You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதா தமிழ்நாடு? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உண்மையா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்த ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை? ஒரு மாநிலம் எந்த அளவுக்குக் கடன் வாங்கலாம்?
தமிழ்நாட்டின் 2024-25-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 19, திங்கள், தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையை ஒட்டி தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய கடன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி தமிழ்நாட்டின் இந்த ஆண்டின் வருவாய் பற்றாக்குறை 49,278.73 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 % இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிதி ஆண்டில் மாநில அரசு 1,55,584.48 கோடி ரூபாயை கடனாக வாங்கும் என்றும், 49,638.82 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை திரும்பச் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த நிதியாண்டின் முடிவில் அதாவது 2025 மார்ச் 31-ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும்.
'கடனை அடைக்க 86 ஆண்டுகள் ஆகும்'
இந்த விவரங்கள் வெளியான பிறகு, தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய கடன்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தன.
இது தொடர்பாக பேசிய பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, "ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்து 8 லட்சம் கோடி ரூபாய் கடனாக மாற்றி வைத்திருக்கிறார்கள். மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தமிழகத்துக்கு இருக்கிறது. இந்தக் கடனை அடைக்கவே இன்னும் 86 ஆண்டுகள் ஆகும்," என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசும் இந்தக் கடன் அளவைச் சுட்டிக்காட்டி கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், "தமிழ்நாட்டில் 2021-2-2ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.4,56,660.99 கோடியாக இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2024-25-ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.3,76,700.81 கோடி கடன் வாங்கியிருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை எந்த அளவுக்கு இருக்கலாம் எந்த அளவுக்குக் கடன் வாங்கலாம் என்பதை இந்தியாவில் நிதி ஆணையம் நிர்ணயிக்கிறது. 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, 2021-22-இல் ஒரு மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% ஆகவும் 2022-23-இல் 3.5% ஆகவும் 2025-26இல் 3% ஆகவும் இருக்கலாம் என வரையறுத்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அதன் நிதிப் பற்றாக்குறை கடந்த ஆண்டில் 3.45% இருந்தது, இந்த ஆண்டு 3.44% குறைக்கப்பட்டிருப்பதாக இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடன் தொகையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28.9% குறைவாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. கடன் தொகையைப் பொறுத்தவரை, அது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.4% ஆக இருக்கிறது.
'கடன் வாங்கி வேறொரு கடனை அடைப்பது சிக்கலை ஏற்படுத்தும்'
"ஒரு மாநிலம் கடன் வாங்குவது பிரச்னையல்ல. அந்தக் கடன் எதற்காக செலவழிக்கப்படுகிறது என்பது முக்கியம். இந்த ஆண்டில் தமிழ்நாடு 1,55,584.48 கோடி ரூபாயை கடனாக வாங்கும் என்றும் 49,638.82 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"அப்படியானால், ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை திரும்பச் செலுத்துகிறோம். இது மிகச் சிக்கலான விஷயம். முதலீட்டிற்காக கடன் வாங்கினால் பரவாயில்லை. ஆனால், செலவுகளுக்காக கடன் வாங்கினால் அதற்கு முடிவே இருக்காது," என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ். நாராயண்.
தமிழ்நாட்டின் வருவாய் குறைந்திருப்பதும் கடன் அதிகரிப்பதால் அதற்கான வட்டி அதிகரித்து, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகரிப்பதும் கவலை அளிப்பதாகச் சொல்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் முதன்மை ஆலோசகர் டாக்டர் ஆர். கண்ணன்.
"வருவாய் குறைந்திருப்பதாகச் சொல்வது கவலை அளிக்கிறது. மற்றொரு பக்கம் கடன் அதிகரிக்க அதிகரிக்க 'Debt Service' நாம் திரும்பச் செலுத்தும் தவணைகள் அதிகரித்துக்கொண்டே போகும். இதனால், நாம் கடனை திருப்பி அளிக்கும் காலம் அதிகமாகும். இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
"தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்துக் கழகம் நிதி ரீதியில் மிக சிக்கலான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, 'tax to GDP' விகிதம் குறைவாக இருக்கிறது. அதனை அதிகரிக்க வேண்டும்," என்கிறார் கண்ணன்.
முதலீட்டுச் செலவுகளுக்குக் கடன் வாங்கினால் அதில் பிரச்சனை இல்லை. ஆனால், செலவுகளுக்காக வாங்கினால் பிரச்சனைதான் என்கிறார் தமிழக பொருளாதார நகர்வுகளை நீண்ட காலமாக கவனித்துவரும் பொருளாதார ஆலோசகரான பாலசுப்பிரமணியன்.
"ஆனால், தமிழக பொருளாதாரம் மிகவும் வலுவானது. மிகப் பெரியது. ஆகவே பெரிய சிக்கல் வராது என்றே கருதுகிறேன்," என்கிறார் பாலசுப்பிரமணியன்.
இந்தப் பிரச்னையைச் சமாளிக்க என்ன செய்வது?
"ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிட்டால், நம்முடைய வரி வருவாய் மிகக் குறைவாக இருக்கிறது. இதனைச் சரி செய்ய வேண்டும். அரசின் கவனம், அந்த திசையில் இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே இதிலிருந்து மீண்டுவிடலாம் எனக் கருதுகிறேன்," என்கிறார் எஸ். நாராயண்.
விவசாய உற்பத்தியிலும் சிறு, குறு தொழில்துறை உற்பத்தியிலும் கவனம் செலுத்துவது பலனளிக்கும் என்கிறார் டாக்டர் கண்ணன்.
"விவசாய உற்பத்தியை அதிகரிப்பது ஒரு புறமிருக்க, சிறப்பான சேமிப்பு வசதிகளைக் கட்டுவது முக்கியம். ஆகவே விளைபொருள்கள் வீணாகாது. விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தமிழ்நாட்டில் சேவைத் துறை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதற்கு இணையாக சிறு, குறு தொழில்துறையிலும் கவனம் செலுத்த வேண்டும்," என்கிறார் அவர்.
அரசின் கடன் என்பது அதன் பொருளாதாரத்தின் ஒரு பகுதி, தனி நபர்களின் கடனைப்போல இதனைக் கருதக்கூடாது என்கிறார் மாநில திட்டக் கமிஷனின் துணைத் தலைவரான ஜெ. ஜெயரஞ்சன்.
"மாநில அரசுக்கு நான்கு வழிகளில் வருவாய் வருகிறது. ஒன்று சொந்த வரி வருவாய், இரண்டாவது மத்திய அரசு அளிக்கும் வரிப் பகிர்வு, மூன்றாவது வரியல்லாத வருவாய், நான்காவது கடன். ஆகவே, மாநில அரசின் வருவாயில் எப்போதுமே கடன் என்பது ஒரு பகுதி.
"ஒரு அரசின் கடன் என்பது தனி நபர்களின் கடனைப் போல அல்ல. அரசு நிலையானது. அதன் பொருளாதாரத்தில் கடனும் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கடனை எந்த அளவுக்கு வாங்கலாம் என சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த அளவுக்குள்தான் மாநில அரசு கடன் வாங்கியிருக்கிறது" என்கிறார் அவர்.
மேலும், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்துகொண்டே வருவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"மத்திய அரசு மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கும் தொகை குறைந்துகொண்டே வருகிறது. தன் வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு 41% பகிர்ந்தளிப்பதாகச் சொல்கிறது மத்திய அரசு. ஆனால், மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 20% செஸ் என எடுத்துக்கொள்கிறார்கள். மீதமுள்ள தொகைதான் பகிரப்படுகிறது," என்கிறார் ஜெயரஞ்சன்.
தொடர்ந்து பேசிய அவர், "அடுத்ததாக, மத்திய அரசின் திட்டங்களில் முன்பு மத்திய அரசின் பங்களிப்பு 60 - 40 என இருந்தது. இப்போது அது 75- 25 என சுருங்கிவிட்டது. இதனால், மத்திய அரசுத் திட்டங்களின் பலனைப் பெற கூடுதல் நிதியை மாநில அரசு செலவிட வேண்டியிருக்கிறது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது மத்திய அரசும் மாநில அரசும் தலா 49% அளிக்கும் என்றும் மீதமுள்ள 2% விவசாயிகள் செலுத்தினால் போதும் என்றும் சொல்லப்பட்டது. இப்போது மத்திய அரசின் பங்களிப்பு 30% ஆகிவிட்டது. ஆகவே இந்தத் திட்டத்திற்கு முன்பு 500 கோடி ரூபாயை செலவழித்துக் கொண்டிருந்த மாநில அரசு, இப்போது 1,200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கிறது," என்றார் ஜெயரஞ்சன்
மேலும், "அதேபோல, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய தொகையை அளிக்காததால், மாநில அரசு கூடுதலாக 12,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. மாநில அரசின் கடன் எனப் பேசும்போது இந்த விஷயங்களை எல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும்," என்கிறார் ஜெயரஞ்சன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)