You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் 'விடுதலை': நடிகர் சூரியின் 'ரிஸ்க்'கை சிலாகிக்கும் நெட்டிசன்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள விடுதலை பாகம்-1 திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள மேக்கிங் வீடியோவில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகளில் நடிகர் சூரி துணிச்சலாக ரிஸ்க் எடுத்திருப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்த இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பு விடுதலை பாகம்-1. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் 2 பாகங்களாக உருவாகிறது.
எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரியும், எதிர்மறையான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், நாயகியாக பவானி ஸ்ரீயும் நடித்துள்ளனர். அவர்களுடன் கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். அடர்ந்த காடுகளில் பெரும் பொருட்செலவில் படம் பிடிக்கப்பட்டுள்ள படத்திற்கு இசை இளையராஜா.
தேசிய விருதுகளையும், வணிக ரீதியாக வெற்றிகளையும் குவித்த இயக்குநர் வெற்றிமாறன், அசுரன் படத்தின் அசுர வெற்றிக்குப் பின்னர் இயக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அதிலும், நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரிகதையின் நாயகனாக நடிப்பார் என்று அவர் அறிவித்த போதே, 'இந்த படம் எப்படி இருக்கும்?' என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் விதைத்துவிட்டது.
சிறிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், கதை விவாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டு 2 பாகங்கள் கொண்டதாக விரிவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட்டும் கூட பெரிதாகிவிட்டதாக ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறனே தெரிவித்தார்.
யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட விடுதலை பாகம் ஒன்று படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா எழுதி, தானே பாடிய 'வழி நெடுக காட்டுமல்லி' பாடல் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
டிரெய்லர், பாடல், ஆடியோ வெளியீட்டு விழா போன்றவற்றால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை எகிறச் செய்த விடுதலை பாகம் -1 திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த மேக்கிங் வீடியோவில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் காட்சிகளும், படப்பிடிப்பின் போது அவர்களுக்கு வெற்றிமாறன் சொல்லிக்கொடுப்பது, நடித்துக் காண்பிப்பது போன்ற க்ளிப்பிங்குகளும் இடம்பெற்றிருக்கின்றன.
சண்டைக் காட்சிகளில் நடிகர் சூரி எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்பது இந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது.
ட்ரெய்லரின் ஒரு காட்சியில் துப்பாக்கியோடு வீட்டின் ஓடு மேல் அவர் டைவ் அடிக்கும் காட்சி அவருக்கு பெரும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது. அந்த சீனை அவர் எப்படி நடித்தார் என்பது குறித்த க்ளிப்பிங்குகள் இந்த மேக்கிங் வீடியோவில் இருக்கின்றன. அதனைப் பார்த்த ரசிகர்கள் சூரியை பாராட்டுவதுடன், இந்தப் படம் சூரிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சினிமாவில் ஒரு காட்சியில் கூட்டத்தில் ஒருவராக தலைகாட்டி, பின்னர் துணை நடிகராக, நகைச்சுவை நடிகராக படிப்படியாக வளர்ந்த சூரி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இது. முதல் படமே அவருக்கு தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறனின் படமாக அமைந்திருக்கிறது. அதுவும், இயக்குநரின் தேர்வாக நடிகர் சூரி அமைந்தது சிறப்பு. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ள நிலையில், அவர் தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
நண்பரும், சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து சாதித்தவருமான நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். ‘கூழாங்கல்’ பட புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்தின் முதல் பார்வை வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்