You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் கோடையிலும் வெள்ளப்பெருக்கு - அதீத வெப்பத்திற்கும் அதிகப்படியான மழைக்கும் என்ன தொடர்பு?
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு முன்பாக வழக்கத்திற்கு மாறாக வெயில் சுட்டெரித்த நிலை மாறி தற்போது சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை பெய்கிறது.
இது வழக்கமான கோடைக்கால மழைப்பொழிவு தானா? இந்த கோடைக்காலத்தில் இருந்த அதீத வெயிலுக்கும் தற்போதைய அதிகப்படியான மழைக்கும் தொடர்பு இருக்கிறதா? தென்மேற்குப் பருவமழை உரிய காலத்தில் தொடங்குமா?
தமிழகத்தில் கோடைக்காலம்
தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் கோடைக்கால வெப்பம் சமீப காலமாக இயல்பை விட அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த ஆண்டு பதிவான 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை விட ஒரு டிகிரி அதிகரிக்கலாம் என்று முன்னதாக பிபிசி தமிழிடம் பேசியிருந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களில் தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக கரூர், ஈரோடு, சேலம், வேலூர், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தருமபுரி என பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவானது.
அதேநேரத்தில், மறுபுறம் கடந்த சில தினங்களாக கோடை மழையும் அதிகரித்துள்ளதன் காரணமாக குற்றாலம், தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோடைமழை
தமிழகத்தில் கோடைமழையை பொறுத்தவரை இந்த பருவத்தில், இதுவரை 115 மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
இது வழக்கமான மழைதான் என்றும், இதற்கு முன்பே 200 மில்லி மீட்டருக்கு அதிகமாக கூட கோடை மழை பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
“2023இல் கூட அதிகமான மழைப்பொழிவு இருந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடைமழை பொழியும் இடம் மாறுகிறது. அந்த வகையில் இந்த முறை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மழை பொழிந்து வருகிறது” என்று கூறினார் அவர்.
ஆனால், “மூன்று மாத சராசரியை மட்டும் கணக்கில் எடுத்தால் இது அதிகமான மழைப்பொழிவே” என்று கூறுகிறார் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான்.
இந்திய வானிலை மையத்தின் தினசரி மழைப்பொழிவு அளவு தரவுகளை சுட்டிக்காட்டும் அவர், “மார்ச், ஏப்ரலில் சுத்தமாக மழை பொழியாமல், மே ஒன்றாம் தேதி -19 சதவீதத்தில் இருந்த அளவு, இன்று +9 என்ற நிலையை எட்டியுள்ளது. இது நாளை இன்னும் அதிகரிக்கும். மார்ச் 1ஆம் தேதியில் இருந்து மே 1ஆம் தேதி வரை சுத்தமாக மழை இல்லை. ஆனால், மே 5ஆம் தேதியில் இருந்து கடைசி 15 நாட்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்துள்ளது.”
“ஒட்டுமொத்த கோடைகாலத்தை எடுத்துக் கொண்டால் இது குறைவான மழைப்பொழிவுதான். ஆனால், மே மாதம் மட்டும் கணக்கிட்டால் இது அதிகமான மழைப்பொழிவு. ஒரு ஆண்டில் நமக்கு கிடைக்கும் சராசரி மழையே 918 மில்லி மீட்டர் தான். அதில் 10 சதவீதம் கடந்த 15 நாட்களில் மட்டுமே பொழிந்துள்ளது” என்று கூறுகிறார் பிரதீப் ஜான்.
அதீத வெப்பத்திற்கும் அதிக மழைக்கும் தொடர்பு உண்டா?
கோடை மழை என்பது மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் பொழியும் மழை என்று குறிப்பிடும் பாலச்சந்திரன் இந்தாண்டும் இயல்பான அளவே பெய்துள்ளது என்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “வெப்பம் அதிகமாக இருந்தால் கோடை மழை அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. காற்றலைகள் உட்பட மழைப்பொழிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாகவே வெப்பம் அதிகமானால் மழை வரும் என்று அர்த்தம் கிடையாது” என்று கூறினார்.
அதிக வெப்பம் நிலவி, நிலம் வறண்டு போகும்போது மழை பெய்து அதை சமன் செய்யும் என்று கூறும் தனியார் ஆய்வாளர் பிரதீப் ஜானும், வெப்பம் அதிகமாக இருந்ததால் மழை பொழிகிறது என்பது உண்மையல்ல என்கிறார்.
சமீப காலமாக திடீர் வெயிலும், உடனே மழையும் பொழிவதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, அதுதான் வெப்பச்சலன மழை என்று தெரிவித்தார் அவர்.
"வழக்கமாக மே மாதங்களில் வெப்பச்சலன மழை ஏற்படும், எனினும் அது பரவலாக இருக்காது. தற்போது தமிழகத்திற்கு அருகில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்துள்ளது. இந்த தாக்கம் இன்னும் இரண்டு நாட்களுக்கு இருக்கும், அதற்கு பின் மழை குறைந்து விடும்" என்கிறார் பிரதீப் ஜான்.
வெப்பம் பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
மே மாத இறுதியில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் 2024ஆம் ஆண்டிற்கான பருவமழை காலம் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடந்த 19.5.2024 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தாண்டு வழக்கத்தை விட மூன்று நாட்கள் முன்னதாகவே அந்தமான் கடல்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழை, மிதமான மழை உள்ளிட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு, “ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கும் சமீபமாக நிலவி வந்த அதீத வெயிலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? இதனால், எதிர்வரும் பருவமழையில் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வியை பாலச்சந்திரனிடம் முன்வைத்தோம்.
அவர் பேசுகையில், “இப்போது நல்ல வெயில் அடிக்கிறது என்பதற்காக பருவமழை நன்றாக பொழியும் என்று கூற முடியாது. வானிலையை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நிகழ்வை வைத்து கணித்து விட முடியாது. சுற்றுசூழல் மாற்றங்கள், பருவநிலை மாற்றம், இவற்றின் தொடர்ச்சியாக வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் என பல்வேறு காரணிகளை பொறுத்துதான் வானிலையின் இறுதி முடிவு கிடைக்கும்.”
“இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக பருவமழை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில் சில காலகட்டங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கும், சில காலகட்டங்களில் குறைவாக இருக்கும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)