'மகளிர் உரிமைத் தொகை உயர்வு, ரூ.5,000 வரவு வைப்பு'- அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், @mkstalin/X
மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் அனைவருக்கும் இன்று (பிப்ரவரி 13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக மீண்டும் ஆட்சியமைத்தால் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது" என முதலமைச்சர் ஸ்டாலின் தமது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள் என அந்த பதிவில் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின், இதனை முந்திக் கொண்டு அளித்திருப்பதாக தமது பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
'தேர்தல் நேரத்து பணம்'- எடப்பாடி பழனிசாமி

"சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது 'தேர்தல் நேரத்து பணம்' வரவு வைக்கும் இந்த வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்ப மாட்டார்கள்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
"'மாதம் 2000 ரூபாய்' என்று அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.
"யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து 'முடக்கப் பார்க்கிறார்கள்' என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது" என முதலமைச்சர் ஸ்டாலினை அவர் விமர்சித்துள்ளார்.
"'அனைத்து குடும்ப அட்டைக்கும்' என்று வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, பல தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்" என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
'எனது அரசியல் வருகையால் கிடைத்த பணம்'- விஜய்

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முதலமைச்சரின் அறிவிப்பை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், "புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும் தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
"வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம் தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்." என்றும் விஜய் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூறுவது என்ன?
மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் அனைவருக்கும் இன்று ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவை மறுபகிர்வு செய்து, "இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன், இந்தப் பணம் மக்களால் உள்ளூர் பகுதியிலும் அதைச் சுற்றியும் தான் செலவிடப்படுகிறது, இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த யுக்தியாகும். முதலமைச்சருக்கு எனது பாராட்டுகள்." எனத் தெரிவித்துள்ளார்.

ஆதரவும் எதிர்ப்பும்

மகளிர் உரிமைத் தொகை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், "மத்திய அரசு மீது பழி போட்டுவிட்டு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னுடைய தோல்விகளுக்கு மத்திய அரசு மீது முதலமைச்சர் பழி போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
"தேர்தலுக்காக மட்டுமே இவர்கள் இதை அறிவித்துள்ளார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பணம் பல பெண்களின் கணக்கில் போய் சேர்ந்துள்ளதற்கு, பிரதமர் தொடங்கிய ஜன்தன் கணக்குகளுக்கும், டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் முதலமைச்சர் நன்றி கூற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், "ஒரே நேரத்தில் ரூ. 5000 மகளிருக்கு கிடைத்திருக்கிறது. இது அவர்களுடைய மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பு" என்று கூறியுள்ளார்.
"காலையிலேயே ஒரு இன்ப அதிர்ச்சியை மாண்புமிகு முதலமைச்சர் கொடுத்து விட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது." என்று விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன், "ஒரு கையில் பணம் கொடுத்து மறு கையில் டாஸ்மாக் மூலம் பணம் பறிக்க முயல்வதையும், அரசியல் சூழ்ச்சியாக ஓட்டு வாங்க அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












