டெல்லி முதல்வர் பதவிக்கு பாஜகவில் 5 பேர் போட்டி - கேஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மாவுக்கு கிடைக்குமா?

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025, பாஜக, ஆம் ஆத்மி கட்சி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆனந்த் மணி திரிபாதி
    • பதவி, பிபிசி

பாரதிய ஜனதா கட்சி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியைப் பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.

முன்பு, 1993-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி 70 தொகுதிகளில் 49 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 48 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலில் பாஜக வெற்றியை உறுதி செய்திருக்கிறது. ஆனால் தற்போது அங்கே எழும் கேள்வி டெல்லியின் அடுத்த முதல்வர் யார்?

முதலமைச்சர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகின்ற சூழலில், இதற்கான போட்டியில் உள்ள 5 பேர் யார்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பர்வேஷ் வர்மா

புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பாஜகவின் பர்வேஷ் வர்மா தோற்கடித்துள்ளார். 4,089 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற அவர் முதல்வர் பதவிக்கு உரிமை கோர பலமான காரணங்களைக் கொண்டிருக்கிறார்.

பஞ்சாபைப் பூர்வீகமாக கொண்ட பர்வேஷ் வர்மா, பாஜகவின் ஜாட் சமூக முகமாக பார்க்கப்படுகிறார். அவர் 'ராஷ்ட்ரிய ஸ்வயம்' என்ற சமூக சேவை அமைப்பை நடத்தி வருகிறார்.

டெல்லி முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான மறைந்த சாஹிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ், டெல்லியில் செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.

சாஹிப் சிங் வர்மா பாஜகவில் மிக முக்கிய தலைவராக கருதப்பட்டார். ஜாட் சமூகத்தில் இருந்து வந்த முக்கிய பாஜக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1977-ஆம் ஆண்டு பிறந்த பர்வேஷ் வர்மா, கிரோரி மால் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், எம்.பி.ஏ பட்டத்தை ஃபோர் மேலாண்மை பள்ளியிலும் பெற்றார்.

அவரின் தந்தையைத் தொடர்ந்து தொடர்ந்து பர்வேஷும் அரசியலுக்கு வந்தார். முதல்முறையாக 2013-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மெஹ்ருலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

பாஜகவில் உள்ள செழிப்பான எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.115 கோடிக்கும் மேல் என்று குறிப்பிட்டிருந்தார்.

பர்வேஷின் உறவினரும் அரசியலில் செயல்பட்டு வருகிறார். அவர் வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராக பதவி வகித்து வந்தார். 2013- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் முந்த்கா தொகுதியில் போட்டியிட்டார்.

பர்வேஷின் மனைவி ஸ்வாதி சிங், மத்திய பிரதேச பாஜக தலைவர் விக்ரம் வர்மாவின் மகள் ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகள்களும் தங்களின் தந்தைக்காக இந்த தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025, பாஜக, ஆம் ஆத்மி கட்சி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லியில் செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்டவர் பர்வேஷ்

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வர்மாவுக்கு மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது பாஜக. அந்த தேர்தலில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வர்மா.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக அவரை சட்டமன்ற தேர்தலில் களம் இறக்கியது பாஜக.

தேர்தல் பிரசாரத்தில் கேஜ்ரிவாலின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மாசு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பிரச்னைகளை குறிப்பிட்டு கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மிகவும் ஆக்ரோஷமான கருத்துகளுக்காக அறியப்படும் நபராக இருக்கிறார் பர்வேஷ். 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பர்வேஷ், கேஜ்ரிவால் குறித்து மோசமான கருத்துகளை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய அவருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் பிரசாரத்திலும் கூட, பெண் வாக்காளர்களுக்கு காலணிகள் வாங்கிக் கொடுத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

அரசியல் விமர்சகர், ஜாய் ம்ரிக், "மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே பாஜக அடுத்தடுத்த தேர்தல்களுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது. டெல்லி தேர்தல் மட்டுமின்றி இதர மாநில தேர்தல்களிலும் கவனத்தை செலுத்தி வந்தது. ஹரியாணா தேர்தலில் ஜாட் சமூகம் சாராதவர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இது போன்ற சூழலில் ஜாட் சமூகத்தை சேர்ந்தவருக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜகவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் மேற்கு உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு பர்வேஷ் வர்மா மிகவும் உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025, பாஜக, ஆம் ஆத்மி கட்சி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வர்மாவுக்கு மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது பாஜக

விரேந்திர சச்தேவா

டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகிக்கிறார் விரேந்திர சச்தேவா.

1988-ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார் அவர். இந்திய வில்வித்தை சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார் சச்தேவா.

2017-ஆம் ஆண்டு அவர் பாஜகவின் மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். நல்ல நிர்வாக திறன் கொண்ட ஒருவராக அவர் அறியப்படுகிறார்.

அவருடைய தலைமையில்தான் பாஜக இந்த வெற்றியை டெல்லியில் உறுதி செய்துள்ளது. இந்த சூழலில் அவரும் முதல்வர் பதவிக்கு உரிமை கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"பொதுவாக ஒரு மாநில தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுகிறது என்றால் அதற்கான முழுமையான பாராட்டும் மாநிலத் தலைவருக்கே செல்லும். ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை அது பிரதமர் மோதியையே சேரும்," என்று மூத்த பத்திரிக்கையாளர் ஷாரத் குப்தா தெரிவிக்கிறார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025, பாஜக, ஆம் ஆத்மி கட்சி, முக்கிய செய்திகள், சச்தேவா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார் விரேந்திர சச்தேவா

மஞ்சிந்தர் சிங் சிர்ஸா

சீக்கியர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைக் கொண்டுள்ள மஞ்சிந்தர் சிங் சிர்ஸாவும் முதல்வர் பதவிக்கு உரிமை கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய தலைவர்கள் யாரும் பாஜகவில் இல்லை.

சிர்ஸா, டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழுவின் தலைவராக உள்ளார். சிர்ஸா, ரஜோரி கார்டன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு இரண்டு முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அவர் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் வர இருக்கும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு உதவியாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சிர்ஸா, அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பதாலின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் ஒரு நபர்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025, பாஜக, ஆம் ஆத்மி கட்சி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், ani

படக்குறிப்பு, சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய தலைவர்கள் யாரும் பாஜகவில் இல்லை

விஜேந்தர் குப்தா

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தாவும் இந்த போட்டியில் உள்ளார். வணிக பின்புலத்தைக் கொண்டவர் அவர். டெல்லியில் வணிக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் கேஜ்ரிவால் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் விஜேந்தர் குப்தா.

டெல்லியின் ரோஹினி தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை அவர் 38 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார்.

இவரின் அரசியல் வாழ்க்கை 1997-ம் ஆண்டு துவங்கியது. அவர் டெல்லி மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலராக அப்போதுதான் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025, பாஜக, ஆம் ஆத்மி கட்சி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், ani

படக்குறிப்பு, டெல்லியின் ரோஹினி தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்

ரேகா குப்தா

முதல் அமைச்சர் பதவிக்கான போட்டியில் ரேகா குப்தாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த முறை பெண் ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் எனில் பாஜகவின் முதல் தேர்வு இவராகதான் இருக்க முடியும்.

ஷாலிமர் பாக் தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் ரேகா குப்தா வெற்றி பெற்றார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் அவர் குறைவான வாக்கு வித்யாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025, பாஜக, ஆம் ஆத்மி கட்சி, முக்கிய செய்திகள், ரேகா குப்தா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த முறை பெண் ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் எனில் பாஜகவின் முதல் தேர்வு இவராக தான் இருக்க முடியும்

இவர் டெல்லி மாநகராட்சி கவுன்சிலராக இருக்கிறார். மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் குப்தா, ''பெண்கள் மற்றும் வணிக சமூகத்தை சேர்ந்தவர்களை ரேகா மூலம் பாஜக அணுகிவிட இயலும்'' என்று கூறுகிறார்.

ஆனால், சமீப காலமாக பாஜக, முதல்வர்களை தேர்ந்தெடுக்கும்போது பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும் முடிவுகளை மேற்கொண்டுள்ளது. ஒரிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் யாரும் எதிர்பார்க்காத ஒருவரை முதல்வராக அமர்த்தியுள்ளது பாஜக.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)