ஹெச்1பி விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு - டிரம்பின் புதிய உத்தரவு யாருக்கெல்லாம் பொருந்தும்?

    • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மான் ஜூனியர்
    • பதவி, வெள்ளை மாளிகை
    • எழுதியவர், டேனியல் கேய்
    • பதவி, வணிக செய்தியாளர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் இந்திய ரூபாய்) அளவிற்கு உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், ஹெச்-1பி திட்டம் தவறாகப் பயன்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இனி புதிய கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

ஹெச்-1பி திட்டம் அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக அதன் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்ற நிலையில் ஈலோன் மஸ்க் உள்ளிட்ட அத்திட்டத்தின் ஆதரவாளர்கள் இந்தத் திட்டம் உலகம் முழுவதுமிருந்து திறமைசாலிகளை அமெரிக்காவிற்குள் அழைத்து வர அனுமதிப்பதாக வாதிடுகின்றனர்.

டிரம்ப் புதிய "கோல்ட் கார்ட்" (Gold card) உருவாக்குவதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 1 மில்லியன் பவுண்ட் (சுமார் 11.8 கோடி இந்திய ரூபாய்) கட்டணம் செலுத்தினால் விரைவாக விசா பெற முடியும்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்புடன் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கும் உடனிருந்தார்.

"ஹெச்-1பி விசாக்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு அனைத்து பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நாங்கள் அவர்களிடம் பேசியுள்ளோம்," என்றார் லுட்னிக்.

நம்முடைய வேலையை எடுத்துக் கொள்ள வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுத்துங்கள் என்று கூறும் லுட்னிக், "நீங்கள் யாருக்காவது பயிற்சி அளிக்க வேண்டுமென்றால் நமது நாட்டிலுள்ள சிறப்பான பல்கலைக்கழகங்களிலிருந்து வரும் பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்." என்றார்.

டிரம்பின் உத்தரவு யாருக்கெல்லாம் பொருந்தும்?

டிரம்பின் உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வர உள்ளது. இது புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும், ஆனால் நிறுவனங்கள் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு அதே தொகையை செலுத்த வேண்டும் என்றும் லுட்னிக் தெரிவித்தார்.

"அந்த நபர் அரசாங்கத்திற்கு 1 லட்சம் டாலர் செலுத்துகின்ற அளவுக்கு மதிப்பு மிக்கவரா என்பதை நிறுவனங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் அல்லது அவர்கள் அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். அனைத்து பெரிய நிறுவனங்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன." எனத் தெரிவித்தார்.

2004 முதல் ஆண்டுதோறும் 85,000 ஹெச்-1பி விசா

2004-இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அதிகபட்ச ஹெச்-1பி விசாக்களின் எண்ணிக்கை 85,000 ஆக உள்ளது.

தற்போது வரை ஹெச்-1பி விசாக்களுக்கு நிர்வாக கட்டணமாக 1,500 டாலர் வசூலிக்கப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தரவுகளின்படி ஹெச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 3,59,000 ஆக குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இந்தத் திட்டம் மூலம் அதிக பலன் பெற்ற நிறுவனமாக அமேசானும் அதனைத் தொடர்ந்து டாடா, மைக்ரோசாப்ட், மெட்டா, ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் இருப்பதாக அமெரிக்க அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வாட்சன் இம்மிக்ரேஷன் லாவின் நிறுவனரான வழக்கறிஞர் தாஹ்மினா வாட்சன் பிபிசியிடம் பேசுகையில், இந்த புதிய உத்தரவு தனது வாடிக்கையாளர்களான சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு "சவப்பெட்டியில் அடித்த ஆணி" போன்றது எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "அனைவருக்கும் செலவு அதிகரிக்கப் போகிறது. அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும். பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பணி செய்வதற்கான ஊழியர்கள் கிடைப்பதில்லை எனக் கூறுவார்கள்." என்றார்.

பணியிடங்களை நிரப்ப முடியாததால்தான் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்கின்றன என்கிறார் வாட்சன்.

அமெரிக்காவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனமான லிட்லர் மெண்டெல்சன் பிசியின் தலைவரான ஜோர்ஜ் லோபஸ் 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது "உலகளாவிய அளவில் தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் அமெரிக்கா போட்டியிடுவதன் மீது தடை விதித்ததைப் போல ஆகிவிடும்" என்கிறார்.

"சில நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வெளியே தங்களின் உற்பத்தியை மாற்றலாம், ஆனால் அது நடைமுறையில் மிகவும் சவாலானதாக இருக்கும்" என்று தெரிவித்தார் லோபஸ்.

ஹெச்-1பி விசா தொடர்பான விவாதங்கள் முன்னர் டிரம்பின் குழு மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இடையே பிளவை உண்டாக்கியது.

ஹெச்-1பி மீதான இருதரப்பு வாதங்களையும் தான் புரிந்து கொள்வதாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

அதற்கு முந்தைய வருடம் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தொழில்நுட்ப துறையின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சித்த டிரம்ப், திறமைசாலிகளை ஈர்க்கும் நடைமுறையை எளிமையாக்குவதாகவும் கல்லூரி பட்டதாரிகளுக்கு க்ரீன் கார்ட் வழங்குவதாகவும் கூட தெரிவித்தார்.

"நிறுவனங்களில் வேலை செய்ய உங்களுக்கு நிறைய பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். உங்களால் அவர்களை பணியில் சேர்த்து தக்கவைத்துக் கொள்ள முடிய வேண்டும்." என ஆல்-இன் பாட்காஸ்டில் கூறியிருந்தார் டிரம்ப்.

2017-ஆம் ஆண்டு டிரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஹெச்-1பி விசாக்களில் ஏற்படும் முறைகேடுகளைக் கண்டறியும் வழிமுறையை மேம்படுத்த விண்ணப்பங்களை தீவிரமாக ஆராய நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

2018-ஆம் நிதியாண்டில் ஹெச்-1பி விண்ணப்பங்களில் நிராகரிப்பு விகிதம் 24% ஆக உயர்ந்தது. இது பராக் ஓபாமாவின் ஆட்சி காலத்தில் 5-8% ஆகவும் ஜோ பைடனின் ஆட்சி காலத்தில் 2-4% ஆகவும் இருந்தது.

அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் ஹெச்-1பி உத்தரவை விமர்சித்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஹெச்-1பி திட்டத்தின் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஹெச்-1பி விசா கேட்டு விண்ணப்பங்கள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு