You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுக கவுன்சிலர் காலில் பட்டியலின அரசு ஊழியர் விழுந்த சம்பவம் - உண்மையில் என்ன நடந்தது?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை கவுன்சிலரின் காலில் விழ வைத்த காணொளி காட்சிகள், செப்டம்பர் 3 அன்று இணையத்தில் பரவியது.
இந்த சம்பவத்தில் நகராட்சித் தலைவரின் கணவர் உள்பட ஐந்து பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட ஐந்து பிரிவுகளில் திண்டிவனம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இதுதொடர்பான காணொளியில் காலில் அந்த ஊழியர் விழுந்தபோது, கவுன்சிலர் 'வேண்டாம்' என கூறியதை கேட்க முடிகிறது. எனினும், இந்த காணொளியை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. உண்மையில் இச்சம்பவத்தில் என்ன நடந்தது?
ஆகஸ்ட் 29 அன்று நடந்த சம்பவத்துக்கு செப்டம்பர் 3 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஏன்?
என்ன நடந்தது?
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் முனியப்பன், செப்டம்பர் 3 அன்று காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், 'ஆகஸ்ட் 29 அன்று காலை 11 மணியளவில் நகராட்சி ஆணையாளர் என்னிடம், தெருவிளக்குகள் பழுதுபார்த்தது தொடர்பான 2021 ஆம் ஆண்டு கோப்புகளை எடுத்து வருமாறு கூறினார்.
அதைத் தேடிக் கொண்டிருந்தபோது, 20வது வார்டு கவுன்சிலர் ரம்யா என்னிடம் வந்து, 'அந்தக் கோப்பினை எடுத்துத் தர மாட்டாயா?' எனக் கேட்டார். நான் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறியும் அவதூறாக பேசினார்' எனக் கூறியுள்ளார்.
பிறகு 11 மணியளவில் ரம்யா மற்றும் அவருடன் வந்த நான்கு பேர் தன்னை மிரட்டிவிட்டுச் சென்றதாகவும் 12 மணியளவில் ரம்யாவின் கணவர் மரூர் ராஜாவும் தன்னை மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மாலை சுமார் 4 மணியளவில் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்துக்கு வருமாறு முனியப்பனை நகர்மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவரும் கவுன்சிலருமான ரவிச்சந்திரன் அழைத்துள்ளார்.
'அங்கு ரவிச்சந்திரன், ரம்யா, நகராட்சி மேலாளர் நெடுமாறன், நகராட்சி உதவி வருவாய் அலுவலர் பழனி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அப்போது, ரம்யாவிடம் மன்னிப்பு கேட்குமாறு ரவிச்சந்திரன் கூறினார்' எனப் புகார் மனுவில் முனியப்பன் கூறியுள்ளார்.
5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
தொடர்ந்து, 'நான் தவறாக எதுவும் செய்யவில்லை என்றாலும் மன்னிப்புக் கேட்பதாக கூறினேன். அதற்கு, 'வாயால் மன்னிப்பு கேட்டால் போதுமா?' என ரம்யா கேட்டார். இதையே ரவிச்சந்திரனும் கட்டாயப்படுத்திக் கேட்டதால் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன்' எனப் புகாரில் முனியப்பன் தெரிவித்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த அதிகாரிகள் அனைவரும் அமைதியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். புகார் மனுவை ஏற்று திண்டிவனம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவுன்சிலர்கள் ரம்யா, ரவிச்சந்திரன் உள்பட ஐந்து பேர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 உள்பட ஐந்து பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
'புகார் கொடுக்க அச்சப்பட்டார்'
முன்னதாக, தி.மு.க கவுன்சிலரின் காலில் முனியப்பன் விழும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது. இதில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏ அர்ஜூனன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
"முதலில் புகார் கொடுப்பதற்கு முனியப்பன் தயங்கினார். 'வேலை போய்விடும்' எனவும் அவர் அச்சப்பட்டார். செப்டம்பர் 3 அன்று காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார், விழுப்புரம் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார்.
"வருவாய் ஆய்வாளரை காலில் விழவைத்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கூறி விவகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கையில் எடுத்தது. அரசியல் கட்சிகள் போராட்டத்தை அறிவிக்கத் தொடங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கவுன்சிலர் கொடுத்த புகார்
இந்தநிலையில், முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு திண்டிவனம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷிடம் தி.மு.க கவுன்சிலர் ரம்யா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், கோப்புகளை தேடும் பணியில் உதவிக்கு ஒருவரை வைத்துக் கொள்ளுமாறு கூறியபோது, முனியப்பன் தன்னை ஒருமையில் திட்டியதாகக் கூறியுள்ளார்.
முனியப்பனுக்கு ஆதரவாக ஆணையாளர் அறையில் இருந்தவர்கள் சமாதானம் பேசியபோது, "எனது காலில் திடீரென விழுந்து தவறான எண்ணத்தில் என்னைத் தொட்டார். பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்திய முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய ரம்யா, தான் காலில் விழ வேண்டாம் என முனியப்பனிடம் கூறியது காணொளியில் தெளிவாகக் கேட்பதாக கூறியுள்ளார்.
தி.மு.க நிர்வாகிகள் மீது புகார் மனு கொடுத்த முனியப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆணையாளர் அலுவலகத்தில் என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையில் அளித்துள்ள புகார் மனுவில் விரிவாக தெரிவித்துள்ளேன்" என்று பதில் அளித்துள்ளார்.
தி.மு.க கவுன்சிலரின் புகார் குறித்துக் கேட்டபோது, "என்னைக் காலில் விழுமாறு மிரட்டினர். அவர் அமர்ந்திருந்த நாற்காலியை பிடித்தபோது என் கை அவர் மீது தெரியாமல் பட்டுவிட்டது. அதற்காக உண்மைக்கு மாறாக புகார் கொடுத்துள்ளார்" எனக் கூறினார்.
'அவராகவே காலில் விழுந்தார்'
ஆனால், இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க கவுன்சிலர் ரம்யா, "முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்திருந்தேன். அதைத் திரும்பப் பெறுமாறு அவர் கூறினார். எனது புகாரில் உறுதியாக இருந்ததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்" என்கிறார்.
"காலில் விழுமாறு கூறியது தவறுதானே?" எனக் கேட்டபோது, "காலில் விழுமாறு முனியப்பனிடம் யாரும் கூறவில்லை. நானும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் அவ்வாறு கூறவில்லை. அவராகவே காலில் விழுந்தார். அவர் செய்த தவறுக்கு விளக்கம் மட்டும் கேட்டோம்" எனக் கூறினார்.
"திண்டிவனம் நகராட்சியில் ஒரு சமூகத்தினரின் ஆதிக்கம் என்பது தொடர்ச்சியாக உள்ளது. அதில் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் கூட்டணி சேர்ந்து கொள்கின்றனர்" எனக் கூறுகிறார், ரவிக்குமார் எம்.பி.
இதனை மறுத்துப் பேசும் தி.மு.க கவுன்சிலர் ரம்யா, "நகராட்சியில் சாதிரீதியான ஒடுக்குமுறை என எதுவும் இல்லை" என்று பதில் அளித்தார்.
"என் மீது உண்மைக்கு மாறாக வழக்குப் போட்டுள்ளனர். புகார் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பொய்யானவை. இதை சட்டரீதியாகவே எதிர்கொள்ள இருக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.
'எஸ்.சி என்றால் இருக்கை கிடையாது'
திண்டிவனம் நகராட்சியின் துணைத் தலைவராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ராஜலட்சுமி வெற்றிவேல் இருக்கிறார். தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிப்பதால் துணைத் தலைவர் பதவி, விடுதலைச் சிறுத்தைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
"நகர்மன்றக் கூட்டத்தில் துணைத் தலைவருக்கு இருக்கை போடுவது வழக்கம். ஆனால், இங்கு துணைத் தலைவருக்கு இருக்கையே போடப்படவில்லை. இதனை எதிர்த்து பலகட்ட போராட்டங்களை நடத்திய பிறகே இருக்கையைப் போட வைத்தோம்" என்கிறார், ரவிக்குமார் எம்.பி.
"இருக்கை போடுமாறு கேட்டபோது, 'துணைத் தலைவரை மாற்றிவிடுவோம்' என மிரட்டினர். அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தானிடம் முறையிட்டும் நடக்கவில்லை. தொடர் போராட்டங்களை நடத்திய பிறகே சாத்தியமானது. அதன் தொடர்ச்சியாகவே முனியப்பன் விவகாரம் நடந்துள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதி இறுக்கம் அதிகமாகியுள்ளது. சாதி வன்கொடுமைகளின் எண்ணிக்கை, ஆணவப் படுகொலைகள், சாதிய அமைப்புகளின் பெருக்கம் ஆகியவற்றைக் கணக்கிட்டால் தெரியும்" என்கிறார்.
"இதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தொடர்புள்ளதாகவே அறிகிறேன்" எனக் கூறும் ரவிக்குமார் எம்.பி, "உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதைவிட சாதி இறுக்கமே அதிகரித்துள்ளது. கிராம ஊராட்சிகளில் மட்டுமல்லாமல் நகராட்சிகளிலும் இது நடக்கிறது" என்கிறார்.
"உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களுக்கு இருக்கை போட மறுப்பது, கொடியேற்ற அனுமதி மறுப்பது போன்றவை இயல்பான பிரச்னைகளாக உள்ளன. இதனை சீர்செய்து உள்ளாட்சி அமைப்புகளை ஜனநாயகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்" எனவும் ரவிக்குமார் எம்.பி குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு