கனடா: இந்து கோவிலுக்கு முன்னால் நடந்த வன்முறைப் போராட்டம், ஜஸ்டின் ட்ரூடோ கூறியது என்ன?

கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் இருக்கும் இந்து சபா கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை ‘சகிக்க முடியாதது’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் அவர் வெளியிட்ட பதிவில், "பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை சகிக்க முடியாதது. அனைத்து கனடா மக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான புலனாய்விலும் சமூகத்தின் பாதுகாப்பிலும் விழிப்புடன் செயல்பட்ட பீல் பிராந்திய காவல்துறைக்கு (Peel Regional Police) எனது பாராட்டுக்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) பிற்பகல் இந்து சபா கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை போராட்டத்தைக் கண்டித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், கிட்டத்தட்ட அனைத்து கனடா அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிராம்ப்டனில் என்ன நடந்தது?

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது, அதில் சிலர் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் காணப்படுகிறார்கள். அவர்கள் வேறு சிலரைத் தாக்குகிறார்கள்.

இந்தக் காணொளியை பிபிசி உறுதிப்படுத்தவில்லை. ஆனால், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா, "கோயில் வளாகத்திற்குள் நுழைந்த இந்துக்களைக் குறிவைத்து காலிஸ்தான் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் இது," என்று கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா, இந்துக் கோயில் மீதான தாக்குதல் வீடியோவைப் பகிர்ந்து, "கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை மீறியுள்ளனர். பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயில் வளாகத்தில் இந்து-கனடிய பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் எவ்வளவு மோசமானவர்களாக மாறியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.

"காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடாவின் அரசியல் அமைப்பில் மட்டுமல்லாது, எங்கள் சட்ட அமலாக்க நிறுவனங்களிலும் திறம்பட ஊடுருவியுள்ளனர் என்ற அறிக்கைகளில் ஓரளவு உண்மை இருப்பதாக நான் நம்பத் துவங்கியுள்ளேன்," என்று சந்திரா கூறியுள்ளார்.

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராவின் கூற்றுப்படி, "கனடாவில் 'கருத்துச் சுதந்திரம்' என்பதன் கீழ் காலிஸ்தான் தீவிரவாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை,” என்று அவர் கூறியிருக்கிறார்

காவல்துறை கூறுவது என்ன?

“இந்து சபா ஆலயத்திற்கு வெளியே நடந்த போராட்டம் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம், எனவே சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கோயில் முன்பு காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது,” என இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பீல் பிராந்திய காவல்துறை பதிவிட்டுள்ளது.

வன்முறையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பின்னர், காவல்துறைத் தலைவர் நிஷான் துரைபா, "ஒரு போராட்டத்தை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் முன்னெடுப்பதற்கான அனைவரின் உரிமையையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், வன்முறை மற்றும் குற்றச் செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

“இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை தேடிப் பிடித்துக் கைது செய்வோம். அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும்," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று சிபிசி செய்திகளிடம் காவல்துறையினர் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் வைரலான வன்முறை வீடியோ குறித்து காவல்துறை விரிவான தகவல்களை வழங்கவில்லை.

என்ன நடந்தது, முறையான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் காவல்துறையினர் இன்னும் கூறவில்லை.

அரசியல் கட்சிகள் கண்டனம்

கனடாவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் (என்.டி.பி) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜக்மீத் சிங், இந்து சபா கோவிலுக்கு முன்னால் நடந்த வன்முறையைக் கண்டித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், "கனடாவின் அனைத்து மக்களுக்கும் அவரவர் மதத் தலங்களுக்குச் செல்ல சுதந்திரம் உள்ளது. இந்து சபா ஆலயத்தில் நடந்த வன்முறையை நான் கண்டிக்கிறேன். எங்கு நடந்தாலும் வன்முறை என்பது தவறு தான். சமாதானத்திற்காக வேண்டுகோள் விடுக்கின்ற சமூகத் தலைவர்களுடன் நான் துணை நிற்கிறேன்," என்று ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான பியர் பொலிவார், ஒன்டாரியோ மாகாண முதலமைச்சரும் பிசி கட்சியின் தலைவருமான டக் ஃபோர்ட் மற்றும் பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் ஆகியோர் சமூக ஊடகப் பதிவுகளின் மூலம் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)