திராவிட மாடல் - விஜய் பேச்சு குறித்து தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி என்ன சொல்கிறார்?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “திராவிட மாடலின் கொள்கைகளை தமிழக மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று விஜய் பேசியதில் இருந்து தெரிகிறது. அது நகல்தான்.” என்றார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகம், “பாஜகவின் சி டீம்” என்றும் அவர் விமர்சித்தார்.
“தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ஆளுநரை எதிர்த்துப் பேசினால் தான் அரசியலில் எடுபடும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது” என்றார் அவர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து விஜயின் கருத்து குறித்துப் பேசிய அவர், “ஆட்சிக்கு வரட்டும் பார்க்கலாம்” என்றார்.
அதிமுக குறித்து விஜய் பேசாதது குறித்து தெரிவித்த அவர், “அதிமுக தமிழகத்தில் எடுபடாது என்பது தெரிந்திருக்கிறது. அங்குள்ளவர்களை இழுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி பேசாமல் இருந்திருக்கிறார்” என கூறினார்.
திமுக ஆட்சியில் எந்த தவறுக்கும் இடம் கொடுக்கவில்லை என்றும் பெரியார், அண்ணா, திமுக குறித்துப் பேசாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும் ரகுபதி கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



