போலீஸ் கண்ணெதிரே முன்னாள் எம்.பி.யை சுட்டுக்கொன்ற 3 பேர் பின்னணி என்ன? திட்டம் உருவானது எங்கே?

அருண் மௌரியா, லவ்லேஷ் திவாரி, சன்னி.

இந்த மூன்று பெயர்கள்தான் சனிக்கிழமை இரவில் இருந்து நாளேடுகள் முதல் தொலைக்காட்சி சேனல்கள் வரை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளன.

சனிக்கிழமை இரவு மூன்று இளைஞர்கள் செய்தியாளர்கள் போல மாறுவேடமிட்டு வந்தனர் என்று உத்தர பிரதேச காவல்துறை கூறியது.

இரவு 10.30 மணியளவில், பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு பிராந்திய மருத்துவமனைக்கு வெளியே போலீஸ் ஜீப் நின்றது. அதிக் மற்றும் அஷ்ரஃப் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.

முதலில் அஷ்ரஃப் ஜீப்பில் இருந்து இறக்கி விடப்பட்டார். பிறகு ஒரு காவலரின் உதவியுடன் அதிக் அகமது வெளியே கொண்டு வரப்பட்டார்.

ஜீப்பில் இருந்து இறங்கிய பத்து வினாடிகளுக்குள் அதிக் அஷ்ரஃப் இருவரும் செய்தியாளர்களால் சூழப்பட்டனர். இந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் தாக்குதல் நடத்தியவர்களும் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவ பரிசோதனைக்காக கைவிலங்குடன் அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது.

மருத்துவமனையின் பிரதான வாயிலின் உள்ளே 10-15 அடிகள் சென்றவுடன் ஊடகவியலாளர்கள் அதிக், அஷ்ரஃப் இருவரிடமும் அருகில் வந்து பேச முற்பட்டனர்.

இருவரும் மீடியாவுடன் பேசத் தொடங்கியதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. திடீரென்று ஊடகவியலாளர்களின் கூட்டத்திலிருந்து ஒருவர் தனது கேமராவையும் வேறொருவர் தனது மைக்கையும் விட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்தனர்.

அவர்கள் அதிக்-அஷ்ரஃப்பை குறிவைத்து அதிநவீன செமி ஆட்டோமாட்டிக் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். அப்போது திடீரென மூன்றாவதாக ஒருவரும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

துப்பாக்கிச் சூட்டில் அதிக் மற்றும் அஷ்ரஃப் உயிரிழந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் போலீஸ் தரப்பில் காவலர் மான் சிங்கின் வலது கையில் துப்பாக்கி குண்டு பட்டு காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் உடனடியாகச் செயல்பட்டு ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய மூவரையும் பிடித்தனர். தாக்குதல் நடத்தியவர்களின் கூட்டாளி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டின்போது காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தில் ஏஎன்ஐ செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவருக்கும் காயமேற்பட்டது.

இந்த வழக்கில் ஐபிசியின் 302, 307 பிரிவுகள், ஆயுதச் சட்டம் 1959இன் பிரிவுகள் 3, 7, 25, மற்றும் 27,1932ஆம் ஆண்டின் குற்றவியல் (திருத்தம்) சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதல் நடந்த விதம் பல கேள்விகளை எழுப்புகிறது. சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், தாக்குதல் நடத்தியவர்கள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி பின்னர் போலீசில் சரணடைவதைப் பார்க்க முடிகிறது.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? அவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன? இது திட்டமிட்ட சதியா? மேலும் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் இதற்கு முன் சிறை சென்றுள்ளார்களா?

லவ்லேஷ் திவாரி யார்?

அதிக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 வயதான லவ்லேஷ், உத்தர பிரதேச மாநிலம் பாந்தாவில் உள்ள கேவ்தாரா கிராசிங்கில் வசிப்பவர். இவரது தந்தை பெயர் யக்ய குமார் திவாரி.

லவ்லேஷூக்கு துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பிரயாக்ராஜ் ஸ்வரூப் ராணி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நான்கு சகோதரர்களில் லவ்லேஷ் மூன்றாமவர் என்று குடும்பத்தினர் கூறினர்.

அவர் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை முடிக்கவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லவ்லேஷின் தந்தை, 'அவருக்கும் வீட்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்றார்.

தொலைக்காட்சியில் வந்த செய்திகளைப் பார்த்த பிறகுதான் இந்தச் சம்பவம் குறித்துத் தெரிந்துகொண்டதாக அவர் கூறினார். நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை லவ்லேஷ் வீட்டுக்கு வந்து குளித்துவிட்டுச் செல்வது வழக்கம். அவருக்கும் வீட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.

அவர் ஏற்கெனவே சிறைக்கு சென்றுள்ளார் என்று லவ்லேஷின் தந்தை தெரிவித்தார். "ஒரு பெண்ணை சாலையில் அறைந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கு தொடர்பாக லவ்லேஷ் சிறை சென்றார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் என்ன வேலை செய்கிறார் என்பது குறித்து குடும்பத்தினரிடம் சொல்லமாட்டார் என்று லவ்லேஷின் இளைய சகோதரர் கூறினார்.

”லவ்லேஷ், சங்கட் மோசன் பகவானின் பக்தர். அவனுடைய தலைவிதியில் இப்படி ஏன் எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை,” என்று லவ்லேஷின் தாயார் தெரிவித்தார்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சன்னி சிங் என்ற மோஹித்

அதிக் கொலை வழக்கில், சன்னி சிங் என்ற 23 வயது இளைஞரையும் போலீசார் சம்பவ இடத்திலிருந்து கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் உள்ள குராராவில் வசிப்பவர் சன்னி. சன்னியின் தந்தை ஜகத் சிங் இறந்துவிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய சன்னியின் மூத்த சகோதரர் பிண்டு சிங், 'அவர் ஹமிர்பூரில் பத்து அல்லது பன்னிரெண்டு ஆண்டுகளாக வசிக்கவில்லை' என்று கூறினார்.

தாங்கள் மூன்று சகோதரர்கள் என்றும் அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் பிண்டு கூறினார்.

"சன்னி சட்டவிரோத வேலைகளைச் செய்து வந்தார். அதனால் குடும்பம் அவருடனான உறவை முறித்துக் கொண்டது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அருண் குமார் மௌரியா

18 வயதான அருண் குமார் மௌரியா உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ள காதர்வாடியில் வசிப்பவர். இவரது தந்தை பெயர் தீபக் குமார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவரது சித்தி லட்சுமி தேவி, 'அவர் பல நாட்களாக வீட்டிற்கு வரவில்லை' என்றார்.

கொலைக்கான சதித்திட்டம் எப்படி தீட்டப்பட்டது?

கொலையின் நோக்கம் குறித்துக் கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும், "அதிக் மற்றும் அஷ்ரஃப் கும்பலை ஒழிப்பதன் மூலம் எங்கள் பெயரை மாநிலத்தில் தெரியப்படுத்த விரும்பினோம். எதிர்காலத்தில் எங்களுக்கு இது பயனளிக்கும்," என்று கூறியதாக எப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது.

"காவல்துறையினர் சுற்றி வளைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கொலை செய்துவிட்டு தப்பிக்க முடியவில்லை. காவல்துறை எடுத்த துரித நடவடிக்கையால் நாங்கள் பிடிபட்டோம்."

"அதிக் மற்றும் அஷ்ரஃப், போலீஸ் காவலில் இருப்பது பற்றிய தகவல் எங்களுக்குக் கிடைத்ததில் இருந்து, நாங்கள் ஊடகவியலாளர்களாக மாறுவேடமிட்டு உள்ளூர் ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் இருந்து இந்த இருவரையும் கொல்ல முயன்றோம்," என்றும் அவர் தெரிவித்தனர்.

சிறையில் மூவருக்கும் நட்பு ஏற்பட்டது

தாக்குதல் நடத்திய மூன்று பேரும் சூழ்ச்சித்திறன் கொண்ட குற்றவாளிகள். இவர்கள் மூவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட கடுமையான வழக்குகளில் சிறை சென்றுள்ளனர் என்று ஹிந்தி நாளிதழான 'ஹிந்துஸ்தான்' தெரிவிக்கிறது.

அவர்கள் சிறையில் நண்பர்களானதாக செய்தித்தாள் கூறுகிறது. மூவரும் அதிக், அஷ்ரஃப்பை கொன்று, டான்களாக மாற விரும்பினர்.

ஒரு சிறிய குற்றத்திற்காக சிறை செல்வது தங்களுக்குப் புகழைக் கொடுக்கவில்லை என்று மூவரும் நம்பியதாகவும், அதனால் அவர்கள் ஏதாவது பெரிய காரியத்தைச் செய்ய நினைத்தார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தித்தாள் கூறியது.

அதிக் மற்றும் அஷ்ரஃப் அகமது, போலீஸ் காவலுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதை மூவரும் அறிந்தனர். பெரிய பெயர் சம்பாதிப்பதற்காக மூவரும் கொலை செய்ய திட்டம் தீட்டினர் என்றும் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

மூன்று பேரும் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், தாக்குதலுக்கு முன் வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று நிலைமைகளை மதிப்பிட்டதாகவும் அது மேலும் கூறுகிறது. இதற்குப் பிறகு சனிக்கிழமையன்று, மூன்று பேரும் ஊடகவியலாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொண்டு அதிக் மற்றும் அஷ்ரஃப்பை மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றனர்.

அதிக் அகமதின் குற்ற வரலாறு

அதிக் அகமதின் குற்ற வரலாற்றில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

1979ஆம் ஆண்டு, முதல்முறையாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது அதிக் அகமது மைனர் என்று செய்தியறிக்கை தெரிவிக்கிறது.

பிகாரிலும் அதிக் மீது கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற நான்கு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக 1992ஆம் ஆண்டில், அலகாபாத் காவல்துறை தெரிவித்தது.

1996 முதல் அதிக் அகமது மீது 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பிரயாக்ராஜின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

12 வழக்குகளில், அதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப்பின் வழக்கறிஞர்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.

அதிக் அகமது, பகுஜன் சமாஜ் கட்சியின் MLA ராஜு பால் கொலையில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர். இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐ வசம் இருக்கிறது.

பிப்ரவரி 24 அன்று நடந்த உமேஷ் பால் கொலை வழக்கில் அதிக் அகமது முக்கியக் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.

ராஜு பால் கொலை வழக்கில் உமேஷ் பால் ஆரம்ப சாட்சியாக இருந்தார். ஆனால் பின்னர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அவரை சாட்சியாக வைக்கவில்லை.

மார்ச் 28ஆம் தேதி பிரயாக்ராஜில் உள்ள எம்.பி.எம்.எல்.ஏ நீதிமன்றம், 2006இல் உமேஷ் பாலை கடத்திய வழக்கில் அதிக் அகமது குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: