You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொல்லி மலை: மூட்டு வலிகளை போக்கும் முடவன் ஆட்டுக்கால் கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும்?
- எழுதியவர், சுரேஷ் அன்பழகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, பறந்து விரிந்த நிலப்பரப்பும், அடர்த்தியான காடுகளையும் கொண்டுள்ளது.
நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகள் செல்லும் மலைகள் பலவும் அதன் தன்மையை இழந்து காட்சி தருகின்றன. ஆனால், இன்றளவும் கொல்லிமலை தன் இயல்போடு காட்சி தருகிறது.
கொல்லிமலையில் சித்தர்களின் வாழ்விடமும், அவர்களைப் பற்றிய பேச்சுகளும், அவிழ்க்க முடியாத ஆச்சர்ய கதைகளும் இங்கு ஏராளம். அதே அளவில் இங்கு கொட்டிக் கிடக்கும் மூலிகை பொருட்களும் அவற்றின் மருத்துவ குணமும், ஆச்சர்ய தகவல்களும் ஏராளமாக இருக்கின்றன.
கொல்லிமலையை கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி பன்னெடுங்காலம் ஆட்சி செய்துள்ளார். கடல் மட்டத்தில் இருந்து இந்த மலை 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் காரவள்ளி அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை (HAIR PIN BEND) கடந்து கொல்லிமலைக்கு செல்லவேண்டும்.
கடல் மட்டத்தில் இருந்து குறைந்தது 1,000 முதல் அதிகபட்சமாக 1,400 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகப் பரந்துள்ளது. இந்த மலையின் மிக உயர்ந்த சிகரம் 4,663 அடி (1400 மீ.) கொண்டதாக இருக்கிறது.
சித்த மருத்துவ ஆர்வலர்களின் சொர்க்க பூமி
தமிழகம் முழுவதும் இருந்து மூலிகை பொருட்களுக்காக இன்றளவும் பறந்து விரிந்த பரப்பைக் கொண்ட கொல்லிமலையை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என ஆவல் கொண்டு வரும் சித்த மருத்துவ ஆர்வலர்கள் பலரும் உண்டு.
கொல்லிமலையில் எண்ணற்ற மூலிகைப் பொருட்கள், மூலிகை கிழங்குகள் காணப்படுகின்றன என்றாலும், முடவன் 'ஆட்டுக்கால் கிழங்கு' க்கு தனி இடம் இருக்கிறது.
முடவன் ஆட்டுக்கால் கிழங்கு எனும் மூலிகைக் கிழங்கின் மேல்புறத்தில் உள்ள தோலை நீக்கிவிட்டு, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, சூப் வைத்துக் குடிக்கின்றனர். இதைக் குடித்து வர கை, கால் மூட்டு வலி நீக்குவதாகப் பலர் கூறுகின்றனர்.
சூப் செய்யும் முறை
இதுகுறித்து முடவன் ஆட்டுக்கால் சூப் தயாரிப்பாளர்கள் பிபிசி தமிழிடம் பேசுகையில், கொல்லிமலை வனப் பகுதியில் பரவலாக முடவன் ஆட்டுக்கால் கிழங்கு கிடைக்கிறது என்றும், இது ஒரு வகையான மூலிகைக் கிழங்கு என்றும் தெரிவித்தனர்.
மேலும் ஆட்டுக்கால் ரோமம் போன்ற தோற்றம் இருப்பதாலும் அதன் சுவையும் அப்படியே இருப்பதால் இதை, `ஆட்டுக்கால் கிழங்கு' என அழைப்பதாகவும், இதில் சூப் வைத்துக் குடித்தால் மூட்டு வலி நீங்கும் என்பதன் காரணமாகவும் இது முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
சூப் தயாரிப்பு முறை குறித்து நம்மிடம் தொடர்ந்து பேசியபோது, "முடவன் ஆட்டுக்கால் கிழங்கின் மேல் தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் பயன்படுத்தலாம். இல்லையெனில் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து இடித்துப் பொடியாக செய்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்," என்றும் கூறினர்.
மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சூப் தயாரிக்கப்படுகிறது. இதில், தக்காளி மற்றும் புளி சேர்க்கப்படுவதில்லை.
கொல்லிமலை மக்கள் மற்றும் சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த முடவன் ஆட்டுக்கால் சூப்பைக் குடிக்கத் தவறுவதே இல்லை.
இதன் சுவை ஆட்டுக்கால் சூப் போலவே இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். சூப் குடிப்பதற்காகவே கொல்லிமலை நோக்கி வருவோரும் பலர் உண்டு.
அருவிக்கு ஏறி, இறங்கிச் சென்று குளித்துவிட்டு வருவோர், இந்த சூப்பைக் குடித்தால் புத்துணர்ச்சி அடைவதாகத் தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிழங்கை வனத்துறையின் அனுமதியோடு எடுத்து அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், அழிந்து வரும் இந்த மூலிகைக் கிழங்கை பாதுகாக்க வேண்டும் என்பதால் தற்போது இந்தக் கிழங்கை எடுக்க வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் இந்த முடவன் ஆட்டுக்கால் கிழங்கு பயிரிடப்படுகிறது.
ஒரு கப் சூப் ரூ.10க்கு விற்பனை
இதுகுறித்து கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் அருகே சுடச்சுட சூப் குடித்துக்கொண்டிருந்த பிரகாஷ் என்ற பயணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க அடிக்கடி நான் வருகிறேன். அப்படி வரும்போதெல்லாம் ரூ.10க்கு விற்பனையாகும் இந்த சூப்பைக் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளே," எனத் தெரிவித்தார்.
"எனது வேலை கடினமானது என்பதால் அவ்வப்போது ஏற்படும் கை, கால் மூட்டு வலிக்கு இது நல்ல மருந்து. இங்கு வரும்போது, ஒரே நாளில் 5, 6 முறைக்கு மேல் குடித்து விடுவேன்," என்றார்.
மேலும், "இங்கு வரும்போதே ஆட்டுக்கால் கிழங்கு பொடியை வாங்கிக் கொள்வேன். அதன் தயாரிப்பு முறையையும் கேட்டு தெரிந்துக்கொள்வேன். அதன்படி காலையில் வீட்டில் வைத்து குடித்துக்கொள்வேன். எனக்கும், எனது வயதான தாத்தா, பாட்டிக்கும் இது நல்ல பலனைக் தருகிறது," என்றார்.
இது குறித்து பிபிசி தமிழுக்காக நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் பூபதிராஜாவை தொடர்பு கொண்டு பேசினோம்.
"முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என அழைக்கப்படும் இந்தக் கிழங்கு தமிழக அளவில் பார்க்கும்போது கொல்லிமலையில் மட்டுமே இந்த அளவுக்குக் கிடைக்கிறது.
ஏற்காடு சேர்வராயன் மலையிலும் இந்தக் கிழங்கு கிடைக்கிறது. எனினும், கொல்லிமலையில்தான் அதிகம் கிடைக்கிறது," என்றார்.
மேலும், "இந்த மூலிகைக் கிழங்கை சூப் வைத்து குடிப்பதால் கை, கால் மூட்டு வலி, செரிமான உபாதைகள் போன்றவை குணமாகும்," என்றும் கூறினார்.
பாறை இடுக்கில் வளரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்த ஆட்டுக்கால் கிழங்கு
மேலும், "கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என்றழைக்கப்படும் இந்தக் கிழங்கு, மலைப்பகுதியில் விளையக்கூடிய பாலிபோடியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை புறணிச் செடி.
பெரிய மரங்களின் மேல் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. இந்தக் கிழங்கின் செடி மண்ணில் வளராது. பாறை இடுக்குகளிலும், மரங்களின் மீதும்தான் படர்ந்து வளரும்," என்றார் சித்த மருத்துவர் பூபதிராஜா.
தொடர்ந்து பேசிய அவர், "டிரைனேரியா குர்சிபோலியோ' என்ற தாவரவியல் பெயர் கொண்ட இச்செடியின் 'வேர்தான் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு'. இந்த மூலிகை கிழங்கு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரக்கூடிய தன்மை கொண்டது," என்றார்.
இதுகுறித்து வனத்துறையிடம் பேசுகையில், கொல்லிமலை வனத்தில் பரவலாகக் கிடைக்கும் இந்த மூலிகைக் கிழங்கை அழிவில் இருந்து காக்கும் பொருட்டு இதை யாரும் எடுக்க அனுமதி இல்லை என்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்