You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயிலர்: ரசிகர்கள் விமர்சனம் - ரஜினி படம் எப்படி இருக்கிறது? - காணொளி
ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் வெளியாகி இருக்கிறது. இதை சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த வகையில் முதல் காட்சிகள் திரையிடப்பட்டன.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரும் நகரங்களில் பல தனியார் நிறுவனங்கள் ”ஜெயிலர்” திரைப்படத்தை முன்னிட்டு, அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன.
சென்னையில் ரோகிணி, காசி உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “ஜெயிலர்”. கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷராஃப், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, தமன்னா பாட்டியா உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
படம் எப்படியிருக்கிறது? ரசிகர்கள் கூறுவது என்ன?
ஜெயிலர் திரைப்படத்தில் பழைய ரஜினியை பார்க்க முடிவதாக கோவையில் ஜெயிலர் திரைப்படம் பார்த்து வந்த தினேஷ் என்ற ரசிகர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"ரஜினியை மிகவும் இளமையாகக் காட்டியிருக்கிறார்கள்" என்று கூறிய அவர், படம் பிரமாண்டமாக இருப்பதாகவும கூறினார்.
"பாபா படத்துக்குப் பிறகு சந்திரமுகியில் ரஜினி எப்படி சிறப்பாக திரும்பி வந்தாரோ, அதேபோல் இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்" என்று கோகுல் என்ற இளைஞர் தெரிவித்தார்.
"குறிப்பிட்ட 20 நிமிடத்துக்கு திரையரங்கமே அதிரும் வகையில் படம் இருந்தது" என்றும் அவர் கூறினார்.
காலத்துக்கு தகுந்தபடி ரஜினியின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மிச்சேல் என்ற பெண் ரசிகர் கூறினார்.
"முதல் பாதி, இடைவேளைக் காட்சி, இரண்டாம் பாகம் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. அனைத்து பாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் நெல்சன் படத்தை செதுக்கியிருக்கிறார். படத்தில் ஏராளமான திருப்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது" என்று சபரீஷ் தெரிவித்தார்.
"ரஜினிக்கு வயதானாலும் நடிப்பில் அவரை யாராலும் தோற்கடிக்க முடியாது. அனிருத்தின் இசை சிறப்பாக இருந்தது " என்று படம் பார்த்து வந்த சரண்யா கூறினார்.
"ட்விஸ்ட் நிறைய இருந்தன. படம் பிரமாதமாக இருந்தது" விக்டோரியா கூறினார்.
ஜெயிலர் திரைப்படம் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி இருக்கிறது.
கொழும்பு நகரில் திரைப்படத்தைப் பார்த்து வந்த ஒரு பெண் படம் சிறப்பாக இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"வயதானலும் குறைவில்லாத மாஸான நடிப்பை ரஜினி கொடுத்திருக்கிறார்." என்று அவர் கூறினார்.
நொடிப்பொழுதில் விற்றுத் தீர்ந்த டிக்கட்டுகள்
வெளிநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னரே “ஜெயிலர்” திரைப்படத்தின் டிக்கட் புக்கிங் தொடங்கியது. புக்கிங் தொடங்கியதுமே ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கட்டை புக் செய்தனர். அதேபோல், இந்தியாவிலும் டிக்கட் புக்கிங் ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே விற்றுத் தீர்த்தன.
பெரும்பாலான ஞாயிறு வரைக்கும் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டன. எனவே, “ஜெயிலர்” திரைப்படம் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தும் என ரசிகர்களும், தியேட்டர் விநியோகஸ்தர்களும் நம்புகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்