You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியன் 2: இந்தியன் முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது படம் எப்படி இருக்கிறது? ஓர் அலசல்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. முதல் பாகத்தோடு ஒப்பிட்டால், இரண்டாம் பாகம் எப்படியிருக்கிறது?
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன் - 2: Zero Tolerance' நேற்று வெளியானது.
ஒரு வெற்றி பெற்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது தற்போது தமிழ் சினிமாவில் ஒரு பெரிய டிரெண்டாகவே காணப்படுகிறது. ஆனால், 80களில் இந்த முயற்சி துவங்கியபோது அது பெரிய அலையாக உருவாகவில்லை.
கடந்த 1979இல் வெளிவந்த 'கல்யாணராமன்' படத்தின் தொடர்ச்சியாக 1985இல் 'ஜப்பானில் கல்யாணராமன்' திரைப்படம் வெளியானது. அந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை என்பதால், தொடர் படங்களை எடுப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும் அவை ஒரு டிரெண்டாக மாறவில்லை.
ஆனால் அஜித்தின் 'பில்லா', ராகவா லாரன்ஸின் 'முனி', சுந்தர் சி-யின் 'அரண்மனை' படங்களின் தொடர்ச்சிகளுக்குக் கிடைத்த வெற்றி, தொடர் படங்களின் மீது தமிழ் சினிமாவின் கவனத்தைத் திருப்பின.
பெரும் எண்ணிக்கையில் இதுபோன்ற திரைப்படங்கள் வர ஆரம்பித்தன. ராகவா லாரன்ஸின் 'முனி' படத்திற்குக் கிடைத்த வெற்றியால், அந்தப் படத்தின் தொடர்ச்சியாக மேலும் மூன்று படங்கள் வெளியாகிவிட்டன. 'அரண்மனை' படத்தின் வெற்றியால், மேலும் மூன்று படங்கள் வெளியாகிவிட்டன.
இந்தப் பின்னணியில்தான், 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானபோது ரசிகர்களிடம் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டில் பிக் பாஸ் முதல் சீஸனின் இறுதியில், 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கமல் வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியாகி சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படம் ரிலீஸாகியுள்ளது.
இதுபோல கதைத் தொடர்ச்சி திரைப்படங்களில், பெரும்பாலான வெற்றித் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானவை. ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வெளியான 'ஜப்பானில் கல்யாணராமன்', 40 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வெளியான 'நீயா - 2' ஆகியவை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
முதல் படம் வெளியானபோது இருந்த ரசிகர்களின் மனநிலை, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதேபோல நீடிக்காது என்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
மீண்டும் இந்தியா திரும்பிய 'இந்தியன் தாத்தா'
இப்போது ஒரு தலைமுறை காலகட்டத்திற்குப் பிறகு வெளியாகியுள்ளது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் - 2'.
முதல் பாகத்தில், சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த சேனாபதி தனது மகளின் மரணத்திற்குப் பிறகு லஞ்சம் வாங்கியவர்களைக் கொலை செய்து, சமூகத்தைச் சீர்திருத்த முயல்வார்.
ஒருகட்டத்தில் தனது மகன் சந்திரபோஸ் வாங்கிய லஞ்சத்தால் 40 குழந்தைகள் இறந்துவிட, அவரையும் கொலை செய்வார் சேனாபதி.
அதற்கான இறுதிக் காட்சியில் விமான விபத்தில் அவர் இறந்துவிட்டதாகப் பலரும் கருதுவார்கள். ஆனால், அதிலிருந்து அவர் தப்பி, ஹாங்காங்கில் இருப்பதைப் போல முதல் பாகம் முடிவடையும்.
இந்த இரண்டாம் பாகம் தற்காலத்தில் நடக்கிறது. சமூக அவலங்கள் குறித்து, யு-டியூபில் 'பார்க்கிங் டாக்' என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் சில இளைஞர்கள். ஒரு கட்டத்தில், அவர்களால் எதிர்கொள்ள முடியாத அளவுக்குப் பிரச்னை நேரும்போது, இந்தியன் தாத்தாவை நினைவுகூர்ந்து, #comebackindian என டிரெண்ட் செய்கிறார்கள்.
அப்போது தாய்பெய்யில் வசிக்கும் இந்தியன் இதைப் பார்த்து நாடு திரும்புகிறார். தானே ஊழலை ஒழிக்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதைவிட, ஒவ்வொருவரும் தனது வீட்டிலிருந்து ஊழலை ஒழிக்கத் தொடங்க வேண்டும் என்கிறார்.
அதைப் பார்க்கும் சில இளைஞர்கள் அதுபோலச் செய்து, சொந்த வாழ்வில் பெரும் இழப்பைச் சந்திக்கிறார்கள். குறிப்பாக கதாநாயகன் தனது தாயையே இழக்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் இந்தியனும் சில கொலைகளைச் செய்கிறார். ஆனால், சொந்த வாழ்வில் இழப்பைச் சந்தித்த இளைஞர்கள், இந்தியனை வெறுக்கத் தொடங்குகிறார்கள். அப்போது #Gobackindian என டிரெண்ட் செய்கிறார்கள்.
மக்களிடம் வெறுப்பு ஏற்படுகிறது. அவரைப் பிடிக்க முயலும் காவல்துறை அதிகாரி பிரமோத் அவரைத் தீவிரமாகத் துரத்துகிறார். இந்த நிலையில் இந்தியன் என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.
முந்தைய 'இந்தியன்' படத்தில், சேனாபதியின் வயது 75ஐ தாண்டியிருக்கும். அந்தப் படம் நடக்கும் காலத்தில் இருந்து 28 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சேனாபதியின் வயது 100ஐ கடந்திருக்கும். அத்தனை வயதாகியும் இந்தியன் வாழ்வது, சண்டை போடுவது, கொலை செய்வது குறித்து எந்த விளக்கத்தையும் படம் தரவில்லை.
முந்தைய படம் ஒரு சிறிய புள்ளியிலிருந்து துவங்கி, உச்சத்தை எட்டி நிறைவுக்கு வரும். அதற்குள் காதல், பாசம், நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகன் சித்ரா அரவிந்தனுக்கும் அவருடைய தாய்க்கும் இடையிலான உறவைத் தவிர, வேறு எந்த இடத்திலும் உணர்வுரீதியாக ஒன்றவே முடியவில்லை.
’அந்நியன்' படத்தை நினைவுபடுத்தும் ஷங்கர்
முந்தைய படத்தில் லஞ்சம் வாங்கி மிகப் பெரிய சமூகத் தீமைகளையும் இழப்புகளையும் ஏற்படுத்துபவர்களை சேனாபதி கொலை செய்துகொண்டே வருவார். சேனாபதியைப் பிடிக்க முயலும் காவல்துறை அதிகாரி கிருஷ்ணசாமிதான் பிரதானமான எதிர்ப்பாத்திரமாக இருப்பார். இந்தப் படத்தில், சாலையோர மோட்டல்களில் மோசமான உணவை விற்பனை செய்பவர்களையெல்லாம் இலக்காக்கித் தனது 'அந்நியன்' படத்தை நினைவுபடுத்துகிறார் ஷங்கர்.
முந்தைய படத்தில் கிருஷ்ணசாமியின் பாத்திரத்தின் மீது இருந்த ஈர்ப்பு, இந்தப் படத்தில் அவருடைய மகனாகக் காட்டப்படும் பிரமோத் பாத்திரத்தின் மீது ஏற்படவில்லை. தவிர, இந்தப் படத்தில் பிரதானமான வில்லன் ஒருவரை (எஸ்.ஜே. சூர்யா) அறிமுகப்படுத்தவும் முயல்கிறார் ஷங்கர். அந்த வில்லன் நான்கே காட்சிகளில் மட்டும் வந்து எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் செல்கிறார்.
முந்தைய இந்தியன் படத்திலிருந்த பல அம்சங்கள் கருத்து ரீதியாக ஏற்கும் வகையில் இருந்ததோ, இல்லையோ காட்சிகள் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாதியில் சுமார் அரை மணிநேரத்திற்கு நீளும் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
முந்தைய இந்தியன் படத்தில் ஷங்கர் ஊழலை ஒரு முக்கியப் பிரச்னையாக முன்வைத்தார். ஆனால், 2010க்குப் பிறகு இந்தியாவில் எழுந்த ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், அவை மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம், அவை ஊழல் குறித்த மக்களின் பார்வையில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவை இந்தப் படத்தை ரசிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
அதேபோல, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி போன்ற பொருட்களை விலையில்லாமல் மக்களுக்கு வழங்குவது போன்ற சமூக நலத் திட்டங்களையும் மக்களுக்கு அளிக்கப்படும் லஞ்சமாக இந்தப் படம் காட்டுகிறது.
ஆனால், பாடல் காட்களில் முந்தைய படத்தில் இருந்த பிரமாண்டம் இந்தப் படத்திலும் இருக்கிறது. படத்தின் இறுதியில், இந்தியன் 3-இன் டிரெய்லரை காட்டுகிறார்கள். அந்த டிரெய்லர் சுவாரஸ்யமாக இருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)