You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் 'ஹாங்காங்' திட்டத்தால் இந்த தீவில் வாழும் மக்கள் கலக்கம் ஏன்?
- எழுதியவர், ஜானவீ மூலே
- பதவி, பிபிசி மராத்தி
"இந்தத் தீவுகளில் உள்ள காடு எங்களுக்கு பல்பொருள் அங்காடி போன்றது. காடுகளிலிருந்து தான் எங்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் பெறுகிறோம். அதை நம்பித்தான் நாங்கள் வாழ்கிறோம்." என்கிறார் ஆன்ஸ்டிஸ் ஜஸ்டின்.
மானுடவியலாளரான ஜஸ்டின், இந்தியாவின் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் வளர்ந்தவர்.
இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இது 836 தீவுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
நிகோபார் தீவுகள் என்பது அந்தமான் தீவுகளுக்கு தெற்கே சுமார் 150 கிமீ (93 மைல்) தொலைவில் அமைந்துள்ள பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தீவுக் குழு.
`அச்சுறுத்தல் தரும் மேம்பாட்டு திட்டம்'
நிகோபார் தீவுக்கூட்டத்தின் `கிரேட் நிகோபார்' என்னும் தீவில் பல பில்லியன் ரூபாய் செலவில் 'ஹாங்காங் துறைமுகம் போன்ற' (Hong Kong-like) மிகப்பெரிய மேம்பாட்டுத் திட்டத்தை இந்தியா திட்டமிடுகிறது. கிரேட் நிகோபாரில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது நடுக்கத்தை ஏற்படுத்துவதாக ஜஸ்டின் கூறுகிறார்.
இத்திட்டத்தை 166 சதுர கி.மீ பரப்பளவில், 720 பில்லியன் ரூபாய் (9 பில்லியன் டாலர்) பட்ஜெட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகம், ஒரு மின் நிலையம், ஒரு விமான நிலையம் மற்றும் ஒரு புதிய டவுன்ஷிப் ஆகியவை உருவாக்கப்பட உள்ளன. இவை அனைத்தும் இந்தியப் பெருங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக முக்கியமான உலகளாவிய வர்த்தக பாதைகளுடன் இப்பகுதியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன.
உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றான மலாக்கா ஜலசந்திக்கு அருகில் அமையவுள்ள இந்த திட்டம், சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 30 ஆண்டுகளில் முடிவடையும், அதற்குள் சுமார் 650,000 மக்கள் இந்த தீவில் வசிப்பார்கள் என்று அரசாங்கம் கணித்துள்ளது.
பல பில்லியன் ரூபாய் செலவில் உருவாகும் மேம்பாட்டு திட்டம், இப்பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் பெரிய இலக்கின் ஒரு பகுதியாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்தத் திட்டம், தங்கள் நிலம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை அழித்து விடும் என்று தீவுகளில் வசிக்கும் மக்கள் அஞ்சுகின்றனர்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடிகளின் தாயகமாக விளங்குகின்றன. இங்கு வசிக்கும் ஐந்து பழங்குடியினக் குழுக்கள், "மிகவும் பாதிக்கப்படக் கூடிய இனம் (particularly vulnerable)" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஜாரவாஸ், வடக்கு சென்டினலிஸ், கிரேட் அந்தமானீஸ், ஓங்கே மற்றும் ஷோம்பென் ஆகிய இனக்குழுக்கள் இதில் அடங்கும்.
ஜாரவாஸ் மற்றும் வடக்கு சென்டினலிஸ் குழுக்கள் வெளி உலகோடு தொடர்பற்றவை. ஷொம்பென் இனக்குழுவில் இருக்கும் சுமார் 400 பேர் வெளிப்புற அழுத்தங்கள் காரணமாக தங்கள் வாழ்க்கை முறையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
நாடோடி பழங்குடிகள் (nomadic tribe) என அழைக்கப்படும் இவர்களில், பெரும்பாலோர் காடுகளுக்குள் வாழ்கின்றனர். அவர்களுக்கு தேவையானவற்றை காடுகளில் இருந்து பெறுகின்றனர். அவர்களில் மிகச் சிலரே வெளி உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். எனவே அவர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை.
`முழு வாழ்விடத்தையும் பாதிக்கும்'
"மேம்பாட்டு திட்டத்தால் ஏற்படப் போகும் இழப்பு அவர்களுக்கு மிகப்பெரியளவில் அதிர்ச்சிகரமானதாக இருக்கும்." என்று ஜஸ்டின் கூறுகிறார். இவர் 1985 ஆம் ஆண்டு முதல் இந்த தீவை ஆவணப்படுத்தி வருகிறார்.
"வெளி உலகில் நாம் எதை வளர்ச்சி என்று அழைத்தாலும் இங்கிருக்கும் பழங்குடிகளுக்கு அதில் ஆர்வம் இல்லை. அவர்களுக்கென்று ஒரு பாரம்பரிய வாழ்க்கை இருக்கிறது." என்றார்.
இந்த திட்டத்தால் பெரும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் எழும் என்று சுற்றுச்சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
921 சதுர கிலோமீட்டர் (355.6 சதுர மைல்) பரப்பளவுக்கு பரந்து விரிந்து கிடக்கும் கிரேட் நிகோபார் தீவு, 80% மழைக்காடுகளால் நிறைந்துள்ளது.
இந்த பகுதி 1,800 க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் 800 தாவரங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. அவற்றில் பல தனித்துவமான உயிரினங்கள் ஆகும்.
அரசின் திட்டத்திற்காக 130 சதுர கிமீ அல்லது தீவின் மொத்தப் பரப்பளவில் 14% மட்டுமே எடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது . ஆனால் அவர்கள் குறிப்பிடும் பரப்பளவில் சுமார் 964,000 மரங்கள் உள்ளன. உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
"காடுகளின் ஒரு பகுதி மட்டுமே அழிக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் நீங்கள் உருவாக்கும் உள்கட்டமைப்பு அதிக மாசுபாட்டிற்கு வழிவகுக்கும், இது முழு வாழ்விடத்தையும் பாதிக்கும்" என்கிறார் சூழலியல் நிபுணர் மாதவ் காட்கில்.
இதுகுறித்து கருத்து கேட்க பிபிசி அணுகியபோது, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்கவில்லை.
ஆனால் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகஸ்ட் மாதம், இந்த திட்டம் பழங்குடியினரை "தொந்தரவு செய்யவோ அல்லது இடம்பெயர நிர்பந்திக்கவோ செய்யாது" என்று கூறினார். "சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின் அடிப்படையில், பாதுகாப்பு விதிமுறைகளை இணைத்த பிறகே சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றோம்" என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், அதுகுறித்து இங்கு யாருக்குமே நம்பிக்கை ஏற்படவில்லை.
`இத்திட்டம் பழங்குடிகளுக்கு மரண தண்டனையாக இருக்கும்'
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சமூக அறிவியல் தொடர்பான பல்வேறு துறைகளைச் சேர்ந்த 39 சர்வதேச வல்லுநர்கள், இந்த மேம்பாட்டுத் திட்டம் ஷாம்பன் பழங்குடிக்கு "மரண தண்டனையாக" இருக்கும் என்று எச்சரித்தனர். ஏனெனில் இது அவர்களின் வாழ்விடங்களை அழித்துவிடும் என்று அவர்கசள் கூறுகின்றனர்.
இது ஜஸ்டினுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஷாம்பன் மக்களுக்கு ஒரு தொழில்துறை உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வோ அல்லது வழியோ இல்லை" என்று அவர் கூறுகிறார்.
2004 இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலைகள் அவர்களின் கிராமங்களை அழித்த போது, தீவின் மிகப்பெரிய பழங்குடியினரான நிகோபாரீஸ் இடம்பெயர்ந்தனர். அவர்கள் சந்தித்த அதே அழிவை இந்த குழுவும் சந்திக்கக் கூடும் என்று அவர் கவலைப்படுகிறார்.
பல ஆண்டுகளாக, இம்மக்களை வேறு பகுதிக்கு குடியேற்ற அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
"இங்குள்ள பெரும்பாலான நிகோபாரீஸ் மக்கள் இப்போது உடலுழைப்புத் தொழிலாளிகளாக உள்ளனர். அவர்களின் மூதாதையர் நிலங்களுக்குப் பதிலாக ஒரு குடியேற்றத்தில் தங்கியுள்ளனர்" என்று ஜஸ்டின் கூறுகிறார்.
"பயிர்களை வளர்க்கவோ விலங்குகளை வளர்க்கவோ அவர்களுக்கு இடமில்லை."
இந்த திட்டம் ஷாம்பன் பழங்குடிகளை நோய் தொற்றுகளுக்கு ஆளாக்கக் கூடும் என்ற அச்சமும் உள்ளது.
"வெளி உலகோடு தொடர்பு இல்லாத மக்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு. வெளிபுறத்தில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தட்டம்மை போன்ற நோய்களுக்கு, அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. நோய் தொற்றுகள் பரவினால் அவர்களின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அழிவை சந்திக்கும்" என்கிறார் சர்வைவல் இன்டர்நேஷனல் என்னும் இயற்கை பாதுகாப்பு குழுவின் அதிகாரி ரஸ்ஸல்.
`சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படக் கூடும்'
இந்த திட்டத்தால் மேலும் பல சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படக் கூடும். குறிப்பாக இப்பகுதியின் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்.
பல நூற்றாண்டுகளாக மாபெரும் லெதர்பேக் கடல் ஆமைகளுக்கு கூடு கட்டும் இடமாக கலாத்தியா விரிகுடா உள்ளது. இது தீவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மேம்பாட்டு திட்டத்தில் இங்கு ஏற்படும் விளைவு குறித்து சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
"இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ள இடம் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதி. அங்கு தான் உப்புநீர் முதலைகள் மற்றும் மீன்கள், பறவைகள் ஆகியவை வசிக்கின்றன" என்கிறார் சமூக சுற்றுச்சூழல் நிபுணரான டாக்டர் மணீஷ் சண்டி.
அவை கூடு கட்டும் பகுதிகளும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களும் எடுக்கப்படாது என்று அரசின் அறிக்கை கூறுகிறது.
ஆனால் லெதர்பேக் கடல் ஆமைகள், பவளப்பாறைகள் மற்றும் ராட்சத நண்டுகள் போன்ற பல இனங்கள் இந்த திட்டத்திற்கான அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ள பகுதியில் கூடு கட்டுகின்றன என்று சண்டி கூறுகிறார்.
இந்தத் திட்டம் முடிவடைய 30 ஆண்டுகள் ஆகும் என்றாலும், சுற்றுச்சூழல் மற்றும் தீவின் பழங்குடி மக்களின் வாழ்க்கை ஆகிய இரண்டின் நுட்பமான சமநிலையை பாதிக்காமல் இது எப்படி செயல்படுத்தப்படும் என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படாமல் இருக்க முடியாது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)