைட்டானிக் சம்பவத்தை திரைப்படமாக எடுக்க ஹிட்லரின் அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
படத்துக்காகத் தண்ணீராய் செலவான பணம்
டைட்டானிக் விபத்து பற்றிய ஒரு திரைப்படம் ஏற்கெனவே 1912இல் தயாரிக்கப்பட்டது. அதே ஆண்டில், டைட்டானிக் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பனிப்பாறையில் மோதி தன் முதல் பயணத்திலேயே மூழ்கியது. அதனால் 30 வருடங்கள் கழித்து அந்த விபத்தை மீண்டும் திரைப்படமாக எடுப்பதை ஒரு நல்ல யோசனை என்று கூற முடியாது. ஆனால், சர்ச்சைக்குப் பெயர் போன ஹிட்லரின் அமைச்சர் ஜோசப் கோயபல்ஸுக்கு டைட்டானிக் விபத்து பற்றிய ஒரு கதை கிடைத்தது, அதில் விபத்தின் புதிய அம்சங்கள் இடம்பெற்றன. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் 'பேராசை'யால் இந்த வேதனையான விபத்து நடந்ததாக அந்தக் கதை சொல்கிறது. 'நாஜி டைட்டானிக்' புத்தகத்தை எழுதிய அமெரிக்க வரலாற்றாசிரியர் பேராசிரியர் ராபர்ட் வாட்சன் பிபிசியிடம் பேசும் போது, "கோயபல்ஸின் மேற்பார்வையின் கீழ், நாஜி அரசாங்கம் அதற்குள் நூற்றுக்கணக்கான பிரசார படங்களைத் தயாரித்தது. இந்த முறை அவர்கள் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினர். 1942 இல், இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனி பல முனைகளில் தோல்வியை எதிர்கொண்டது. பின்னர் கோயபல்ஸ் பிரசாரத்திற்காக எதையாவது பெரியதாகச் செய்ய நினைத்தார்," என்று விளக்கினார். 1942ஆம் ஆண்டு, காசாபிளாங்கா என்ற ஒரு ஹாலிவுட் படம் வந்தது. நாஜி எதிர்ப்பு கதையை அடிப்படையாகக் கொண்ட அந்தக் காதல் திரைப்படம் மிகவும் பிரபலமானது, அதைக் கண்டு ஹிட்லரின் அதிகாரிகள் கூட திகைத்துப் போனார்கள். இந்தப் படத்தின் வெற்றி அவரை ஒரு பெரிய பிரசார படத்தை எடுக்கத் தூண்டியது. கோயபல்ஸின் நோக்கம் டைட்டானிக் துயர சம்பவத்தை ஒரு பெரிய திரைப்படமாக்கி மேற்கத்திய நாடுகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுப்பதாகும். "நாஜி-எதிர்ப்பு 'காசாபிளாங்கா' படத்திற்குப் பதிலளிக்கும் வகையில் கோயபல்ஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள விரும்பினார்,” என பேராசிரியர் வாட்சன் தெரிவித்தார்.
இரண்டு கப்பல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்து, பேராசிரியர் வாட்சன் கூறும்போது, "'டைட்டானிக்' மற்றும் கேப் அர்கோனா ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சிம்னியின் வித்தியாசம் மட்டுமே இருக்கும். டைட்டானிக்கில் நான்கு புகைபோக்கிகள் இருந்தன, அதே நேரத்தில் கேப் அர்கோனாவில் மூன்று புகைபோக்கிகள் இருந்தன. மற்றபடி, இரண்டு கப்பல்களும் ஒரே மாதிரியானவை. ஆனால் கேப் அர்கோனா போலியான டைட்டானிக் போல பேசப்பட்டது. போர் முனையில் ஜெர்மனி பல நெருக்கடிகளைச் சந்தித்த காலம் அது. ஆனால் டைட்டானிக் படத்திற்காக கோயபல்ஸ் பெரும் தொகையை ஒதுக்கினார். பேராசிரியர் வாட்சன் தனது புத்தகத்தில், "அப்போது 40 லட்சம் (அன்றைய ஜெர்மன் நாணயத்தில்) பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இது இன்றைய மதிப்பில் 180 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரானது. அப்படிப் பார்த்தால், இது உலகின் அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றாகிறது." இந்த படத்தில் பணியாற்றுவதற்காக, நூற்றுக்கணக்கான ஜெர்மன் வீரர்கள் போர் முனையில் இருந்து மாற்றப்பட்டு படப்பிடிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அக்காலத்தின் பிரபல ஜெர்மன் நடிகர்களான 'சிபில் ஷ்மிட்' போன்றவர்களும் இப்படத்தில் நடித்தனர். இருப்பினும், படத்தயாரிப்பின் போது அனைத்து வகையான இடையூறுகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. படப்பிடிப்பில் பெண் நடிகர்களை ராணுவ வீரர்கள் சீண்டியதாகச் செய்திகள் வந்தன. படத்தின் பளபளப்பான செட்களைப் பார்த்து நேச நாட்டுப் படைகள் இங்கு வெடிகுண்டு வீசக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இது தவிர, வேறு சில மோசமான சம்பவங்களும் நடந்தன. உதாரணமாக, படத்தின் இயக்குநர் ஹெர்பர்ட் செல்பின் கைது செய்யப்பட்டார். படப்பிடிப்பின் போது நாஜி அதிகாரிகள் தலையிட்டதில் ஹெர்பர்ட் மகிழ்ச்சியடையவில்லை. இது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தபோது, அவர் கைது செய்யப்பட்டார். கோயபல்ஸ் தாமே அவரை விசாரித்தார். சில நாட்களுக்குப் பிறகு, ஹெர்பர்ட் சிறை அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மூலக் கதையில் மாற்றம்
பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே படம் எப்படியோ வெளிவந்துவிட்டது. ஆனால் கதை முற்றிலும் மாறி இருந்தது. படத்தின் மைய நிகழ்வான டைட்டானிக் கப்பல் மூழ்கியதை, கப்பலின் பிரிட்டிஷ் உரிமையாளர்களின் பேராசையின் விளைவாக நாஜிக்கள் சித்தரித்தனர். அசல் கதையில், அட்லாண்டிக்கின் பனிக்கட்டி பகுதியில் டைட்டானிக்கின் வேகத்தை குறைப்பது பற்றிப் பேசிய குழு உறுப்பினர் ஒரு ஜெர்மானியர். படத்தின் இறுதியில், "டைட்டானிக் விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்குக் காரணம், அதிகபட்ச லாபம் ஈட்டும் பிரிட்டிஷ் கொள்கை,” என்று ஒரு செய்தி வைக்கப்பட்டது. ஜெர்மன் வரலாற்றாசிரியர் அலெக்ஸ் வி. லூனென், "நாஜி பிரச்சார செய்திகளைக் கொண்ட இதுபோன்ற பல படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன" என்று விளக்குகிறார். "பிரசாரத்தில் அவர்கள் எவ்வளவு வெறித்தனமாக இருந்தார்கள் என்பதை நாஜிகளின் டைட்டானிக் படம் காட்டுகிறது. அதுவரை இப்படி மக்களைத் தங்கள் பக்கம் இழுத்துப் போரில் வெற்றி பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது இன்னும் சுவாரஸ்யமானது. " என அலெக்ஸ் கூறுகிறார். இப்படிச் சொன்ன அலெக்ஸ், அந்தப் படத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து காசு செலவழித்த கோயபல்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார். இதனால் ஜெர்மனியிலேயே படம் தடை செய்யப்பட்டது.
படத்தைப் பார்த்த நாஜி அதிகாரிகள், அதில் உள்ள கப்பல் மூழ்கும் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்ததால், அதைப் பார்த்ததும் ஏற்கனவே வான்வழித் தாக்குதலுக்குப் பயந்துபோன ஜெர்மன் மக்களிடையே பரபரப்பு ஏற்படும் என்று நினைத்தனர். அலெக்ஸ் மேலும் கூறுகையில், "இன்னும் ஒரு பிரச்சனையும் அந்த படத்தில் இருந்தது. டைட்டானிக்கின் குழு உறுப்பினர்களில் உள்ள ஜெர்மன் அதிகாரி தனது மேலதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் விதம், அதை ஒழுக்கக்கேடானதாகக் கருதும் விதம், இவற்றின் அடிப்படையில், நாஜி அதிகாரி தனது வீரர்களுக்கு அத்தகைய செய்தியைச் சென்று சேர்ப்பிக்க விரும்பவில்லை.” என்று தெரிவித்தார். இந்தப் படம் ஆரம்பத்தில் ஜெர்மனியின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே காட்டப்பட்டது என்று பேராசிரியர் வாட்சன் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாஜிக் காப்பகங்களில் இருந்து படத்தின் அச்சுகள் மீட்கப்பட்ட பிறகுதான் இது ஜெர்மனிக்குள் திரையிடப்பட்டது. பேராசிரியர் வாட்சன், "அரசியல் சார்பு கொண்டிருந்தாலும், தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் இந்தப் படம் மிகவும் நன்றாக இருக்கிறது. இதற்குச் சான்றாக 1958-ல் வெளியான பிரிட்டிஷ் திரைப்படமான 'ஏ நைட் டு ரிமெம்பர்' படத்தின் பல தொழில்நுட்பக் காட்சிகள், நாஜி டைட்டானிக்கிலிருந்து எடுக்கப்பட்டது." என விவரித்தார்.
நாஜி கப்பலின் உண்மையான சோகம்
படம் தோல்வி அடைந்த போதும் கேப் அர்கோனா என்ற கப்பல் அடுத்து வந்த நாட்களில் மேலும் பிரபலமடைந்தது. போரின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வரும் ரஷ்ய ராணுவத்திடம் இருந்து 25,000 ஜெர்மானிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை மீட்டு அழைத்து வரப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கப்பல், 1945 வாக்கில், ஆயிரக்கணக்கான கைதிகளின் 'வதை முகாமாக' மாறியது. நாஜி அதிகாரிகள் ஆயிரக்கணக்கான கைதிகளை மற்ற சித்திரவதை முகாம்களில் இருந்து கொண்டு வந்து இந்தக் கப்பலில் மறைத்து தங்கள் குற்றத்தை உலகின் கண்களிலிருந்து மறைக்க பயன்படுத்தினர். இரு தரப்பினரின் ஆவணங்களும், மே 3, 1945 அன்று, பிரிட்டிஷ் விமானப்படை கப்பலின் மீது குண்டுவீசியபோது, குறைந்தது ஐந்தாயிரம் பேர் அதில் இருந்தனர் என்பதைக் காட்டுவதாக பேராசிரியர் வாட்சன் கூறுகிறார்.
ஹிட்லரின் சிறப்புப் படைகளின் அதிகாரிகள் கேப் அர்கோனா மற்றும் அருகிலுள்ள பிற கப்பல்களில் மறைந்திருந்து கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக தப்பிச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில் குண்டுவீச்சு நடத்தப்பட்டது.
"அந்த ஐந்து ஆயிரம் பேரில், முந்நூறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். இந்தச் சம்பவம் போர் வரலாற்றில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் மிகவும் பயங்கரமானது." என்று பேராசிரியர் வாட்சன் விளக்குகிறார், இதே நோக்கத்திற்காக மேலும் இரண்டு கப்பல்களும் குண்டுவீசித் தாக்கப்பட்டன. இவை அனைத்தையும் சேர்த்து இறந்தவர்களின் எண்ணிக்கை 7000 ஆக உயர்ந்துள்ளது. கேப் அர்கோனா மீதான குண்டு வீச்சு, ஜெர்மனி சரணடைவதற்கு 4 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதன் பிறகு ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்தது. இப்படித்தான், கேப் அர்கோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையான டைட்டானிக் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக மாறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்