இந்தியர்களுக்கு தொப்பை வருவது ஏன்? குறைவாக சாப்பிட்டாலும் எடை கூட என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, இந்தியர்களுக்கு தொப்பை வருவது ஏன்? குறைவாக சாப்பிட்டாலும் எடை கூட என்ன காரணம்?
இந்தியர்களுக்கு தொப்பை வருவது ஏன்? குறைவாக சாப்பிட்டாலும் எடை கூட என்ன காரணம்?

உலகெங்கிலும் மக்களிடையே உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. தற்போது, 100 கோடி பேருக்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளிடையே, பெண்களின் உடல் பருமன் அடிப்படையில் இந்தியா 19-ஆவது இடத்தில் உள்ளது, அதே சமயம் ஆண்களின் உடல் பருமன் அடிப்படையில் 21வது இடத்தில் உள்ளது.

கோவிட், போர் ஆகியவை காரணமா?

காலநிலை மாற்றத்தின் விளைவுகள், கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் யுக்ரேனில் நடந்துவரும் போர் ஆகியவை உலகளவில் உடல் எடை பிரச்னைகளை அதிகரித்துள்ளன.

"இந்தப் பிரச்னைகள் வறுமை நிலையை அதிகரிக்கின்றன அதனால் மக்களால் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள முடிவதில்லை,” என்கிறார் எசாட்டி.

இந்தச் சூழ்நிலைகளால் சில நாடுகளில் குடும்பங்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர், என்கிறார் அவர்.

உலக சுகாதார மையத்துடன் இணைந்து 1,500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 22 கோடி மக்களின் உயரம் மற்றும் எடையை அளந்தனர்.

இதற்காக பாடி மாஸ் இன்டெக்ஸ் அதாவது பி.எம்.ஐ-யை ஒப்பிட்டனர். இது உடல் கொழுப்பை அளவிடுவதற்கான முழுமையான அளவு அல்ல என்று அவர்கள் கருதினாலும், உடல் பருமனை அளவிட பி.எம்.ஐ மிகவும் பிரபலமான அளவீடாக இருந்துவருகிறது.

உடல் பருமன்

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்களுக்கு தொப்பை வருவது ஏன்?

இந்தியாவிலும், தமிழகத்திலும் இன்று காணப்படும் உடல் பருமன் பிரச்னையைக் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நிபுணரான மருத்துவர் அஷ்வின் கருப்பன், இந்தியாவில் இன்று நாம் பார்க்கும் உடல் பருமன் பெரும்பாலும் மரபியல் ரீதியானது (genoidal obesity) என்கிறார்.

அதாவது பெற்றோருக்கு உடன் பருமன் இருந்தால், குழந்தைகளுக்கும் உடன் பருமன் வரும்.

“இந்தியாவில் இது ஆண்களுக்கு தொப்பையாகவும், பெண்களுக்கு தொடை மற்றும் பின்புறமும் பருமனாவதன்மூலமும் வெளிப்படுகிறது. மற்ற நாடுகளில், அவர்களது உயரம் மற்றும் எடைக்கு ஏற்றவாறு அவர்களது உடல் முழுதும் இது பரவியிருக்கிறது,” என்றார்.

இதனால், குறைவாகச் சாப்பிட்டாலும், உடல் எடை கூடுவதை பலரும் அனுபவித்து வருவதாகக் கூறுகிறார் மருத்துவர் அஷ்வின்.

இப்பிரச்னை குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை அனைவருக்கும் இருக்கிறது என்கிறார் அவர்.“பள்ளிக் குழந்தைகளிலிருந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் வரை அனைவரையும் இப்போது உடல் பருமனுக்காகச் சோதிக்கிறோம்,” என்கிறார் அவர்.

இதற்கடுத்த படியாக, உடல் உழைப்பைக் கோராத வேலையும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும், மாறிவிட்ட உணவுப் பழக்கமும் உடல் பருமனுக்கு முக்கியக் காரணங்கள் என்கிறார் மருத்துவர் அஷ்வின்.

“இதனால் உடல் பருமன் பிரச்னை மிகத்தீவிரமான் ஒன்றாக மாறிவிட்டது. 40-50 வயதுக்கு மேல் பெரும்பாலோனார் வாழ்க்கைமுறை மாற்றத்தால் வரும் நோய்களால் அவதிப்படுகிறார்கள்,” என்கிறார் அவர்.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)