தங்கமும், வைரமும் நிறைந்திருந்த சோம்நாத் கோவில் - கஜினி முகமது படையெடுப்பின் போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், @narendramodi
- எழுதியவர், திரிபுவன்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மே 11 அன்று குஜராத்தின் பிரபாஸ் படானில் உள்ள சோம்நாத் கோவிலில் நடைபெற்ற சோம்நாத் அமிர்த மஹோத்சவத்தில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில், அங்கு பிரதமர் மோதி மகா பூஜை மற்றும் கும்பாபிஷேகம் நடத்தினார். தனது உரையில், சோமநாதரை இந்தியாவின் "தளராத நம்பிக்கை" மற்றும் "நாகரிகத் தொடர்ச்சியின்" அடையாளமாக மோதி விவரித்தார்.
சோமநாதரின் வரலாறு என்பது வெறும் அழிவின் வரலாறு மட்டுமல்ல, அது ஒவ்வோர் அழிவுக்குப் பின்னரும் மறுசீரமைப்பு மற்றும் உயிர்த்தெழுதல் குறித்த இந்திய உணர்வின் வரலாறு என்று அவர் கூறினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் பட்டேலின் முயற்சியால் சோம்நாத் கோவில் புனரமைக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் 11 மே 1951 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தால் திறந்து வைக்கப்பட்டது.
இந்திய வரலாற்றாசிரியர்கள் மட்டுமன்றி, அரபு வரலாற்றாசிரியர்களும் சோம்நாத் கோவிலை "அசாதாரணமான செல்வம் மிக்கது", "கற்பனைக்கு எட்டாதது" மற்றும் "ஈடுஇணையற்றது" என்று விவரித்துள்ளனர்.
புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் அல்-பிருனி "தஹ்கிக்-இ-ஹிந்த்" நூலில், "சோம்நாத் இவ்வளவு புகழ் பெற்றதாக இருந்ததற்குக் காரணம், அது கிழக்கு ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் வணிகக் கப்பல்கள் நங்கூரமிடும் ஒரு துறைமுகமாக இருந்ததுதான்" என்று எழுதியுள்ளார்.
புகழ்பெற்ற நாவலாசிரியர் சதுர்சென் சாஸ்திரி "சோம்நாத் மகாலயா" நூலில், "சோமநாதரின் கீர்த்திமான் மகாலயாவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட அருள், பத்ரிகாஷ்ரமம் முதல் சேதுபந்த ராமேஸ்வரம் வரையிலும், கன்னியாகுமரி முதல் வங்காளத்தின் எல்லை வரையிலும் புகழ் பெற்றிருந்தது" என்று எழுதியுள்ளார்.
பிரபல வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், "சோமநாத்: தி மெனி வாய்சஸ் ஆஃப் எ ஹிஸ்டரி" என்ற நூலில், இந்த மாளிகையின் மேடை 600 தூண்களின் மேல் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மேடையில் ஒரே நேரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சோமநாதரை தரிசிக்க முடியும்.
ஜோதிர்லிங்கம் ஒரு மண்டபத்திற்குள் அமைக்கப்பட்டு இருந்தது, அது இருள் சூழ்ந்து காணப்பட்டது.
ஆனால் புகழ்பெற்ற பாரசீக வரலாற்றாசிரியர் ஃபிரிஷ்டா (1560-1620) "தாரிக்-இ-ஃபிரிஷ்டா" எனும் நூலில், "அங்கு எண்ணற்ற தூய மற்றும் விலை மதிப்பற்ற வைரங்களும் ரத்தினங்களும் இருந்ததாகவும், அவை கண்ணைப் பறிக்கும் காட்சியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது" என்று எழுதியுள்ளார்.
சோமநாதரின் இந்த ஜோதிர்லிங்கம் ஐந்து கஜம் உயரம் கொண்டது. ஒரு சிறிய தங்க ஏணியில் ஏறி, அதற்கு நீராட்டுதல், பிரதிஷ்டை செய்தல், அலங்கரித்தல் ஆகியவை செய்யப்பட்டன.
ரொமிலா தாப்பரின் கூற்றுப்படி, இங்கு 200 மவுன்ட் (ஒரு மவுன்ட் என்பது 40 கிலோ) எடை கொண்ட ஒரு தங்கச் சங்கிலி இருந்தது. அதில் கட்டப்பட்டிருந்த மணிகளை, பூசாரிகள் வந்து செல்லும்போது ஒலிப்பது வழக்கம்.

பட மூலாதாரம், x@narendramodi
முன்பு பெரிய திருவிழா நடைபெற்று வந்த இடம்
வரலாற்றாசிரியர் சதுர்சென் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் சிராவண மாத பௌர்ணமி அன்றும், சிவராத்திரி அன்றும், சூரிய மற்றும் சந்திர கிரகண நாட்களிலும் மகாலயாவில் ஒரு பிரமாண்டமான திருவிழா நடைபெற்றது.
இதில் இமயமலை முதல் இலங்கை வரை உள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர் மற்றும் இந்தத் திருவிழாக்களில் ஐந்து முதல் ஏழு லட்சம் பக்தர்கள் ஒன்று கூடினர்.
இதற்கிடையில், சோம்நாத்தின் சிறப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட முகமது கஜினி, 30,000 வீரர்களுடன் தாக்குதல் நடத்தப் புறப்பட்டதாக ஃபிரிஷ்டா எழுதியுள்ளார். பல மாதங்களுக்குத் தேவையான தானியங்கள் மற்றும் தண்ணீரை இருபதாயிரம் ஒட்டகங்கள் சுமந்து வந்தன.
புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், தனது "சோமநாத்: தி மெனி வாய்சஸ் ஆஃப் எ ஹிஸ்டரி" என்ற நூலில், சோம்நாத்தின் வரலாறு என்பது "ஒற்றை நேர்கோட்டில்" அமையவில்லை என்று எழுதியுள்ளார்.
இந்த ஆலயம் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது, ஒவ்வொரு முறையும் அதன் பொருள் மாறியது.
அவரைப் பொறுத்தவரை, இடைக்கால இந்தியாவில் கோவில்கள் அழிக்கப்பட்டது என்பது வெறும் மத வெறுப்புடன் மட்டும் தொடர்புடையது அல்ல, மாறாக அதிகாரத்தைக் காட்டுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும், அடையாள ரீதியான ஆதிக்கத்தை நிலைநாட்டவும் செய்யப்பட்ட நடவடிக்கைகளாகும்.
அவரும் பிற வரலாற்றாசிரியர்களும் சோம்நாத்தை வெறும் "இந்து அடையாளத்தின் மீதான வடு" என்றோ அல்லது வெறும் "இஸ்லாமிய படையெடுப்பின் சின்னம்" என்றோ மட்டும் கருதவில்லை. அது இந்த இரண்டையும்விட மிகவும் சிக்கலான ஒரு வரலாற்றுத் தலம் என்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
சோமநாத் - ஒரு சிக்கலான வரலாற்றுத் தலம்
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1942 மற்றும் 1945க்கு இடையில் அகமதுநகர் சிறையில் இருந்தபோது எழுதிய தனது புகழ்பெற்ற "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" நூலில், "முகமது ஒரு மத நம்பிக்கையாளரைவிட ஒரு போர் வீரராகவே இருந்தார். மற்ற பல வெற்றியாளர்களைப் போலவே, அவர் தனது படையெடுப்புகளுக்காக மதத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்தியா அவருக்குத் தனது நாட்டிற்கான செல்வத்தையும் பொருட்களையும் கொள்ளையடிக்கக்கூடிய ஓர் இடமாக மட்டுமே இருந்தது. அவர் இந்தியாவில் ஒரு படையைத் திரட்டி, அதைத் தனது புகழ்பெற்ற தளபதிகளில் ஒருவரான திலக்கின் கீழ் ஒப்படைத்தார். திலக் ஓர் இந்தியர் மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்" என்று எழுதியுள்ளார்.
சோம்நாத் என்பது உண்மையில் "ஒற்றைக் கதை" அல்ல, அது சமஸ்கிருத கல்வெட்டுகள், பாரசீக வரலாற்றுச் சுவடுகள், சமண நூல்கள், காலனித்துவ ஆவணங்கள் மற்றும் நவீன தேசியவாதக் கதைகள் என "பல குரல்களைக்" கொண்டது. ஒவ்வொரு காலகட்டமும் சோம்நாத்தை தனக்கே உரிய வழியில் புரிந்துகொண்டுள்ளது.
வரலாறு குறித்த கல்வி ரீதியான விவாதங்களுக்கு இணையாக, இந்தி இலக்கியமும் சோம்நாத்தை ஓர் உணர்ச்சிகரமான மற்றும் தேசியவாத அடையாளமாக மாற்றியது.
ஆச்சார்யா சதுர்சென் எழுதிய சோம்நாத் மகாலயா, கன்னையாலால் மாணிக்கலால் முன்ஷி எழுதிய ஜெய் சோம்நாத் ஆகிய இரண்டு நாவல்களும் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இந்தியாவில் பெரும் புகழைப் பெற்றன.
"ஜெய் சோமநாத்" நாவலில், முன்ஷி சோம்நாத்தை "தேசிய சுயமரியாதையின்" மறுமலர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கிறார். இதே கண்ணோட்டம்தான் சுதந்திரத்திற்குப் பிறகு கோவில் கட்டுமானப் பிரச்னையை பண்பாட்டு மறுமலர்ச்சியுடன் இணைத்தது.
மறுபுறம், சோம்நாத் மகாலயா நாவல், வரலாறு மற்றும் கற்பனைக்கு இடையே ஒரு பாலமாக அமைகிறது. அங்கு அழிவு என்பது வெறும் கற்களுக்கானது மட்டுமல்ல, அது ஒரு நாகரிகத்தின் உணர்வுக்கான அழிவாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நாவல்கள் பொது மக்களின் உணர்வுகளில் சோமநாதரை ஓர் உணர்வுபூர்வமான நாயகனாக மாற்றின. அந்த இதிகாசம் பின்னர் அரசியல் மொழியின் ஓர் அங்கமாக மாறியது.
ஆனால் இதுகுறித்து சுவாமி தயானந்த சரஸ்வதி தனது "சத்யார்த்த பிரகாஷ்" நூலின் பதினோராவது அத்தியாயத்தில், "பூசாரி முறையும் உருவ வழிபாடும் அனைத்தையும் அழித்துவிட்டன. முகமது கஜினியை எதிர்க்க அரசரும் அவரது ராணுவமும் தயாராக இருந்தபோது, பூசாரிகள் இது எட்டாம் பிறை காலம் என்றும் தாக்குதலுக்கு உகந்த நேரம் அல்ல என்றும் கூறினர்" என எழுதியுள்ளார்.
சோம்நாத் கொள்ளையடிக்கப்பட்டதற்கு முகமதுவை விட மூட நம்பிக்கைகளையே தயானந்த சரஸ்வதி குற்றம் சாட்டுகிறார்.
படையெடுப்பாளர்களை எதிர்கொள்வதற்குத் தேவையான ராணுவ வலிமையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இதுபோன்ற கோவில்களில் வழிபாடு செய்வதில் கவனம் செலுத்தியதே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் கட்டப்பட்ட சோம்நாத் கோவில்
சோம்நாத் கோவில் புனரமைப்பின் மிக முக்கியமான அத்தியாயம் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு எழுதப்பட்டது. இங்கே, வரலாறு நேரடியாக அரசியலுடன் மோதுகிறது.
உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் குஜராத்தின் உள்ளூர் தலைவர்கள், சோம்நாத் கோவிலை மீண்டும் கட்டுவது கலாசாரத் தன்னம்பிக்கையை மீட்டெடுப்பதைக் குறிக்கும் என்று கருதினர்.
இதற்கு நேர்மாறாக, மகாத்மா காந்தியின் அறிவுரைப்படி, ஓர் அறக்கட்டளை மூலம் இதை நிறைவு செய்யும் யோசனையை பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரித்தார். அதுவரை இதில் எந்த சர்ச்சையும் இல்லை.
ஆனால் நேருவின் கடிதங்கள் மற்றும் அதிகாரபூர்வக் குறிப்புகள், அரசு மத அடையாளங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்ற கவலையைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன.
குறிப்பாக நாடு இன்னும் பிரிவினை வன்முறையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த ஒரு சூழலில் அவர் இதை வலியுறுத்தினார். வரலாற்றாசிரியர்கள் மற்றும் பதிவுகளின்படி, பொது நிதி மற்றும் அரசாங்க அடையாளங்களைப் பயன்படுத்துவதற்கு நேரு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற குடியரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்றும், அரசு நிதியுதவியுடன் கூடிய கோவில் கட்டுமானம் ஓர் ஆபத்தான முன்மாதிரியை உருவாக்கிவிடும் என்றும் அவர் வாதிட்டார். அதன் பிறகு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் குறித்த விவகாரம் எழுகிறது.
கடந்த 1951ஆம் ஆண்டு சோம்நாத் கோவில் திறப்பு விழாவில் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டது இந்த மோதலைப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. அவர் அங்கு செல்வதற்கு நேரு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார், ஆனால் குடியரசுத் தலைவர் அதைத் தனது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் கலாசார மரபு சார்ந்த விஷயமாகக் கருதினார்.
நேருவின் மதச்சார்பற்ற அக்கறைகளுக்கும், பட்டேல் மற்றும் ராஜேந்திர பிரசாத்தின் கலாசார மீட்பு முயற்சிக்கும் இடையிலான இந்த மோதல், இந்தியாவின் அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு மௌனமான அத்தியாயமாக மாறியது.
இன்று இந்த விவகாரம் மீண்டும் பேசப்படும்போது, இது பெரும்பாலும் ஒரு தரப்பினர் "தேசியவாதி" என்றும் மறு தரப்பினர் "தேசியத்திற்கு எதிரானது" என்றும் எளிமைப்படுத்தப்படுகிறது. இருப்பினும், வரலாறு இத்தகைய நேரடியான பிரிவினையை அனுமதிப்பதில்லை.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் என்ன எழுதினார்கள்?
ஆங்கிலேயர்களும் சோம்நாத்தை மையமாகக் கொண்ட ஒரு மொழியை வளர்த்தெடுத்தனர். சோமநாதர் மற்றும் முகமது பற்றிய "தீய" பிம்பம் தீவிரமாக உருவாக்கப்பட்டதன் பின்னணியில் காலனித்துவ அரசியல் இருந்ததாக அமெரிக்க வரலாற்றாசிரியரான ரிச்சர்ட் எம். ஈட்டன் வாதிடுகிறார்.
ஈட்டனின் கூற்றுப்படி, 1842இல், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் லார்ட் எல்லன்பரோ, "800 ஆண்டுக்கால அவமானத்திற்கு" பழிவாங்கும் விதமாக, கஜினியில் இருந்து சோம்நாத் கோவிலின் வாயில்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து "சோம்நாத் வாயில்கள்" கதையை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் தருணத்தில்தான், சோம்நாத் இந்தியாவின் "தேசிய அவமானம்" என்றும் முகமது "நாகரிகங்களின் எதிரி" என்றும் சித்தரிக்கப்பட்டனர்.
"இந்தக் குறியீட்டு முறை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, பின்னர் வந்த இந்திய மற்றும் பாகிஸ்தானிய தேசிய அரசியல்கள் இரண்டும் தத்தமது வழிகளில் இதைப் பின்பற்றின" என்று ஈட்டன் கூறுகிறார்.
இந்தக் கண்ணோட்டம் சோம்நாத்தை கி.பி 1026இன் ஒரு நிகழ்வாக மட்டுமன்றி, 19-20ஆம் நூற்றாண்டின் 'நினைவு அரசியலின்' ஒரு நிகழ்வாகவும் மாற்றுகிறது. சோம்நாத்தின் வாயில்கள் இந்திய அரசியலில் தொலைந்துபோன ஓ ஆவியைப் போல மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது.
கி.பி 1026இல் முகமது கஜினி இதைத் தன்னுடன் எடுத்துச் சென்றார். அது வெறும் கல் மற்றும் மரமாக மட்டுமல்லாமல், ஒரு நாகரிகத்தின் சிதைந்த எதிரொலியாகக் கொண்டு செல்லப்பட்டது.
எட்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1842இல் ஆப்கானிய போரில் வெற்றி பெற்ற பின்னர், பிரிட்டிஷ் ராணுவம் அந்தக் கதவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்தது.
கவர்னர் ஜெனரல் லார்ட் எல்லன்பரோ அதைத் திரும்பப் பெறுவதை ஒரு நாடகத் தன்மையுடன் கூடிய உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வாக முன்வைத்தார். இதே காரணத்திற்காக லண்டனில் அவர் கண்டிக்கப்பட்டார்.
தாமஸ் மெக்காலே, 1843ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி ஆற்றிய உரை, இந்து பாரம்பரியத்தை ஒரு சங்கடமான நாட்டுப்புறக் கதையாகவும், இஸ்லாம் ஒரு தொலைதூர, ஆனால் பரிச்சயமான உறவினராகவும் சித்தரித்தது.
இவ்வாறு "சோம்நாத் வாயிலின் மீள்வருகை" என்பது வெறும் ஒரு கதவின் கதையாக மட்டுமல்லாமல், நினைவுகள் எங்கே வைக்கப்பட வேண்டும், ஓர் அருங்காட்சியகத்திலா அல்லது மறதியிலா என்பதைத் தீர்மானிக்க விரும்பிய காலனித்துவ மனநிலையின் கதையாகவும் மாறுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































