You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா vs பாகிஸ்தான்: முஸ்லிம் மக்கள்தொகை பற்றி நிர்மலா சீதாராமன் பேசியது எவ்வளவு உண்மை?
- எழுதியவர், ஷ்ருதி மேனன், ஷதாப் நஸ்மி
- பதவி, பிபிசி
இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.
தனது அமெரிக்க பயணத்தின்போது பேசிய நிர்மலா சீதாராமன், பாஜக ஆட்சியின்கீழ் முஸ்லிம்களின் நிலை மோசமாக உள்ளது என்ற கருத்தை நிராகரித்தார்.
அந்த நிகழ்ச்சியின்போது நிர்மலா பேசிய சில கருத்துகளை பிபிசி ஆய்வு செய்தது.
'இரண்டாவது பெரிய முஸ்லிம் நாடு'
பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் நிலை குறித்து நிர்மலா சீதாராமனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், "உலகிலேயே மக்கள் தொகை அடிப்படையில் முஸ்லிம் அதிகமாக வாழும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா," என்று குறிப்பிட்டார்.
இந்தக் கூற்றை உறுதி செய்வது சற்று கடினமானது. ஏனெனில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் அண்மையில் எடுக்கப்பட்டவை அல்ல. இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடைசியாக 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து செயல்படும் பியூ ஆராய்ச்சி மையம் 2020ஆம் ஆண்டில், இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு இந்தியாதான் என்று கூறியிருந்தது. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது.
இந்தியா குறித்த இந்த மதிப்பீடு 2011ஆம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பாகிஸ்தான் குறித்த இந்த மதிப்பீடும் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாகிஸ்தானின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், பாகிஸ்தானின் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மை குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
2017ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், கராச்சி, சிந்த், பலுசிஸ்தான் போன்ற சில மாகாணங்களில் முழு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என சில புகார்கள் எழுந்தன.
பியூ ஆராய்ச்சி நிறுவனத்தின் மதத்துறை இணை இயக்குநர் கான்ராட் ஹாக்கெட், "பாகிஸ்தானில் சில நிலையற்ற தன்மை காணப்படுகிறது. அதனால் இந்தியாவைவிட பாகிஸ்தானில் முஸ்லிம்கள் எண்ணிக்கை இப்போது அதிகமாகியிருக்க வாய்ப்புள்ளது," என்று தெரிவித்தார்.
'எண்ணிக்கையில் மட்டுமே வளர்ச்சி'
இந்தியாவின் முஸ்லிம் மக்கள்தொகை, அதிக எண்ணிக்கையில் வளர்ந்து வருகிறது என்று நிர்மலா சீதாராமன் சொல்வது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகை அதிகரிப்பதன் விளைவாக, மற்ற அனைத்து மதத்திலும் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால் மக்கள் தொகையின் மொத்த வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கும் போது, அதன் சராசரி விகிதம் குறைந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது.
1991ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களின் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதமும் மொத்த மக்கள் தொகை அதிகரிக்கும் விகிதமும் குறைந்து வருகிறது.
2019ஆம் ஆண்டு வெளியான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் அதிகாரபூர்வ தரவுகளின்படி, முஸ்லிம் மக்கள் மதப்பிரிவுகளின் அடிப்படையில் அதிக கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளனர்.
ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் மிகக்கடுமையான சரிவைக் கண்டுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
உண்மையில், இந்துக்களைவிட முஸ்லிம்களின் மக்கள் தொகை வீழ்ச்சி விகிதம் கடுமையாக உள்ளது. இது 1992இல் 4.4 பிறப்புகளிலிருந்து 2019இல் 2.4 ஆக குறைந்ததுள்ளது.
சமூக, பொருளாதார காரணிகளால் கருவுறுதல் விகிதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறைய மதரீதியான இணைப்பு ஏதுமில்லை என்கிறார், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையைச் சேர்ந்த சங்கமித்ரா சிங்.
"சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரத்தால் கருவுறுதல் விகிதங்கள் குறைந்துள்ளன," என்று அவர் கூறுகிறார்.
ஆயினும், சில இந்து குழுக்களும், பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சி குறித்து தவறான கூற்றுகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
இன்னும் சிலர், இந்துக்கள் அனைவரும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
இந்திய மக்கள் தொகையில் சுமார் 80% ஆக இருக்கும் பெரும்பான்மை இந்து மதத்தினரின் எண்ணிக்கையைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று சிலர் முன்வைக்கும் கருத்துகளை நிபுணர்கள் முற்றிலும் நிராகரிக்கின்றனர்.
குடும்ப நலத் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்கான தேசிய குழுவின் முன்னாள் தலைவர் தேவேந்திர கோத்தாரி, மாறுபட்ட எதிர்கால சூழ்நிலையைக் கணித்துள்ளார்.
கருவுறுதல் விகிதங்களில் ஏற்பட்டுள்ள சரிவின் அடிப்படையில், அடுத்த கணக்கெடுப்பில் மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதம் முஸ்லிம்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகரித்திருக்கும் என்று அவர் கூறுகிறார்.
'இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை'
1947ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த முஸ்லிம் மக்கள் தொகை, தற்போது எத்தனை மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதைப் பாருங்கள். பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் நிலை குறித்துப் போலியான கட்டமைப்புகள் முன்வைக்கப்படுகின்றன. உண்மைநிலையை அறிந்து இந்தியாவுக்கு வந்து சுற்றிப் பாருங்கள் என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இந்தியாவில், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகளை, சீதாராமன் சுட்டிக்காட்டினார். இந்த நிலை இருக்கிறதா என்று நேரில் வந்து பார்க்குமாறு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்திய முஸ்லிம்கள் வணிகம் செய்யவும், தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும், அரசின் உதவியைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைக் குறிவைத்து, அதிகரித்து வரும் தாக்குதல், கொலைகள் மனித உரிமை அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில், பாஜக தலைமையிலான அரசு "மத சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட பாகுபாட்டுடன் செயல்படுகிறது," என்று கூறியுள்ளது.
மத சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து அதிகாரபூர்வ தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் சுயாதீன ஆராய்ச்சியாளர்கள், சில அமைப்புகள் இந்தியாவில் வெறுப்பு குற்றங்கள் அதிகரிப்பது குறித்த தகவல்களை ஒருங்கிணைத்துள்ளன.
'பாகிஸ்தானில் குறையும் சிறுபான்மையினர் எண்ணிக்கை'
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன், இதன் விளைவாக முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் குறைந்து வருவதாகக் கூறினார்.
பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடாகும். 2017ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மத சிறுபான்மை குழுக்களில் இந்துக்கள் (2.14%), கிறிஸ்தவர்கள் (1.27%), அகமதியர்கள் (0.09%) இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கும் வன்முறைக்கும் இலக்காகியுள்ளனர் என்பது உண்மைதான்.
பாகிஸ்தானின் கடுமையான மத போதனை சட்டங்களின் மூலம் அகமதியர் முஸ்லிம் சமூகம் மீது சட்ட வழக்குகளும் தாக்குதலும் அரங்கேறுவதாக HRW 2020 அறிக்கை கூறுகிறது.
கிறிஸ்தவர்களும் இந்துக்களும் மத போதனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் மத போதனை சட்டங்கள் என்ன?
1987ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, 1,855 பேர் வரை மத போதனை தடுப்புச் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமை அமைப்பான சமூக நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் நிர்மலா சீதாராமன் கூறுவதைப் போல பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்து விட்டது குறித்தோ, அழிந்துவிட்டது குறித்தோ உறுதி செய்ய போதுமான தரவுகள் இல்லை.
1947க்குப் பிறகு பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற பாஜகவின் கூற்றுகள் குறித்து பகுப்பாய்வு செய்து பார்க்கப்பட்டது.
அதில் பயன்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள், கிழக்கு பாகிஸ்தான் பகுதியாக முன்பு இருந்த வங்கதேசத்தின் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கையையும் உள்ளடக்கி இருக்கிறது என்பதை பிபிசி கண்டறிந்தது. இந்த எண்ணிக்கையை உள்ளடக்கிக் கூறுவதன் மூலம் புள்ளி விவரங்களை தவறாக வழிநடத்தியது உறுதியாகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்