You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேலுடன் மோதும் ஹெஸ்பொலா இயக்கத்தின் வலிமை என்ன?
லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு நடந்த நாள் இதுதான்.
2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இந்த தாக்குதல் காரணமாக லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.
அதேநேரத்தில், ஹெஸ்பொலா 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் அதிகரித்து வரும் சூழலில், இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஹெஸ்பொலா என்றால் என்ன?
`ஹெஸ்பொலா’ என்பது ஒரு ஷியா முஸ்லிம் அமைப்பு. இது அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க அமைப்பாகவும் உருவெடுத்துள்ளது. இது லெபனானில் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதப்படையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
1980களின் முற்பகுதியில் இஸ்ரேலை எதிர்ப்பதற்காக பிராந்தியத்தின் மிகவும் மேலாதிக்க ஷியா சக்தியான இரானால் நிறுவப்பட்ட அமைப்பு தான் `ஹெஸ்பொலா’ . அந்த நேரத்தில், அங்கு நடந்த உள்நாட்டுப் போரின் போது, இஸ்ரேலின் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்திருந்தன.
ஹெஸ்பொலா 1992 ஆம் ஆண்டு முதல் தேசிய தேர்தல்களில் பங்கேற்று ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாறியது. அதன் ஆயுதப் பிரிவு லெபனானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
2000ஆம் ஆண்டில் லெபனானில் இருந்து இஸ்ரேலை வெளியேற்றியதற்காக ஹெஸ்பொலா பாராட்டுகளைப் பெற்றது.
அப்போதிருந்து, தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா ஆயிரக்கணக்கான வீரர்களுடன் ஒரு பெரிய ஏவுகணை உள்பட ஆயுதக் கிடங்கை பராமரித்து வருகிறது.
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலின் இருப்பை அது தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இது மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல், வளைகுடா அரபு நாடுகள் மற்றும் அரபு லீக் ஆகியவற்றால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு, ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஒரு தீவிரமான போர் வெடித்தது. ஹெஸ்பொலா எல்லை தாண்டி தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து போர் சூழல் உருவானது.
அந்த சமயத்தில் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்து சென்றது. ஹெஸ்பொலாவிடமிருந்து வரும் அச்சுறுத்தலை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
இருப்பினும், அந்த அமைப்பு முழுமையாக அழிக்கப்படவில்லை. அது மீண்டும் உயிர் பெற்று, அதன் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய மற்றும் சிறந்த ஆயுதங்களுடன் பரிணமித்தது.
ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா யார்?
`ஷேக் ஹசன் நஸ்ரல்லா’ ஒரு ஷியா மதகுரு ஆவார், அவர் 1992 முதல் ஹெஸ்பொலாவை வழிநடத்துகிறார். அதை ஒரு அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றியதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அவர் இரான் மற்றும் அதன் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்.
1981 ஆம் ஆண்டு, இரானின் முதல் உச்ச தலைவர் அயதுல்லா ருஹோல்லா கமேனி அவரை லெபனானில் தனது தனிப்பட்ட பிரதிநிதியாக (personal representative) நியமித்த போது அவர்களின் நெருங்கிய நட்பு தொடங்கியது.
நஸ்ரல்லா பல ஆண்டுகளாக பொது வெளியில் தோன்றவில்லை, இஸ்ரேலால் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் வெளியே வருவதில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் ஹெஸ்பொலா அமைப்பின் மதிப்புக்குரிய தலைவராக இருக்கிறார். ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி உரைகளை வழங்குகிறார்.
ஹெஸ்பொலா எவ்வளவு சக்தி வாய்ந்தது?
ஹெஸ்பொலா அமைப்பு, உலகில் அதிக ஆயுதம் ஏந்திய, அரசு சாரா ராணுவப் படைகளில் ஒன்றாகும். இது இரானால் நிதியுதவி மற்றும் ஆயுதங்களை பெறுகிறது.
ஷேக் ஹசன் நஸ்ரல்லா தன்னிடம் 100,000 போராளிகள் இருப்பதாகக் கூறினார். இருப்பினும் சுயாதீன மதிப்பீடுகள் 20,000 முதல் 50,000 வரை இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன.
அவர்களில் பலர் நன்கு பயிற்சி பெற்றவர்கள் மற்றும் போர் அனுபவம் உள்ளவர்கள். சிரிய உள்நாட்டுப் போரில் பங்குப் பெற்றவர்கள்.
ஹெஸ்பொலா 120,000-200,000 ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான சிந்தனைக் குழு (Center for Strategic and International Studies) தெரிவித்துள்ளது.
அதன் ஆயுத சேகரிப்பின் பெரும்பகுதி தரையில் இருந்து மற்றொரு தரை இலக்கை தாக்கும் சிறிய ரக ராக்கெட்டுகள் ஆகும். விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இஸ்ரேலின் உள் பகுதி வரையிலும் சென்று தாக்கும் திறன் கொண்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
காஸா பகுதியில் ஹமாஸ் வசம் இருப்பதை விட இங்கு மிகவும் நுட்பமான ஆயுதங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
ஹெஸ்பொலா - இஸ்ரேல் போர் மூளுமா?
இஸ்ரேல் மீதான ஹமாஸின் முன்னறிவிப்பில்லா தாக்குதல் நிகழ்ந்து ஒரு நாள் கழித்து அக்டோபர் 8 அன்று, பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலிய நிலைகளை நோக்கி ஹெஸ்பொலா துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனை தொடர்ந்து இருதரப்புக்கும் இடைப்பட்ட மோதல்கள் தீவிரமடைந்தது.
அப்போதிருந்து, வடக்கு இஸ்ரேல் மற்றும் கோலன் குன்றுகளில் இஸ்ரேலிய நிலைகள் மீது ஹெஸ்பொலா ராக்கெட்டுகளை ஏவியது, கவச வாகனங்கள் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை (anti-tank missiles) வீசியது மற்றும் வெடிக்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் ராணுவ இலக்குகளைத் தாக்கியது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) லெபனானில் உள்ள ஹெஸ்பொலா நிலைகளுக்கு எதிராக விமானத் தாக்குதல்கள் மற்றும் டாங்கிகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைப் பயன்படுத்தி பதிலடி கொடுத்தன.
மோதல்கள் இருந்த போதிலும், இதுவரை இரு தரப்பும் முழு அளவிலான போரில் ஈடுபடவில்லை. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் இருதரப்புக்கும் இடையிலான மோதல்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)