காணொளி: அமேசானும் அதன் மழைக்காடுகளும் உலக நாடுகளுக்கு ஏன் முக்கியம்?
அமேசான்... கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் உலகின் மிகப்பெரிய காடு. ஆனால் இப்போது அதுவே கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் நிலையில் உள்ளது. அமேசானில் என்ன நடக்கிறது? அங்கு நடப்பது ஏன் உலகிற்கே அச்சுறுத்தலானது? சுருக்கமாகப் பார்க்கலாம்.
"காலநிலை மாநாடு"
வடக்கு பிரேசிலின் பெலெம் நகரில் ஐநா காலநிலை மாநாடு தொடங்கியுள்ளது. பாரிஸ் மாநாட்டிற்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கிலும் இருந்து நாடுகள் ஒன்று கூடியுள்ளன.
புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தும் நோக்கமாகக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் பாரிஸில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை, உமிழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பல தசாப்தங்களாக நடந்துவரும் காடழிப்பும் சமீபத்திய காலநிலை விளைவுகளும் அமேசானின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
அமேசானின் முக்கியத்துவம்
அமேசான் காடுகளில் 60% பிரேசிலில் உள்ளது. உலகின் பல்லுயிர் பன்முகத்தன்மை மிகுந்த பகுதியாக திகழும் அமேசானில் உலகின் பிற பகுதிகளில் இல்லாத பல உயிரினங்கள் உள்ளன, நூற்றுக்கணக்கான பழங்குடி சமூகங்கள் இங்கு வாழ்கின்றன.
அமேசான் உலகின் மிகப்பெரிய நதி. இது 1,100-க்கும் மேற்பட்ட துணை நதிகளைக் கொண்டது, பூமியில் நன்னீருக்கான மிகப்பெரிய ஆதாரமாக திகழ்கிறது.
ஆனால் இப்போது, காடழிப்பு காரணமாக அமேசான் உறிஞ்சுவதை விட அதிகமான கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அமேசானில் என்ன நடக்கிறது?
வெப்பநிலை உயர்வும் கடுமையான வறட்சியும் அமேசானின் இயற்கை சமநிலையை சீர்குலைத்துவிட்டன. பொதுவாக ஈரப்பதம் நிறைந்த இந்தக் காடு வறண்டு, தீ விபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது.
"வறட்சி மற்றும் தீ விபத்துக்கள் அமேசானின் பல பகுதிகளில் சீரழிவை ஏற்படுத்தியுள்ளதாக" அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் கார்பன் பிடிப்பு இணைப் பேராசிரியரான பாலோ பிராண்டோ கூறுகிறார்.
"'பறக்கும் நதிகள்' மீதான தாக்கம்"
அமேசானுக்கே தனித்த வானிலை அமைப்பு உள்ளது. அதன் காடுகள் அட்லாண்டிக் கடலிலிருந்து வரும் ஈரப்பதத்தை கடத்தி, 'பறக்கும் நதிகள்' எனப்படும் Flying Rivers-ஐ உருவாக்குகின்றன.
'பறக்கும் நதிகள்' என அழைக்கப்படும் வளிமண்டல நதிகள் என்பவை, பட்டை வடிவிலான கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும் (ribbons of water vapour). கடலில் வெப்பம் அதிகரித்து, கடல் நீர் ஆவியாகும்போது நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை.
அட்லாண்டிக் கடலின் ஈரப்பதத்தில் இருந்து உருவாகும் பறக்கும் நதிகள் முதலில் கிழக்கு அமேசானில் மழையைப் பொழிகின்றன; பிறகு அந்த நீர் ஆவியாகி மேற்குத் திசையில் சென்று மீண்டும் மழையாக பொழிகிறது. ஆனால் இப்போது அந்த சமநிலை சீர்குலைந்துவிட்டது.
திருப்புமுனை
முன்பு காட்டுத் தீயை தாங்கும் திறன் கொண்டிருந்த மழைக்காடு, இப்போது அந்த திறனை இழந்து வருகிறது. வறண்டு வரும் பகுதிகள் இனி மீண்டு வர முடியாத நிலையை அடைந்துள்ளன என்றும் அவை நிரந்தரமாக அழிந்துவிடும் ஆபத்தில் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
"நதிகள் மீதான தாக்கம்"
ஈரப்பதச் சுழற்சி குறைந்ததால், அமேசான் நதியிலும் அதன் துணைநதிகளிலும் நீர் மட்டம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் நீர் வாழ் உயிரினங்களின் வாழ்வும் மனித வாழ்வும் பாதிக்கப்படுகின்றன.
சுரங்கத் தொழில்
இதற்குமேல், சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் அமேசானுக்கு புதிய ஆபத்தாக மாறியுள்ளன. சுரங்கத் தொழிலாளர்களுக்கும் ஆயுதக் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலைப்பின்னல் உருவாகியுள்ளது.
அமேசான் எட்டு நாடுகளில் பரவியுள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சட்டங்கள் இருப்பதால், எல்லைத் தாண்டி நடைபெறும் குற்றங்களை கையாள்வது மிகவும் கடினமாகியுள்ளது.
தொலைதூர இடங்கள் மீதான தாக்கம்
அமேசான், உலகின் கார்பன் சமநிலைக்கே முக்கியம். Monitoring of the Andes Amazon Programme 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி, 2022-ஆம் ஆண்டுவரை அமேசானின் நிலத்தடியிலும் நிலத்தின் மேற்பரப்பிலும் சுமார் 71.5 பில்லியன் மெட்ரிக் டன் கார்பன் சேமிக்கப்பட்டது.
ஆனால் இப்போது, காடழிப்பு காரணமாக அது கார்பனை உறிஞ்சுவதற்குப் பதிலாக அதையே வெளியிடத் தொடங்கியுள்ளது.
அமேசான் அழிந்துவிட்டால், அது காலநிலை நெருக்கடியை எதிர்க்கும் போரில் உலகம் தோல்வியடைந்ததற்கு ஒப்பாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



