பஞ்சாப்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தித்து அன்பு காட்டிய சல்மான் கான்

காணொளிக் குறிப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் சந்தித்தார்.
பஞ்சாப்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தித்து அன்பு காட்டிய சல்மான் கான்

இந்த ஒன்பது வயது சிறுவன் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகன்பீர் சிங். ’சின்ன சர்தார்ஜி’ என இந்த சிறுவன் அழைக்கப்பட்டாலும் பெரியவர்களுக்கும் ஓர் உதாரணமாக திகழ்கிறார்.

நான்கு வயதிலேயே இச்சிறுவனுக்கு புற்றுநோய் மற்றும் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அச்சிறுவன் புற்றுநோயுடன் போராடி மீண்டுள்ளார்.

2019-ம் ஆண்டு ஜகன்பீர் மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 7 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஜகன்பீர் பாலிவுட் நடிகர் சல்மான் கானை சந்தித்தது அவருக்கு மறக்க முடியாத தருணமானது.

சல்மான் கானின் பெரிய ரசிகரான இச்சிறுவன், இரண்டு முறை அவரை சந்தித்துள்ளார். கட்டி காரணமாக ஜகன்பீரின் பார்வையும் பறிபோனது. இதனால் முதல்முறை சல்மான் கானை சந்தித்தபோது சிறுவனால் அவரை பார்க்க முடியவில்லை. ஆனால், இரண்டாவது முறை சல்மான் கானை பார்த்ததோடு மட்டுமல்லாமல், சில சிறப்பான தருணங்களையும் செலவழிக்க முடிந்தது.

பிறந்ததிலிருந்து ஜகன்பீர் இப்படி இல்லை எனக்கூறும் அவருடைய குடும்பத்தார், நல்ல ஆரோக்கியத்துடன் அச்சிறுவன் இருந்ததாக கூறுகின்றனர். ஆனால், நான்கு வயதில் ஜகன்பீருக்கு ரத்தப் புற்றுநோயும் கட்டியும் ஏற்பட்டுள்ளது. அந்த கட்டி மும்பை மருத்துவமனையில் அகற்றப்பட்டபோது சிறுவனின் பார்வை பறிபோனது.

மும்பையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னர் எப்படி ஜகன்பீர் தன் வாழ்க்கையை மீண்டும் தொடங்கினான் என்பதை அச்சிறுவனின் தந்தை கூறுகிறார்.

ஜகன்பீருக்கு மீண்டும் பார்வை முழுமையாக கிடைத்தவுடன் தான் மீண்டும் சந்திப்பதாக சல்மான் கான் உறுதியளித்ததாக சிறுவனின் குடும்பத்தார் கூறுகின்றனர். அந்த உறுதிமொழியை சல்மான் கான் காப்பாற்றவும் செய்கிறார். ஜகன்பீர் பரிசோதனைக்காக அவ்வப்போது மும்பைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது, சல்மான்கானின் அமைப்பு ஒன்று, சிறுவனின் குடும்பத்தை தொடர்புகொண்டு ஜகன்பீரை தன் வீட்டில் சந்திக்க அழைத்தார்.

புற்றுநோயிலிருந்து மீண்டுள்ள ஜகன்பீர், அந்த நோயால் பாதிக்கப்பட்ட பலரும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஊக்கத்தை அளிக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)