You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தசரா விமர்சனம்: நானியின் பான் இந்தியா படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறதா '10 நிமிட பதற்றம்'?
தென்னிந்தியா சினிமாவின் மற்றொரு பான் இந்தியா படமாக நானி நடிப்பில் வெளியாகி இருக்கிறது 'தசரா' திரைப்படம்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தின் மூலம், 'மாஸ் ஹீரோவாக' அகில இந்திய அளவில் தன்னை கொண்டு சென்றுள்ளார் நானி.
தமிழில் வெப்பம், நான் ஈ, ஆஹா கல்யாணம், அடடே சுந்தரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நானியுடன், நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நானி நடித்த படங்களிலே அதிக பட்ஜெட்டில் உருவான 'தசரா' படத்தின் ஊடக விமர்சனம் என்ன சொல்கிறது?
தசரா படத்தின் கதை என்ன?
தெலங்கானாவின் சிங்கரேணி நிலக்கரி சுரங்கப் பகுதியில் உள்ள வீரப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் கதை நடக்கிறது. அந்த ஊரிலுள்ள ஆண்கள் அனைவரும் குடிகாரர்கள். அங்கு மது ஒரு போதை அல்ல, அது ஒரு பாரம்பரியம். 'சில்க் பார்' என்பது மதுக்கடை அல்ல, அரசியலுக்கான களம். பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அந்த பாரில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற சூழல் நிலவுகிறது.
அந்த ஊரில் வாழும் தரணி (நானி), சூரி (தீக்ஷித் ஷெட்டி) வெண்ணிலா (கீர்த்தி சுரேஷ்) ஆகியோர் நண்பர்கள். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே ஒன்றாக இருக்கிறார்கள். சூரி வெண்ணிலாவை காதலிக்கிறார்.
வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்ள, சில்க் பாரில் காசாளர் வேலையில் சேர வேண்டுமென கூறும் அவர் தாயின் பிடிவாதத்தால், சூரியும் தரணியும் காசாளர் வேலையில் சேர்கிறார்கள். அது, இந்த மூவரின் வாழ்க்கையையும் எப்படி புரட்டிப் போடுகிறது, எதிர்பாராத ஒரு சோகம் அவர்களின் வாழ்க்கையை எப்படி அழிக்கிறது என்பதே மீதிக்கதை.
நடிப்பில் நானிக்கு பாஸ் மார்க்கா?
”எதார்த்தமான நடிப்புக்காக அறியப்படும் நானி, தசரா படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். அப்பாவியாக வந்து இடைவேளைக்கு பிறகு ரத்தம் தெறிக்க அடிதடி செய்கிறார் நானி” என்று தினமலர் இந்த படத்திற்கு விமர்சனம் வழங்கியிருக்கிறது.
”காதல் படங்களில் தோன்றி ரசிகைகளின் மனதில் இடம்பெற்று இருந்த நானி, தசரா படத்தில் நண்பனின் சாவுக்கு காரணமானவர்களை தேடித்தேடி பழிவாங்கும் வெறி பிடித்த மனிதராக வந்து மனதில் நிற்கிறார்” என்று ஏபிபி நாடு இணையதளம் விமர்சனம் வழங்கியிருக்கிறது.
”இதற்கு முந்தைய படங்களில் வந்த நானியை தசரா படத்தில் பார்க்க முடியவில்லை, ஒவ்வொரு காட்சியிலும் புது நானியாக தெரிகிறார். தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு தரணி கதாபாத்திரமாக நானி வாழ்ந்து இருக்கிறார்” என்று பிபிசி தெலுங்கு விமர்சனம் வழங்கியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் ஈர்க்கிறா?
பால்வாடி டீச்சராக வெண்ணிலா கதாப்பாத்திரத்தில் வரும் கீர்த்தி சுரேஷை கருப்பாக காட்ட வேண்டும் என்று கருப்பு மேக்கப் போட்டிருக்கிறார் இயக்குநர். மற்றபடி, நானிக்கு போட்டியாக கீர்த்தியும் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ், பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனமாடுகிறார். கணவனின் அட்டூழியங்களை சகித்துக்கொண்டும், இன்னொரு பெண்ணுக்கு அநீதி இழைக்கக்கூடாது என்று நினைக்கும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் கச்சிதமாக பொருந்துகிறார் என்று பிபிசி தெலுங்கு இணையதளத்தில் எழுதப்பட்டுள்ளது.
படத்தில் இருக்கும் சாய்குமாரும், சமுத்திரகனிக்கும் பெரிய வேலை இல்லை. நண்பர் கதாபாத்திரமாக வரும் தீக்சித் ஷெட்டி, கச்சிதமாக பொருந்திப் போகிறார் என்று ஏபிபி இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
நண்பனாக வரும் கேரக்டரில் தீக்சித் ஷெட்டி சிறப்பாக நடித்துள்ளார். சாய்குமார் கதாபாத்திரம் மிஸ் காஸ்டிங் செய்யப்பட்டு இருக்கிறது என்று பிபிசி தெலுங்கு எழுதியுள்ளது.
வில்லனாக வரும் ஷைன் டாம் சாக்கோ, காமக் கொடூரனாக நடித்திருக்கிறார் என்று தினமலரும், அவரது நடிப்பு அபாரம் என்று ஏபிபியும் எழுதியிருக்கிறது.
தொழில்நுட்ப நேர்த்தி
சில எளிய கதைகள் திறமைசாலிகளின் கைகளில் எப்படி மாறும் என்பதற்கு 'தசரா' ஒரு சிறந்த உதாரணம். இசை, ஒளிப்பதிவு, புரொடக்சன் டிசைனிங், செட் வொர்க் என அனைத்தும் நூறு சதவீதம் நியாயம் செய்துள்ளது.
படம் முழுக்க நிலக்கரி சுரங்கத்தை சுற்றி கதை அமைக்கப்பட்டு இருப்பதால், கருப்பு நிறம் படத்தில் பிரதானமாக வருகிறது.
தெலுங்கானாவின் மரபுகள் வலுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கானாவின் வட்டார வழக்கை படத்தின் அனைத்து கதாப்பாத்திரங்களும் பேசுகின்றனர் என்று பிபிசி தெலுங்கு இணையதளம் எழுதியுள்ளது.
சில்க் ஸ்மிதாவின் பெயிண்டிங் இருக்கும் பார், நிலக்கரி சுரங்கத்தை சுற்றி இருக்கும் கிராமம் என படத்தில் கலை இயக்குநர் சிறப்பாக பங்களித்து இருக்கிறார். அவருடன் சேர்ந்து சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் குறிப்பிடத்தக்கவை என்று தினமலர் இணையதளம் விமர்சனம் வழங்கி இருக்கிறது.
அந்த பத்து நிமிடம்…
பிரபலமான சில்க் பாரை பற்றிச் சொல்லி இந்தக் கதையைத் தொடங்குகிறார் இயக்குநர். அந்த ஊர் மக்கள் எந்த அளவுக்கு மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை விளக்கி, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வெளிப்படுத்தி மெதுவாக கதைக்குள் இழுக்கிறார். தரணி, சூரி, வெண்ணிலாவின் குழந்தைப் பருவம் மற்றும் அவர்களது காதல் கதையை முடிந்தவரை சுருக்கமாகச் சொல்ல முயன்றார். அந்த ஊரின் அரசியலை அறிமுகப்படுத்தினார். இவை அனைத்தும் முதல் 10 நிமிடங்களில் நடக்கும்.
இந்த மூன்று நண்பர்களும் பெரியவர்கள் ஆனதும், நட்பிற்காக தரணி செய்யும் தியாகம், கேஷியர் பதவிக்கு கிரிக்கெட் மேட்ச் விளையாடுவது, பாரில் சண்டை போடுவது என கதை வேகமாக நகர்கிறது.
இடைவெளி நெருங்கும் காட்சி அமைப்பு உச்சம் அடைகிறது. அந்த பத்து நிமிடத்திற்குள் பயம், சஸ்பென்ஸ், வலி என அனைத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
ரத்தம், துரத்தல், பழிவாங்கல் என இந்த 10 நிமிட காட்சியை இயக்குநரும், நானியும் உறுதியாக நம்பி இருக்கின்றனர் என்று பிபிசி தெலுங்கு எழுதியுள்ளது.
ஆனால் இரண்டாவது பாதியில் வரும் “மைனரு வேட்டிக் கட்டி” பாடல் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளது. முழு வேகத்தில் ஆக்சன் காட்சிகள் செல்லும் போது, இந்த பாடல் அதன் வேகத்தை குறைக்கிறது.
இந்த பாடல் முதல் பாதியில் கீர்த்தியின் திருமணத்தின் போது வந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பிபிசி தெலுங்கு குறிப்பிட்டுள்ளது.
காந்தாரா, கேஜிஎஃப் சாயல்
இந்தப் படம் சுகுமாரின் படம், சில விஷயங்களில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது குருவை பின்பற்றி இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ரங்கஸ்தலம் படத்தில் வந்த குறிப்புகள் இதில் காணப்படுகின்றன.
நரகாசுரனை வதம் செய்யும் கருப்பொருளுடன் தசரா பின்னணியை நன்றாக பயன்படுத்தியுள்ளார் அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா. ஆயினும், ஒரு இடத்தில் இது 'காந்தாரா' படத்தின் சாயலுடன் ஒத்துப் போகிறது.
இயக்குநராக ஸ்ரீகாந்த் ஒடேலா தான் விரும்பியதை தொழில்நுட்பக் குழுவிடம் பெற்றுள்ளார். இந்த விஷயத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார் என்று பிபிசி தெலுங்கு குறிப்பிட்டுள்ளது.
சுரங்கத்தை மையமாக வைத்து வந்த கேஜிஃப், மைக்கேல், பத்து தல படங்களில் வரிசையில் தசராவும் சேர்ந்துள்ளது. ஆக்சன் படமா, காதல் படமா என பல இடங்களில் இயக்குநர் குழம்பி இருக்கிறார் என்று தினமலர் விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கத்தை சுற்றி வாழும் மக்கள், கருப்பு நிற மேக்கப் என கேஜிஎஃப் படத்தை போல தசரா இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி நம்புவது போல இல்லை என்றாலும், அபாரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஏபிபி இணையதளம் விமர்சனம் வழங்கியிருக்கிறது.
நானியின் நடிப்பில் பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகி இருக்கும் நிலையில், பிபிசி தெலுங்கு இணையதளம் தன்னுடைய விமர்சனத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளது.
"பான் இந்தியா அம்சங்கள் இருக்கிறதா எனக் கேட்டால் திருப்தியான பதில் கிடைக்காது. அப்படி பான் இந்தியா அளவில் பிரகாசிக்க ஒரு அதிசயம் நடக்க வேண்டும்."
(குறிப்பு: பிபிசி தெலுங்கு இந்த படத்திற்கு வழங்கி இருக்கும் விமர்சனம், சாஹிதி என்ற கட்டுரையாளர் பிபிசி தெலுங்கு இணையதளத்திற்காக எழுதிய கட்டுரையில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்