குரங்கால் இலங்கை முழுவதும் மின்சாரம் தடைபட்டதா? - இன்றைய முக்கிய செய்திகள்

தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக 10/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் நேற்று (பிப்ரவரி 9) முற்பகல் 11.30 மணியளவில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பிலுள்ள தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாகவே இந்த மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக ஆரம்பத்தில் இலங்கை மின்சாரசபை அறிவித்தது. எவ்வாறிருப்பினும் பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்குகள் மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியதாகவும், இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சகம் பின்னர் இந்த நிலைமையை 'பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை' என்று அறிவித்த போதிலும், அமைச்சரின் கூற்றை உறுதிப்படுத்தவில்லை.

நிலைமையை சரி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் மின் விநியோகத்தை மீண்டும் வழங்க குழுக்கள் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. அதற்கமைய சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் சில முக்கிய இடங்களில் மாத்திரம் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.

அதனையடுத்து சுமார் மாலை 3 - 4 மணிக்கிடையில் நாடு முழுவதும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

பாணந்துரை மின் நிலையத்துக்குள் குரங்குகள் நுழைந்ததால் இவ்வாறு நாடளாவிய ரீதியில் மின் விநியோகத்தடை ஏற்பட்டதாக மின் சக்தி அமைச்சகம் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

'சம்பவத்தை விட ஊடகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிக்கையை முதலில் வெளியிடுங்கள். அடுத்து என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும். பின் அமைதியாக அறிக்கையை மாற்றுங்கள்.' என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது

எல்லை தாண்டியதாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 500 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஜான்போஸ், சுதன் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், வடக்கு மன்னார் கடல் பகுதியில் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், படகுகளில் இருந்த ஜான் போஸ், அந்தோணி, நிலாகரன், நிகிதன், சேசு பூங்காவனம், சந்தியா, கார்லோஸ், நிஷாந்த், டூவிஸ்டன், அய்யாவு, அந்தோணி டிமக், அருளானந்தம், ஜெலஸ்டின், ஆரோன் ஆகிய 14 மீனவர்களையும் கைது செய்து, இரணை தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் நேற்று காலை ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கிளிநொச்சி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சத்தீஸ்கரில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை - என்ன நடந்தது?

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கையில் (பிப்ரவரி 9), 11 பெண்கள் உட்பட 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர் என்றும், 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என்றும் தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சத்தீஸ்கர் காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ், "மகாராஷ்டிர எல்லையில் அமைந்துள்ள பிஜாப்பூர் மாவட்டத்தின் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருந்தனர். அவர்களை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் இதுவரை 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 மாதங்களில் மாவோயிஸ்ட்கள் மீது நடத்தப்பட்ட 3-வது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்." என்று காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாக தினமணி செய்தி தெரிவிக்கிறது.

இதுகுறித்து பேசிய சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், "பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படி சத்தீஸ்கரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை ஒழிக்க உறுதி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பெண் நடத்​துநர் பணிக்கான உயரம் குறைப்பு

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில், உயரம் குறைக்கப்பட்டுள்ளது என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில், "அரசு பேருந்து நடத்துநருக்கான தகுதிகள் கடந்த 1998ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. இந்நிலையில், விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து இதர போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் குறைந்தபட்ச உயரம் 150 செமீ என நிர்ணயிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறைத் தலைவர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதை கவனமாக பரிசீலித்த அரசு, ஆண் நடத்துநருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செமீ, பெண் நடத்துநருக்கான உயரம் 150 செமீ, இரு பாலினத்தவருக்கும் குறைந்தபட்ச எடை 45 கிலோ என பொதுசேவை விதிகளில் வரையறுக்கிறது." என கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தொழிற்சங்கத்தினர், "பெண் நடத்துநருக்கான தகுதியில் உயரத்தை குறைத்திருப்பதன் மூலம் கருணை அடிப்படையில் ஏராளமான பெண்களுக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்ததாகவும் இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி கூறுகிறது.

பெண்ணை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது

சென்னையில் பெண்ணுடன் பழகி, ஏமாற்றியதுடன் காணொளியை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய புகாரில் பாஜக இளைஞரணி செயலாளரை காவல்துறை கைது செய்துள்ளது என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம், திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் (வயது 24). இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இவர், 22 வயது இளம்பெண் ஒருவரை 2018ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். அவரை முறைப்படி திருமணம் செய்து கொள்வதாக கூறிய லியாஸ் தமிழரசன், அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லியாஸ் தமிழரசன், அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதை காணொளியாக பதிவு செய்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இதை அவர் பலமுறை செய்துள்ளார் என்றும், அந்த பெண்ணிடம் இருந்து சிறுக, சிறுக பணமாக சுமார் ரூ.20 லட்சமும், நகையாக சுமார் 20 பவுனும் பெற்றுள்ளார். அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லியாஸ் தமிழரசனிடம் கேட்டபோது, அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததுடன், தான் எடுத்த காணொளியை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்.

இதுபற்றி அந்த பெண், சேலையூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லியாஸ் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் இதுபோல பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.

அவரது செல்போனை ஆய்வு செய்த போது, அது தொடர்பான பல காணொளிகள் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரால் பாதிக்கப்பட்ட பிற பெண்களும் விரைவில் முன்வந்து புகார் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தி கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)