You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் டிரம்ப் கட்டுப்பாடே இல்லாமல் முழு சுதந்திரத்துடன் செயல்பட வழிவகுக்குமா?
- எழுதியவர், ஆண்டனி ஸர்ச்சர்
- பதவி, வட அமெரிக்கா செய்தியாளர்
டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபர் ஆகியுள்ளார். டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய எட்டு ஆண்டுகள் கழித்து, அதேபோன்று வெள்ளை மாளிகையில் இருந்து அவர் ஜோ பைடனால் வெளியேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியில் அமர உள்ளார்.
"இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான தீர்ப்பு" வழங்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
"(இந்த ஆட்சிக் காலம்) உண்மையிலேயே அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்," என்று ஃப்ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச் நகரில் இரவில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு நடுவே உறுதியளித்தார்.
இதுவரை இல்லாத வலுவான அரசியல் இயக்கம்
டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல் கடந்த 2016இல் தொடங்கி, 2020இல் டிரம்பின் தோல்விக்குப் பின்னர் கைவிடப்பட்டதாககக் கருதப்பட்ட பழமைவாத ஜனரஞ்சகவாதத்தை நோக்கி உறுதியாக இடம்பெயர்ந்துள்ளது.
இதன்மூலம் அவருடைய அரசியல் இயக்கம், முன்பு இருந்ததைவிட இன்னும் வலுவாக மீண்டும் திரும்பியுள்ளது.
தன்னுடைய புதிய ஆட்சி நிர்வாகத்தைக் கட்டமைக்கவும் புதிய பொற்காலத்தை உருவாக்குவதற்காக அவர் உறுதியளித்த கொள்கைகளைச் செயல்படுத்துவதற்குமான வாய்ப்பு இப்போது டிரம்புக்கு உள்ளது.
ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் நான்கு ஆண்டுகளாக இருந்து, இப்போது மீண்டும் குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள செனட், டிரம்பின் ஆட்சி அதிகாரத்தில் இணையும்.
இது, செனட்டின் ஒப்புதல் தேவைப்படும் அமைச்சரவை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நியமனங்கள் போன்ற அரசியல் நியமனங்களை மேற்கொள்வதை எளிதாக்கும்.
பிரதிநிதிகள் அவையின் கட்டுப்பாட்டை குடியரசுக் கட்சியினர் தக்க வைத்துள்ளனரா என்பதைத் தீர்மானிக்க இன்னும் பல நாட்கள் ஆகும். ஆனால், புதன்கிழமை அதிகாலையில், பிரதிநிதிகள் அவையையும் தனது கட்சி வெல்லும் என்று டிரம்ப் கணித்தார்.
மூத்த அரசுப் பணியாளர்களை அரசியல் நியமனங்களாக மாற்றுதல், கூட்டாட்சி அதிகாரத்துவத்தை மறுசீரமைப்பதற்கான உறுதியான திட்டத்தை உள்ளடக்கிய டிரம்பின் திட்டத்தைச் செயல்படுத்த குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றம் தேவை.
இதற்காக, பரந்து விரிந்து கிடக்கும் கூட்டாட்சி அரசாங்கத்தின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தயாராக இருக்கும் ஆயிரக்கணக்கான விசுவாசிகளை அவரது ஆதரவாளர்கள் பரிசோதித்துள்ளனர்.
கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க், தடுப்பூசிகள் மீது நம்பிக்கையற்ற ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், ஜனநாயக கட்சியில் இருந்து குடியரசுக் கட்சிக்கு மாறிய துல்சி கப்பார்ட், தொழில்நுட்ப தொழில்முனைவோர் விவேக் ராமசாமி எனப் பலரும், இந்த வழக்கத்திற்கு மாறான தேர்தல் கூட்டணியில் புதிய அதிபருடன் அதிகார உயர்நிலையில் இணைந்துள்ளனர்.
உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியைப் பாதுகாக்கும் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படும், புதிய வரி விலக்குகள் மற்றும் கடன்கள் செயல்படுத்தப்படும் எனவும் டிரம்ப் உறுதி பூண்டிருந்தார். மேலும், அமெரிக்காவில் சட்டபூர்வ ஆவணங்களின்றிக் குடியேறிய ஏராளமானோரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, யுக்ரேன் மற்றும் காஸாவில் நடைபெற்று வரும் போர்களை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், மற்ற எல்லாவற்றையும்விட அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியிருந்தார். ஜனவரி மாதம் அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த சர்வதேச நெருக்கடிகளைத் தீர்க்கும் பொறுப்பு அவருடையதாகும்.
இந்தக் கொள்கைகள் பெரும் பொருளாதார மற்றும் சமூக இடையூறுகளை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கமலா ஹாரிஸ் மற்றும் ஜனநாயக கட்சியினரும் டிரம்பின் முந்தைய ஆட்சியிலிருந்த வெள்ளை மாளிகை முன்னாள் அதிகாரிகள் சிலரும் எச்சரித்துள்ளனர். மேலும், அவருடைய இரண்டாவது ஆட்சி தடையற்றதாகவும் அரசியல் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் இருக்கும் என்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபராகத் தன்னுடைய இரண்டாவது ஆட்சிக் காலம், "சில நேரங்களில், குறிப்பாக தொடக்க காலத்தில் விரும்பத்தகாததாக (nasty) இருக்கும்," எனக் கூறியிருந்த டிரம்ப், ஆனால் அதன் முடிவுகள் சிறந்ததாக இருக்கும் என்று உறுதியளித்தார்.
வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான நான்கு ஆண்டுகள்
அமெரிக்க நாடாளுமன்றம் குடியரசுக் கட்சியின் முழு கட்டுப்பாட்டில் இருந்தால், ஜனநாயக கட்சி ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வரிக் கொள்கை, அரசின் செலவினங்கள், வணிகம் மற்றும் குடியேற்றம் போன்ற பல விவகாரங்களில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கும் பழமைவாத சட்டங்களை இயற்றவும் புதிய அதிபருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனால், அமெரிக்க அரசில் பெரும் தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியும்.
டிரம்பின் இந்த வெற்றி, ஜனவரி 6, 2020 அன்று நடைபெற்ற அரசியல் அழிவுக்குப் பின், அவருடைய புகழ் சிதைந்த நிலையில், அதிபர் பதவியில் இருந்து வெளியேறிய ஒருவர் மீண்டும் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிப்பதாக உள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து ஜனநாயக கட்சியினரும் குடியரசுக் கட்சியினர் சிலரும்கூட டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், நான்கு ஆண்டுகள் பயணத்திற்குப் பின், டிரம்ப் அமெரிக்காவின் அதிகார உச்சத்திற்குத் திரும்பியுள்ளார்.
(ஜனவரி 6, 2020 அன்று பைடனின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் முறையாகச் சான்றளிக்க வேண்டிய நாளில் ஆதரவாளர்களை நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒன்றிணைய வலியுறுத்தினார் டிரம்ப். அந்தப் பேரணி ஒரு கலவரமாக மாறியது.)
இந்தப் பயணத்தில் அவர் மீது கூட்டாட்சி மற்றும் மாகாண நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது. பல்வேறு வழக்குகளில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு ஒன்றில் டிரம்புக்கு சம்பந்தம் இருப்பதாக சிவில் நீதிமன்றம் கூறியது. மற்றொரு நீதிமன்றம், அவருடைய வணிக சாம்ராஜ்யத்திற்குப் பெரும் அபராதம் விதித்தது.
இந்த வழக்குகளையெல்லாம் புறக்கணித்து, குடியரசுக் கட்சியின் வேட்பு மனுவை நோக்கி அவர் தொடர்ந்து பயணித்தார்.
சில நேரங்களில் அவருடைய பொதுக்கூட்ட பேச்சுகள் கவனம் இன்றியும், கடுமையானதாகவும் இருந்தன. ஆனால் அறிவார்ந்த மற்றும் அரசியலில் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர்.
இந்தத் தேர்தலில் அதிக கவனம் ஈர்த்த இரு முக்கியப் பிரச்னைகளான, குடியேற்றம் மற்றும் பொருளாதாரத்தில், அமெரிக்கர்கள் டிரம்பை நம்பியதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அவருடைய பிரசாரங்களில் இந்தப் பிரச்னைகளைத் தொடர்ச்சியாகப் பேசி வந்தார்.
அமெரிக்காவிலும் மற்ற ஜனநாயக நாடுகளிலும் தேர்தல் சூழ்நிலை அரசுக்கு எதிரான ஒன்றாக இருந்த நிலையில், பெரும் பிரச்னைகளில் சரியான திசையில் இருப்பது முக்கியமானதாக இருந்தது.
பல வகைகளில், டொனால்ட் டிரம்ப் 2020இல் இருந்து தன்னை மேம்படுத்தியுள்ளார், சில நேரங்களில் வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளார். டிரம்ப் மீது விசுவாசத்துடன் இருக்கும் கிராமப்புற வாக்காளர்களை அவருடைய பிரசாரம் வெற்றிகரமாக ஈர்த்ததன் மூலம், நகர்ப்புறங்களில் ஜனநாயக கட்சியினரின் வெற்றி வாய்ப்பு குறைந்தது.
ஜனநாயக கட்சி வேட்பாளராக பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டபோது, ஆரம்பத்தில் அதை எப்படிக் கையாள்வது என்பதில் நிச்சயமற்ற நிலையில் இருந்தது போன்று டிரம்ப் குழு தோன்றியது. இந்நிலையில், டிரம்ப் தனது வழியைக் கண்டுபிடித்து, அரசுக்கு எதிரான அலையின் மூலம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார்.
இப்போது அவர் ஆள்வதற்கு நான்கு ஆண்டுகள் உள்ளன. இம்முறை இன்னும் அதிகமாக மேம்பட்ட அரசியல் கட்டமைப்பு அவருக்குப் பின்னே உள்ள நிலையில், பிரசாரத்தில் கூறிய வாக்குறுதிகளைச் செயல்படுத்த ஆர்வமாக உள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)