ஐரோப்பிய கூட்டாளிகளை வழிக்கு கொண்டு வந்தாலும் புதினிடம் எடுபடாத டிரம்பின் அணுகுமுறை

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா, ரஷ்யா, புதின், சீனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆலென் லிட்டில்
    • பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி

இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இணையும் திட்டமிருக்கிறதா என கடந்த மாதம் கேள்வி எழுப்பப்பட்ட போது "நான் அதை செய்யலாம், அல்லது செய்யாமலும் போகலாம். யாருக்கும் நான் என்ன செய்யப்போகிறேன் என்பது தெரியாது," என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இரான் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு வாரம் அவகாசத்துக்கு தான் ஒப்புக்கொண்டிருப்பதாக உலகத்தை நம்பவைத்தார். அதன் பின்னர் அவர் குண்டுவீச்சை நடத்தினார்.

ஒரு பாணி வெளிப்படுகிறது. எளிதாக கணிக்க முடியாத தன்மைதான் டிரம்ப் குறித்து அதிகபட்சம் ஒருவர் கணிக்கக்கூடிய விஷயம். அவர் தனது மனதை மாற்றிக்கொள்கிறார். அவர் அவருக்கே முரணாக இருக்கிறார். அவர் நிலையில்லாமல் இருக்கிறார்.

"ரிச்சர்ட் நிக்சனுக்கு பிறகு குறைந்தபட்சம் வெளியுறவு கொள்கையிலாவது மையமாக்கப்பட்ட கொள்கை முடிவெடுக்கும் அமைப்பை (டிரம்ப்) உருவாக்கியுள்ளார்," என்கிறார் லண்டன் பொருளாதார கல்லூரியான லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பேராசிரியராக இருக்கும் பீட்டர் ட்ரூபோவிட்ஸ்.

"அதனால் கொள்கை முடிவுகள் டிரம்பின் இயல்புகள், அவர் விருப்பங்கள் மற்றும் அவரது மனநிலையை சார்ந்தவையாகின்றன."

டிரம்ப் இதை அரசியலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்; தனது கணிக்க முடியாத தன்மையை அவர் ஒரு முக்கிய உத்தி மற்றும் அரசியல் சொத்தாக மாற்றியுள்ளார். கணிக்க முடியாத தன்மையை அவர் ஒரு கோட்பாடு என சொல்லும் அளவு உயர்த்தியுள்ளார். வெள்ளை மாளிகைக்கு அவர் கொண்டு வந்த இந்த குணாதிசயம் இப்போது வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை முடிவு செய்கிறது.

அது உலகத்தின் கட்டமைப்பையே மாற்றிக்கொண்டிருக்கிறது.

அரசியல் ஆய்வாளர்கள் இதை மேட்மேன் தியரி அல்லது பைத்தியக்கார கொள்கை என அழைக்கின்றனர். தனக்கு வேண்டிய சலுகைகளை பெற, என்ன வேண்டுமானலும் செய்யக்கூடியவர் என தனது விரோதியை நம்பவைக்க ஒரு உலகத் தலைவர் முயற்சிப்பதுதான் இந்த கோட்பாடு. சரியாக பயன்படுத்தப்பட்டால் இது ஒருவகையான நிர்பந்தமாக இருக்கலாம். இந்த கோட்பாடு மிகவும் பலன் அளித்து, அமெரிக்காவின் கூட்டாளிகளை தனக்கு வேண்டிய இடத்தில் நிறுத்துவதற்கு இது பயன்படுவதாக டிரம்ப் நம்புகிறார்.

ஆனால் இந்த அணுகுமுறை எதிரிகளுக்கு எதிராக பயன்படுமா? எதிரிகளை ஏமாற்ற பயன்படுத்தும் ஒரு வித்தையாக இல்லாமல், உண்மையில் அது நன்கு அறியப்பட்ட தெளிவாக ஆவணப்படுத்தப்பட்ட குணாதிசயமாக இருந்து அவரது நடத்தை எளிதாக கணிக்கக் கூடியதாக மாற்றுவதுதான் இந்த கோட்பாட்டின் குறைபாடாக இருக்கக்கூடுமா?

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா, ரஷ்யா, புதின், சீனா

பட மூலாதாரம், Getty Images

தாக்குதல்கள், அவமதிப்புகள் மற்று அரவணைப்புகள்

டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அரவணைத்த அதேநேரத்தில், அமெரிக்க கூட்டாளிகளை விமர்சிக்க தொடங்கினார். அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக வேண்டும் என சொல்லி கனடாவை அவர் அவமதித்தார்.

அமெரிக்காவின் கூட்டாளியான டென்மார்க்கின் சுயாட்சி பெற்ற நிலப்பரப்பான கிரீன்லாந்தை இணைக்க ராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் பரிசீலிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவிதார். பனாமா கால்வாய் உரிமையையும் கட்டுப்பாட்டையும் அமெரிக்கா மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நேட்டோ சாசனத்தின் பிரிவு 5 ஒவ்வொரு உறுப்பு நாடும் மற்ற அனைவரின் பாதுகாப்புக்கும் வரவேண்டும் என பணிக்கிறது. இதற்கான அமெரிக்காவின் உறுதியை டிரம்ப் சந்தேகத்துக்குட்படுத்தினார். பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுச் செயலாளார் பென் வாலஸ் "பிரிவு 5 தற்போது செயற்கை சுவாசத்தில் இருப்பதாக நினைக்கிறேன்," எனக் கூறினார்.

"இப்போதைக்கு டிரான்ஸ்- அட்லாண்டிக் கூட்டணி முடிந்துவிட்டது," என பழமைவாத அட்டர்னி ஜெனரல் டோமினிக் கிரீவ் தெரிவித்தார்.

பொதுவெளியில் கசிந்த தகவல்கள் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு டிரம்பின் வெள்ளை மாளிகையில் இருக்கும் இகழ்ச்சியை வெளிப்படுத்தின. "ஐரோப்பிய ஒட்டுண்ணிகள் மீதான உங்களது வெறுப்பை நான் பகிர்ந்துகொள்கிறேன்," என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தனது உடன் பணிபுரிபவர்களுக்கு செய்தி அனுப்பினார். "PATHETIC" என கொட்டை எழுத்தில் சிறுமைக்குரியவர்கள் என எழுதியிருந்தார்.

ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நாடாக அமெரிக்கா இருக்காது என, மியூனிக்கில் துணை அதிபர் ஜே டி வான்ஸ் அதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார்.

அது 80 ஆண்டுகால டிரான்ஸ் அட்லாண்டிக் ஒற்றுமையில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்ததைப் போல் தோன்றியது. "அமெரிக்காவின் சர்வதேச உறுதிமொழிகள் குறித்து சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியதுதான் டிரம்ப் செய்தது," என்கிறார் பேராசியர் ட்ரூபோவிட்ஸ்.

"அமெரிக்காவுடன் அந்த நாடுகள் (ஐரோப்பாவில் உள்ளவை), பாதுகாப்பு, பொருளாதாரம் அல்லது பிற விவகாரங்களில் என்னதான் புரிதல்களோடு இருந்தாலும், அவையெல்லாம் தற்போது ஒரு வினாடி நேரத்தில் பேச்சுவார்த்தைக்குட்பட்டவை."

"அதிகபட்ச லாபத்தை பெற டொனால்ட் டிரம்பை கணிக்க முடியாத தன்மை அனுமதிக்கிறது என்பதால் டிரம்பின் வட்டத்தில் இருக்கும் பெரும்பாலானவர்கள் கணிக்க முடியாத தன்மையை ஒரு நல்ல விஷயமாக பார்க்கிறார்கள் என்பதுதான் எனது புரிதல்..

"ரியல் எஸ்டேட் துறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தியதில் அவர் பெற்றுக்கொண்டவற்றில் இதுவும் ஒன்று"

டிரம்பின் அணுகுமுறை பலன்களை அளித்துள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னர்தான், பிரிட்டன் பாதுகாப்பு செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% இருந்தது 2.5%ஆக அதிகரிக்கும் என சர் கேர் ஸ்டார்மர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் (பிரிட்டன் நாடாளுமன்ற கீழவை) அறிவித்தார்.

கடந்த மாதம், நேட்டோ உச்சி மாநாட்டில் அதனை 5% ஆக அதிகரிக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இது மிகப்பெரிய அதிகரிப்பு.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா, ரஷ்யா, புதின், சீனா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நாடாக அமெரிக்கா இருக்காது என துணை அதிபர் ஜே டி வான்ஸ் தெரிவித்தார்.

கணிக்க முடியாத தன்மையின் கணிப்புதன்மை

கணிக்க முடியாத தன்மை கோட்பாட்டை பயன்படுத்திய முதல் அதிபர் டிரம்ப் அல்ல. 1968-ல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வியட்நாமில் போரை முடிவுக்குக் கொண்டு வர முயன்ற போது, வடக்கு வியட்நாம் அடக்க முடியாததாக இருப்பதை கண்டார்.

"ஒரு கட்டத்தில் நிக்சன் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கரிடம், 'பேச்சுவார்த்தை நடத்தும் வடக்கு வியட்நாம்காரர்களிடம் நிக்சன் பித்துப்பிடித்தவர், அவர் என்ன செய்வார் என சொல்ல முடியாது, எனவே எல்லாம் மோசமாவதற்கு முன்பாக நீங்கள் ஒரு ஒப்பந்தத்துக்கு வருவது நல்லது என சொல்லுங்கள் என கூறினார்," என்கிறார் நோட்டர் டேம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பேராசிரியராக இருக்கும் மைக்கேல் டேஸ். "அதுதான் மடத்தனமான கோட்பாடு.

தற்போது கணிக்க முடியாத தன்மை கோட்பாடு என்று ஒன்று இருப்பதாக ஒப்புக்கொள்கிறார், ஜூலி நார்மன், லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் அரசியல் பேராசிரியராக இருக்கும் ஜூலி நார்மன்.

"ஒவ்வொரு நாளும் என்ன வருகிறது என்பதை தெரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது," என அவர் வாதிடுகிறார். " அதுவே எப்போதும் டிரம்பின் அணுகுமுறையாக இருந்திருக்கிறது."

டிரான்ஸ் அட்லாண்டிக் பாதுகாப்பு உறவை மாற்றுவதற்கு, மாறும் தன்மை கொண்டவர் என்ற பெயரை டிரம்ப் வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டார். டிரம்பை தங்கள் பக்கம் வைத்துக் கொள்வதற்காக சில ஐரோப்பிய தலைவர்கள் அவரை புகழ்ந்து பேசி தாஜா செய்தனர்.

கடந்த மாதம் நடந்த நேட்டோ உச்சி மாநாடு அடிபணிந்து கவர்வதற்கான ஒரு களமாக இருந்தது. நேட்டோ தலைவர் மார்க் ரூட் முன்னதாக அதிபர் டிரம்புக்கு (அல்லது அன்புக்குரிய டிரம்ப்) ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அதை டிரம்ப் கசியவிட்டார்.

இரான் மீதான உறுதியான நடவடிக்கைக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி. அது உண்மையில் அசாதாரணமானதாக இருந்தது என அவர் எழுதியிருந்தார்.

அனைத்து நேட்டோ உறுப்பினர்களும் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%ஆக அதிகரிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக வரவிருந்த அறிவிப்பு குறித்து அவர், "எந்த அதிபரும் பல பத்தாண்டுகளில் செய்ய முடியாததை நீங்கள் சாதிப்பீர்கள்," என எழுதியிருந்தார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா, ரஷ்யா, புதின், சீனா

பட மூலாதாரம், Reuters

டிரம்பின் முதல் தொடர்புகள் துறையின் இயக்குநராக பணியாற்றிய ஆண்டனி ஸ்காரமுஸி கூறுகையில், " ரூட், அவர் உங்களை அவமானப்படுத்த முயற்சிக்கிறார். அவர் உண்மையில் ஏர் ஃபோர்ஸ் விமானத்தில் அமர்ந்துகொண்டு உங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்." என்றார்.

இதுவே கணிக்க முடியாத தன்மை கோட்பாட்டின் பலவீனமாக இருக்கக்கூடும். டிரம்ப் பாராட்டை விரும்புகிறார் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கைகள் இருக்கலாம். அல்லது அவர் குறுகிய கால வெற்றிகளை தேடுகிறார், நீண்ட சிக்கலான நடைமுறைகளுக்கு மாற்றாக குறுகிய கால வெற்றிகளுக்கு அவர் முக்கியத்துவம் தரலாம்.

இதுவே உண்மையாக இருந்து அவர்களது கணிப்பு சரியாக இருந்தால் , எதிரிகளை ஏமாற்ற வித்தைகளை புரியும் டிரம்பின் ஆற்றலை இது குறைக்கும். நன்கு அறியப்பட்ட, தெளிவாக ஆவணப்படுத்தப்பட்ட குணாதிசயங்களை டிரம்ப் கொண்டிருப்பதை அவர்கள் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா, ரஷ்யா, புதின், சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கணிக்க முடியாத தன்மை கோட்பாட்டை பயன்படுத்திய முதல் அதிபர் டிரம்ப் அல்ல. 1968-ல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வியட்நாமில் போரை முடிவுக்குக் கொண்டு வர முயன்ற போது, வடக்கு வியட்நாம் எதிரி அடக்க முடியாததாக இருப்பதை கண்டார்.

வசீகரம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆட்படாத எதிரிகள்

இந்த கணிக்க முடியாத தன்மை அல்லது மேட்மேன் தியரி எதிரிகளிடம் வேலை செய்யுமா என்கிற கேள்வியும் உள்ளது.

அமெரிக்காவின் கூட்டாளியான யுக்ரேனின் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் வான்ஸ் கடுமையாக நடத்திய பிறகு யுக்ரேனின் கனிம வளங்களை சுரண்டல் செய்யும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க ஸெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார்.

மறுபுறம் விளாடிமிர் புதின் டிரம்பின் வசீகரம் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆட்படாமல் உள்ளார். வியாழன் அன்று புதின் உடனான உரையாடலுக்குப் பிறகு யுக்ரேனுடனான போரை முடிப்பதற்கு புதின் தயாராக இல்லை என்பதால் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார் டிரம்ப்.

இரான் மீதான நிலைப்பாடு என்ன? மத்திய கிழக்கில் நடக்கும் "முடிவில்லாத போர்களில்" அமெரிக்காவின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வருவேன் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் இரானின் அணுசக்தி நிலைகளை தாக்கும் அவரின் முடிவு தான் இரண்டாவது ஆட்சி காலத்தில் அவரின் கணிக்க முடியாத கொள்கை தேர்வாக உள்ளது. அது விரும்பிய விளைவுகளை ஏற்படுத்துமா என்பதே கேள்வி.

அது நேர் எதிரானதைச் செய்யும் என்கிறார் பிரிட்டனின் முன்னாள் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக். அது இரான் அணு ஆயுதத்தைப் பெறுவது மிகவும் சாத்தியப்படுத்துகிறது.

"இப்போது அணு ஆயுதம் தயாரிக்கும் முடிவை இரான் எடுப்பது மிகவும் சாத்தியமானது" என்பது டேஸ் ஒப்புக்கொள்கிறார். மேலும் அவர், "அவர்கள் ரகசியமாக இருந்து தேவையான அனைத்தையும் செய்து ஒரு அணுகுண்டு சோதனையை நடத்தினால் நான் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றார்.

"சதாம் ஹுசைன், கடாஃபியின் முடிவு தந்த பாடங்களை அமெரிக்கா மற்றும் சாத்தியமான ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும் சர்வாதிகாரிகள் மறந்திருக்க மாட்டார்கள்"

"எனவே இறுதி தடுப்புக்கான தேவையை இரானியர்கள் மிகவும் உணர்வார்கள். அவர்கள் சதாம் மற்றும் கடாஃபியை எதிர்மறையான உதாரணங்களாகவும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் ஐ நேர்மறையான உதாரணமாகவும் பார்ப்பார்கள்" என்றார்.

இஸ்லாமிய குடியரசுகளின் ஒருங்கிணைப்பு நடக்கக்கூடிய சாத்தியங்களில் ஒன்று என்கிறார் தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரும் இரானின் எழுச்சி மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்காவுடனான பகைமை என்கிற புத்தகத்தின் ஆசிரியரான மொஹ்சென் மிலானி.

"1980-ல் சதாம் ஹுசைன் இரானைத் தாக்கியபோது அவரின் குறிக்கோள் இஸ்லாமிய குடியரசின் வீழ்ச்சியாக இருந்தது" என்ற அவர், ஆனால், அதற்கு நேர் எதிரானது நடந்தது என்றும் தெரிவித்தார்.

"இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கணக்கும் கூட அது தான். தலைமையில் உள்ளவர்களை அகற்றினால் இரான் விரைவாக சரணடைந்துவிடும் அல்லது ஒட்டுமொத்த அமைப்பும் கவிழ்ந்துவிடும் என்பது தான்"

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா, ரஷ்யா, புதின், சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேட்டோ தலைவர் மார்க் ரூட் உடன் அதிபர் டிரம்ப்

பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கையின் வீழ்ச்சி

முன்னோக்கிப் பார்த்தால் கணிக்க முடியாத தன்மை பகையாளிகளிடம் வேலை செய்யாது, ஆனால் கூட்டாளிகளிடம் சமீபத்தில் பெற்ற நகர்வுகளையும் நிலைத்து வைத்திருக்க முடியுமா என்பதிலும் தெளிவு இல்லை.

சாத்தியம் என்றாலும், இந்த செயல்முறை பெரிதும் உணர்ச்சி வேகத்தில் கட்டப்பட்ட ஒன்று. அமெரிக்கா நம்பிக்கையற்ற இடைத்தரகராகப் பார்க்கப்படலாம் என்கிற கவலையும் உள்ளது.

"அமெரிக்காவின் பேச்சுவார்த்தைகளின் மீது நம்பிக்கை இல்லையென்றால், அமெரிக்கா பாதுகாப்பு விவகாரங்களில் தங்கள் பக்கம் நிற்கும் என்பது உறுதியாக இல்லையென்றால் யாரும் அந்நாட்டுடன் இசைந்து செயல்பட விரும்ப மாட்டார்கள்," என வாதிடுகிறார் பேராசிரியர் நார்மன். "எனவே மாகா (Make America Great Again - MAGA டிரம்பின் பிரசார தரப்பு) உலகத்தினர் விரும்பும் தனிமைப்படுத்துதல் என்பது பின்னடைவை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்" என்றும் தெரிவித்தார்.

ஐரோப்பா தற்போது அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமாக இயங்குவதாக மாற வேண்டும் என ஜெர்மனி ஆட்சி மன்றத் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

"ஜெர்மனி சான்சிலரின் கருத்தின் முக்கியத்துவம் என்பது அமெரிக்காவின் மூலோபாய முன்னுரிமை மாறி வருகிறது என்பதன் அங்கீகாரம் ஆகும்" என்கிறார் ட்ரூபோவிட்ஸ். "டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாக இருந்த முறைக்கு அவர்கள் திரும்பச் செல்லப்போவதில்லை" என்றார்.

"எனவே ஆம், ஐரோப்பா செயல்பாட்டு ரீதியில் மேலும் சுதந்திரமானதாகப் போகிறது" என்று தெரிவித்தார்.

இதற்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது அமெரிக்காவிடம் மட்டும் உள்ள ஆயுதங்கள் மற்றும் திறன்களைப் பெற மிகப்பெரிய ஐரோப்பிய பாதுகாப்பு தொழில்துறையை உருவாக்க வேண்டும் என வாதிடுகிறார் பேராசிரியர் டெஸ். உதாரணத்துக்கு, ஐரோப்பியர்களிடம் சில சிறந்த உலகளாவிய புலனாய்வு திறன் உள்ளது என்றும் கூறும் அவர், அவற்றில் பெரும்பாலும் அமெரிக்கா வழங்கியது என்றும் தெரிவிக்கிறார்.

மேலும் அவர், "ஐரோப்பா, தனித்து செல்ல வேண்டுமென்றால் அதன் ஆயுத உற்பத்தி திறன்களை கணிசமாக அதிகரிப்பது அவசியம். மனிதவளமும் ஒரு சிக்கலாக இருக்கும். மேற்கு ஐரோப்பா, எந்த அளவு மனிதவளம் அவர்களுக்கு தேவைப்படும் என்பதை அறிய போலந்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்" என்றார்

இவை அனைத்தையும் உருவாக்க பல வருடங்கள் தேவைப்படும்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா, ரஷ்யா, புதின், சீனா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பா தற்போது அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமாக இயங்குவதாக மாற வேண்டும் என ஜெர்மனி ஆட்சி மன்ற தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, டிரம்பின் கணிக்க முடியாத தன்மையால் ஐரோப்பியர்கள் பனிப்போரின் முடிவுக்குப் பிறகு மேற்குலகின் பாதுகாப்பு கட்டமைப்பில் மிகவும் வியக்கத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள உண்மையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்களா என்கிற கேள்வி எழுப்படுகிறது.

"அது பங்களித்துள்ளது" என்கிறார் பேராசிரியர் ட்ரூபோவிட்ஸ். மேலும் அவர், "ஆனால் அடிப்படையில் டிரம்ப் ஒன்றை துண்டித்துள்ளார். அமெரிக்காவில் அரசியல் மாறிவிட்டது, முன்னுரிமைகள் மாறிவிட்டன. மாகா கூட்டணிக்கு, ரஷ்யாவை விட சீனா தான் பெரிய பிரச்னையாக உள்ளது. இது ஐரோப்பியர்களுக்கு பொருந்த வேண்டியதில்லை" என்றார்.

மிலானியின் கூற்றுப்படி, டிரம்ப் உலக ஒழுங்கில் அமெரிக்காவின் அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறார்.

"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிறுவப்பட்ட ஒழுங்கை அவர் மாற்றுவதற்கு மிகவும் குறைவான சாத்தியங்களே உள்ளன. அந்த ஒழுங்கில் அமெரிக்காவின் இடத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் விரும்புகிறார். ஏனென்றால் அந்த ஒழுங்கில் அமெரிக்காவின் இடத்துக்கு சீனா சவால் விடுகிறது"

இவை அனைத்தும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்திக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வேறுபடுவதையே காட்டுகிறது.

முகஸ்துதி மற்றும் நிஜ கொள்கை மாற்றங்கள் மூலம் டிரம்பை தங்கள் பக்கம் வைத்துவிட்டோம் என்பதில் ஐரோப்பிய கூட்டாளிகள் திருப்தி அடைந்துகொள்ளலாம். டிரம்ப் நேட்டோ உச்சி மாநாட்டில் பிரிவு 5க்கு தனது உறுதிபாட்டை நிறுவினார். ஆனால் இந்த கணிக்க முடியாத தன்மையின் அர்த்தம் என்பது இதை உத்தரவாதப்படுத்த முடியாது என்பது தான். அவர்களுமே தங்களின் பாதுகாப்புக்கான வரலாற்று உத்தரவாதத்தை அமெரிக்கா காப்பாற்றும் என நம்பிக்கொண்டிருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது.

இந்த நிலையில், கணிக்க முடியாத தன்மை கோட்பாடு பல தெளிவான தேர்வுகள் மற்றும் டிரம்பின் நிஜ குணாதிசயங்களிலிருந்து வந்தாலும், அது குறைந்தபட்சம் சிலர் மீது வேலை செய்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு