சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படத்தில் கூட இடம்பெற்ற பாரதியார் வரிகள் எவை தெரியுமா?

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படத்தில் கூட இடம்பெற்ற பாரதியார் வரிகள் எவை தெரியுமா?
    • எழுதியவர், அம்ரிதா பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்

இன்று (டிசம்பர் 11) மகாகவி, தேசியகவி என்றெல்லாம் அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம். தேச பக்தி, பெண்ணுரிமை, சமூக சீர்திருத்தம் போன்ற முக்கிய தலைப்புகளின் கீழ் அவர் எழுதிய பல பாடல்கள் திரைப்படங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு திரை இசைப் பாடல்களாக பிரபலமான பாரதியாரின் 10 பாடல்வரிகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

1. சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் வரிகள் பாரதியாரின் 'கண்ணம்மா - என் காதலி' என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. இது கண்ணன் பாட்டு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தில் வலுவான பின்னணி இசை எதுவும் இல்லாமல், வெறும் சுருதியுடன் ஒலிக்கும் இப்பாடலை ஹரிஹரன் பாடியிருப்பார்.

இப்படத்தில் ஐஷ்வர்யா ராய் நடித்த கதாபாத்திரமான மீனு, ஒரு தீவிர பாரதியார் ரசிகராகக் காட்டப்படுவார். தனது காதலன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கொட்டும் மழையில் நின்று அவரது சகோதரியிடம் விவரித்துக் கொண்டிருப்பார்.

அப்போது இந்தப் பாடலை பாடியபடி அப்பாஸ் கதாப்பாத்திரம் மீனுவை நோக்கி வருவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தக் காட்சியே இருவருக்கும் இடையேயான குறுகியகால காதல் கதையின் தொடக்கமாக இருக்கும்.

பாரதியார், பாரதி பிறந்தநாள், கவிஞர் பாரதியார்
படக்குறிப்பு, தனது மனைவி செல்லம்மா உடன் பாரதி

2. கண்ணம்மா என் காதலி

விஜய் சேதுபதி, டி. ராஜேந்திரன் நடிப்பில் வெளியான கவண் படத்தில் இந்த பாடல் இடம்பெற்று இருக்கும். பாரதியாரின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' மற்றும் 'கண்ணம்மா – என் காதலி' ஆகிய பாடல்களில் இருந்து சில வரிகளை எடுத்து இப்பாடலை ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஆதி மெட்டு அமைத்திருப்பார்.

இப்படத்தில் காட்டப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வரும் இந்த பாடல் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. முதலில் கிட்டார், ட்ரம்ஸ் போன்ற இசைக்கருவிகளுடன் 'ராக்' இசை பாணியில் தொடங்கும், அடுத்து 'ஓப்ரா' பாடல் போல் உருவெடுத்து பின்னர் ஒரு நாட்டுப்புற பாடலாக நிறைவடையும். பாரதியாரின் வரிகளை இந்த ஒரே பாடல் மூலம் மூன்று இசை வகையில் ஆதி இசையமைத்து இருப்பார்.

3. காற்று வெளியிடை கண்ணம்மா

இது பாரதியாரின் மிகவும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. இந்த வரிகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே திரைப்பட பாடலாக பயன்படுத்தப்பட்டாலும், பல்வேறு இசை ஆல்பங்களிலும் இன்று வரை மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில், ஜி. ராமநாதன் இசையில் இந்த கவிதை வரிகள் முதலில் பாடலானது. ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி இடையேயான இந்த டூயட் பாடலை பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா ஆகியோர் பாடியுள்ளனர்.

2017-ஆம் ஆண்டு, இந்த கவிதை வரிகள், நவீன இசைக்கருவிகளை வைத்து உருவாக்கிய ஒரு ஆல்பம் பாடலாக வெளியானது. பி. பிரசன்னா என்பவரின் இசையில் முன்னணி பாடகர்கள் பிரதீப் குமார், ஷக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

மேலும் சுயாதீன இசைக் கலைஞர் சியன்னாரும், வெறும் தாளம் மற்றும் மெல்லிய கிட்டார் இசை கொண்டு மிகவும் எளிமையான முறையில் இவ்வரிகளுக்கு வேறு வகையில் மெட்டு அமைத்துள்ளார்.

பாரதியார், பாரதி பிறந்தநாள், கவிஞர் பாரதியார்

பட மூலாதாரம், Modern Cinema

படக்குறிப்பு, கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வரும் காற்று வெளியிடை கண்ணம்மா பாடல்

4. அக்னி குஞ்சொன்று கண்டேன்

பாரதியாரின் புரட்சிகர பாடலான 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' என்ற வரிகளானது, உறியடி படத்தில் ஒரு பின்னணிப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு மசாலா காப்பி குழு இசையமைத்துள்ளது.

ஒரு சாதாரண இளைஞர், எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒருவராக உருவெடுக்கும் தருணத்தில் இப்பாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும். ராக் மற்றும் நாட்டுப்புற இசை போன்ற பாணியில் இப்பாடலுக்கு மெட்டமைத்து இருப்பதும், பாரதியாரின் வரிகளும் கேட்பவர்களுக்கு மெய்சிலிர்க்கும் உணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும்.

5. அச்சமில்லை அச்சமில்லை

சுதந்திர போராட்டத்தின்போது பாரதியார் எழுதிய இந்த பாடலின் முதல் சில வரிகள் பல்வேறு பாடல்களின் முதல்வரியாக அமைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு வெளியான இந்திரா படத்தில் இந்த வரிகளை உந்துதலாக வைத்து, "அச்சம் அச்சம் இல்லை", என்று வைரமுத்து எழுதியிருப்பார். இது பாரதியாரின் வரிகளை பாடலை கேட்பவர்களுக்கு நினைவூட்டும்.

மேலும் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 படத்திலும் 'அச்சமில்லை' என்ற பாடலின் தொடக்கத்தில் பாரதியின் இந்த பாடலின் ஒரு சில வரிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதே பாடல், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்திலும் இடம்பெற்று இருக்கும்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது மகளிடம் பயமில்லாமல் துணிச்சலுடன் இருக்கவேண்டும் என்பதை இந்த பாடலை பாடிக்காட்டி சொல்லிக்கொடுப்பதாக அந்த காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த காட்சி அப்படத்தின் டிரெய்லரிலும் இடம்பெற்றிருந்தது.

மேலும் ஒரு மோதலுக்கு முன்பு, இந்த பாரதியார் வரிகளை சக ராணுவ வீரர்களுடன் சேர்ந்து மேஜர் முகுந்த் பாடுவதாகவும் ஒரு காட்சி அமரன் படத்தில் இடம்பெற்று இருக்கும்.

பாரதியார், பாரதி பிறந்தநாள், கவிஞர் பாரதியார்

பட மூலாதாரம், Music Studio

படக்குறிப்பு, இந்திரா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அச்சம் அச்சம் இல்லை' பாடல்

6. காக்கை சிறகினிலே நந்தலாலா

பாரதியாரின் மிகவும் பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று. 1982-ஆம் ஆண்டு, வெளியான ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்று இருக்கும். கே.ஜே. யேசுதாசின் ரம்மியமான குரலில் ஓரிரு இசைக்கருவிகளின் பின்னணி இசையில், இப்பாடல் ஒலிப்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களிலும் பாரதியார் வரிகளே பயன்படுத்தப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கது.

7. நல்லதோர் வீணை செய்தே

1980-ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பாரதியாரின் இந்த வரிகள் திரையிசை பாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும். எம். எஸ். விஸ்வநாதன் இசையில், எஸ். பி. பாலசுப்பிரமணியம் இப்பாடலை உணர்வுப்பூர்வமான முறையில் பாடியிருப்பார்.

தனது திறமைகள் வீணாகப் போய்விடக் கூடாது என்பதற்காக, கடவுளிடம் விவாதிப்பது போல இந்த வரிகளை பாரதியார் எழுதி இருப்பார்.

இந்தப் படத்தில், கமல் ஹாசன் நடித்துள்ள ஹீரோ கதாப்பாத்திரம், வறுமையிலும், வேலை தேடும் போராட்டத்திலும் இருக்கும்போது, அவரது மன உறுதியையும், ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப் வரிகள் பாடலாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த கதாபாத்திரமும் பாரதியார் ரசிகராக சித்தரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார், பாரதி பிறந்தநாள், கவிஞர் பாரதியார்

பட மூலாதாரம், Music Studio

படக்குறிப்பு, வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் நல்லதோர் வீணை செய்தே பாடல்

8. நெஞ்சு பொறுக்குதில்லையே

சமுதாயத்தை குறித்து பாரதியார் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடல் தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் முக்கியமான படமாக அமைந்த பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். 1952-இல் வெளியான இப்பாடலை ஆர். சுதர்சனம் இசையில், சி. எஸ். ஜெயராமன் பாடியிருப்பார்.

இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் கதாப்பாத்திரம், குடும்ப வறுமை, பிரிவினை மற்றும் சமூகம் அநீதியால் சிதைவதைக் கண்டு, மிகுந்த வேதனையுடன் இந்தப் பாடலை உரத்த குரலில் பாடுவதாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்.

9. தீராத விளையாட்டு பிள்ளை

பாரதியாரின் கண்ணன் பாட்டு தொகுப்பில் இடம்பெற்றுள்ள மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக இந்த தீராத விளையாட்டு பிள்ளை பாடல் அமைந்துள்ளது. 1948-ஆம் ஆண்டு வெளியான வேதாள உலகம் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். ஆர். சுதர்சனம் இசையில், டி. கே. பட்டம்மாள் இப்பாடலை பாடி இருப்பார்.

இந்தப் பாடலில், பாரதியார் கண்ணனை ஒரு குறும்புக்கார குழந்தையாகவும் நண்பராகவும் பாவித்து அவரது லீலைகளை இப்பாடலில் குறிப்பிட்டு இருப்பார். ராகங்களின் கலவையாக அமைந்துள்ள இப்பாடல் திரையிசையையும் தாண்டி, பல கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகளில் இன்றுவரை ஒலிக்கும் ஒரு பாடலாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் மற்ற சில பாடல்களுக்கான வரிகளும் பாரதியாரின் பாடல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

10. வந்தே மாதரம்

1961-ஆம் ஆண்டு வெளிவந்த கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பாரதியார் கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்டதே.

அதில் குறிப்பாக, அவரது "வந்தே மாதரம்" என்ற இந்த பாடல் பங்கிம் சந்திர சட்டர்ஜீ எழுதிய இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை அடிப்படையாக வைத்து பாரதியார் தனது பாணியில் தமிழில் ஒரு தேசபக்தி பாடலாக எழுதியிருப்பார். ஜீ. ராமநாதன் இசையில், சீர்காழி கோவிந்தராஜன் இப்பாடலை பாடி இருப்பார்.

வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் இப்படத்தில், விடுதலை போராட்டத்தின்போது மக்களை ஒன்றிணைக்கவும், அவர்களிடம் ஒற்றுமையை வலியுறுத்தும் காட்சிகளில் இந்த பாடல் அமைந்திருக்கும். பின்னாட்களில், இந்த வரிகளானது பல்வேறு இசையமைப்பாளர்களால், பலவிதமாக இசையமைத்து பாடப்பட்டுள்ளது.

சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பள்ளிகளில் நடைபெறும் இசைநிகழ்ச்சிகளிலும் இப்பாடல் நீங்கா இடம்பெற்றுள்ளது.

இதைத்தவிர, 2000-ஆம் ஆண்டு பாரதியாரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட 'பாரதி' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான பாடல்கள் அவரது பாடல் தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கும்

மேலும் காற்று வெளியிடை, வெந்துத்தணிந்தது காடு, சூரரைப் போற்று, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களின் பெயர்களும், மகாநதி, பேட்டை போன்ற திரைப்படங்களின் சில வசனங்களும் பாரதியாரின் கவிதை வரிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு