காணொளி: ரஷ்ய கொடி ஏந்திய கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
வட அட்லாண்டிக்கில் வெனிசுவேலா எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய ரஷ்ய கொடி ஏந்திய கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல், அமெரிக்க தடைகளை மீறி இரான் எண்ணெயை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த கப்பல் வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயை எடுத்துச் சென்றது.
அமெரிக்கா இந்த கப்பலை கைப்பற்றும்போது அதில் எண்ணெய் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கரீபியன் கடலில் மற்றொரு எண்ணெய் கப்பலும் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கேமரூன் நாட்டின் கொடியை பறக்கவிட்டு எண்ணெயை ஏற்றிச் சென்ற இரண்டாவது கப்பல் கரீபியன் கடலில் பிடிக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவில் உள்ள துறைமுகத்தை நோக்கி அந்தக் கப்பல் எடுத்துச் செல்லப்படுகிறது.
ரஷ்யா கூறியது என்ன?
ரஷ்ய கொடியை ஏந்தி வந்த கப்பலின் பெயர் மரினேரா. இந்த கப்பலில் உள்ள ரஷ்ய குடிமக்களை நியாயமாகவும் மனிதாபிமான முறையிலும் அமெரிக்கா நடத்த வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிபிசி மானிடரிங்கின்படி, அவர்கள் விரைவாக ரஷ்யாவிற்கு திரும்புவதை அமெரிக்கா தடுக்கக்கூடாது என ரஷ்ய வெளியுறவு அமைச்சம் தெரிவித்துள்ளது.
வெனிசுவேலா கடற்கரை அருகே அந்தக் கப்பலை இடைமறிப்பதற்கு முன்பு பல வாரங்களாக அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு படை பின் தொடர்ந்துள்ளது. அந்த கப்பல் தனது பெயரை மாற்றிக் கொண்டு ரஷ்ய கொடியை பறக்கவிட்டதாகக் கூறப்படுகிறது.
கப்பலை மீட்பதற்காக உதவிகள் ரஷ்யாவிலிருந்து வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் அதற்கு முன்பாக அந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது.
தனது கொடியின் கீழ் இயங்கி வந்த கப்பல் பிடிக்கப்பட்டதற்கு ரஷ்யா வலுவான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மரினேரா கப்பல் தற்காலிகமாக தங்களின் கொடியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாக ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளின் எல்லைக்குள் இருக்கும் முறையாக பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மீது படைகளைப் பயன்படுத்த எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை எனவும் ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
பிபிசி மானிடரிங்கிங் ரஷ்ய பிரிவு ஆசிரியர் விடாலி ஷெவ்சென்கோவின் கூற்றுப்படி, அமெரிக்காவை கோபப்படுத்துவது அல்லது ரஷ்ய கொடி ஏந்திய கப்பலை பாதுகாக்காக ரஷ்யா தீர்மானமாக உள்ளது என்கிற பிம்பம் உருவாவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இந்தச் சம்பவம் தொடர்பான ரஷ்யாவின் கருத்துக்கள் வேண்டுமென்றே மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது.
ரஷ்ய நீர்மூழ்கி அனுப்பப்பட்டதா?
"நேற்று அதிகாரப்பூர்வ செய்தி முகமையாக டிஏஎஸ்எஸ், 'அசாத்தியமான சூழ்நிலையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக' வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கப்பலை 'நம்முடைய கப்பல்' எனவும் டிஏஎஸ்எஸ் குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்தக் கருத்துக்கள் எதுவுமே வெளியுறவு அமைச்சகத்தின் சமூக ஊடக கணக்குகளிலோ அல்லது அமைச்சகத்தின் இணையதளத்திலோ வெளியிடப்படவில்லை." என்றும் ஷெவ்ன்சென்கோ தெரிவித்தார்.
கப்பல் கைப்பற்றப்பட்ட பிறகு முதலில் சூழ்நிலை அமைதியாக இருந்ததாகக் கூறும் ஷெவ்சென்கோ தற்போது அது சிறிது மாறியுள்ளதாக தெரிவித்தார்.
கப்பலை மீட்க ரஷ்யா நீர்முழ்கி கப்பல்களை அனுப்பியது தொடர்பான செய்தி பற்றி ரஷ்ய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் ரேபார் என்கிற இணையதளம் கப்பல் கைப்பற்றப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு நீர்மூழ்கிக் கப்பல் அங்கு வந்ததாகத் தெரிவிக்கிறது.
பிரிட்டன் உதவி
வட அட்லாண்டிக் கடலில் ரஷ்ய கொடி ஏந்திய கப்பலை பிடிப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளித்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் ராயல் ஏர் போர்ஸின் விமானங்களும் ஈடுபட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் பாதுகாப்பு துறை செயலாளர் ஜான் ஹேலி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யாவை நோக்கிச் சென்ற கப்பலை வெற்றிகரமாக இடைமறிப்பதில் அமெரிக்காவிற்கு உதவி பிரிட்டன் பாதுகாப்பு படைகள் தங்களின் திறன்களை காண்பித்தன. தடைகளை மீறுபவர்கள் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



