முகமது ஜுபைர்: தமிழக அரசின் மத நல்லிணக்க விருது பெற்ற பிறகு கூறியது என்ன?
ஆல்ட் நியூஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த முகமது ஜுபைருக்கு 2024ஆம் ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பணியை ஆல்ட் நியூஸ் செய்து வருகிறது. இந்நிலையில், போலி செய்திகளைக் கண்டறிவதில் அவரது பங்கைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
விருது வாங்கிய ஜுபைர், “தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்னும் போலிச் செய்தி இந்தியா முழுக்கப் பரவியது. ஆனால், அந்தக் காணொளி தமிழ்நாட்டில் நடக்கவில்லை என நாங்கள் கண்டுபிடித்தோம்.
அவை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற இந்தியாவின் வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களின் பழைய காணொளிகள். அவற்றைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசையும் தமிழர்களையும் விமர்சிக்க சிலர் முயன்றனர்.
தமிழ்நாடு அரசுடன் சேர்ந்து பணியாற்றி அந்தக் காணொளிகளின் உண்மைத்தன்மையைக் கண்டுபிடித்து நாங்கள் அதற்குப் பின்னால் இருந்தவர்களையும் பிடிக்க உதவினோம். எங்கள் பணியை அங்கீகரித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



