வேல்ஸ் இளவரசி புகைப்பட சர்ச்சை - ‘எடிட்’ செய்யப்பட்ட படங்களைக் கண்டறிய ஐந்து சிறந்த வழிகள்

    • எழுதியவர், ரிச்சர்ட் க்ரே
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

வேல்ஸ் இளவரசி கேத்தரின், வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகான தனது முதல் அதிகாரப்பூர்வ படத்தை இங்கிலாந்தின் அன்னையர் தினத்தன்று (கடந்த மார்ச் 10) வெளியிட்டார்.

இது அவரது உடல்நிலை குறித்த ஊகங்களை தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, அப்படம் டிஜிட்டல் முறையில் ‘எடிட்’ செய்யப்பட்டிருந்ததால், புதிய சர்ச்சைகளைக் கிளப்பியது.

இதனால், செய்தி நிறுவனங்கள் வேல்ஸ் இளவரசி தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் அப்படத்தை நீக்கின.

இளவரசி தான் ஏற்படுத்திய ‘குழப்பத்திற்கு’ மன்னிப்பு கேட்டுள்ளார்.

என்ன நடந்தது இவ்விஷயத்தில்?

வேல்ஸ் இளவரசி கேத்தரின் என்ன கூறினார்?

அந்த புகைப்படத்தை வெளியிட்டது தொடர்பாக வேல்ஸ் இளவரசி கேத்தரின் சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். “பொழுதுபோக்குக்காக புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள் போன்று, நான் அவ்வப்போது ’எடிட்டிங்கில்’ சில பரிச்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வேன்,” என அவர் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் கேட் மிடில்டன் “சிறிய மாற்றங்களை” செய்ததாக அரச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒருசில க்ளிக்குகளிலேயே படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யவோ அல்லது ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வாயிலாக ஒன்றும் இல்லாமல், ஒரு படத்தையே முழுவதும் உருவாக்க முடியும் இக்காலகட்டத்தில், நம் கண்கள் பார்ப்பதை நம்புவது மிகவும் கடினமாகியுள்ளது.

இப்படி மிகவும் யதார்த்தமான வகையில் படங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்கள், அதிநவீனமாகியிருக்கும் யுகத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். இத்தகைய புகைப்படங்களால் தவறான தகவல்கள் பரவி, அதனால் தேர்தல்கள் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் பொதுமக்கள் கருத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். வேல்ஸ் இளவரசி மற்றும் அவரின் குழந்தைகளின் புகைப்படம் 'மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம்' என்பதால், செய்தி முகமைகளிலிருந்து அப்படம் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்னை முன்பைவிட அதிகமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட படங்கள் அல்லது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை கண்டுபிடிக்க ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா?

பிரதிபலிப்புகள் மற்றும் நிழல்கள்

வழக்கத்திற்கு மாறான வெளிச்சம் இருப்பது, அந்த புகைப்படம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டிக்கொடுக்கும் விஷயம்.

புகைப்படத்தில் இருப்பவர்களின் கண்களில் உள்ள ஒளியை கவனியுங்கள். ஒளி எப்போதும் கண்களில்தான் பிரதிபலிக்கும். படம் எடுக்கப்பட்ட இடத்துடன் ஒளியின் அளவோ, நிறமோ பொருந்தவில்லை என்றாலோ, அல்லது இரு கண்களிலும் பிரதிபலிக்கும் ஒளி ஒன்றோடொன்று வித்தியாசமாக இருந்தாலோ, அப்போது நீங்கள் அந்த படம் குறித்து சந்தேகிக்கலாம். ஒளி பிரதிபலிக்கும் இடத்தில், படத்தில் முதன்மையாக இருப்பவர்கள் மற்றும் பொருட்கள் இருக்கும் விதம் சில தடயங்களை வழங்கலாம்.

பல்வேறு படங்களிலிருந்து துண்டுதுண்டாக பிரித்து பின் சேர்க்கப்பட்ட புகைப்படமாக இருந்தால், அதிலுள்ள பொருட்களின் நிழல்கள் ஒரே வரிசையில் இருக்காது. எனினும், பல்வேறு ஒளி ஆதாரங்கள் மூலமாகவும் சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். படத்தில் உள்ளவர்களின் முகங்கள் மீது ஒளி எந்த விதத்தில் இருக்கிறது என்பதை பார்ப்பதும் முக்கியம். உதாரணத்திற்கு, அவர்களுக்குப் பின்னால் சூரியன் இருந்தால், படத்தில் உள்ளவர்களின் காதுகள் சிவப்பாக இருக்கும்.

ஏஐ தொழில்நுட்பத்தால் பொருத்தமற்ற வெளிச்சத்தையும் நிழல்களையும் தான் உருவாக்க முடியும். ஏஐ தொழில்நுட்பம் இன்னும் மேம்பட்டால் தான் அதனால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், மனித முகங்களைவிட யதார்த்தமாக இருப்பதாக நாம் நினைக்கும் அளவுக்கு இருக்கும்.

கைகள் மற்றும் காதுகள்

பிரதியெடுப்பதற்கு கடினமாக உள்ள சில அம்சங்களை உற்றுநோக்க வேண்டும். கைகள் மற்றும் காதுகள் போன்றவற்றை அப்படியே பிரதியெடுப்பதிலும் அதன் வடிவம், அளவு மற்றும் விரல்களின் எண்ணிக்கையை கூட பிரதியெடுப்பதில் ஏஐ தொழில்நுட்பம் இன்னும் முன்னேறவில்லை.

இதே அம்சங்கள்தான் ஓவியர்களுக்கும் சிக்கலை தந்தன. ஆனால், பிற அம்சங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் மிக யதார்த்தமாக இருப்பதால், இந்த தவறுகள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

தரவுகளை உற்றுநோக்குதல்

டிஜிட்டல் படங்களின் குறியீட்டுக்குள் மறைந்திருக்கும் தகவல்கள் போலி படங்களை கண்டறிய உதவும். டிஜிட்டல் கேமராவில் ஒவ்வொரு முறை புகைப்படம் எடுக்கும்போதும் அதன் தரவுகள், புகைப்படத்தின் ஃபைலில் சேர்க்கப்படும். உதாரணமாக, டைம்ஸ்டாம்ப்ஸ் -- ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எப்போது நிகழ்ந்தது என்பதை அடையாளம் காணும் எழுத்துக்கள் அல்லது குறியிடப்பட்ட தகவல்களின் வரிசை.

இதன்மூலமே 2020 அக்டோபரில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்த மறுநாளே, அதிபர் டொனால்ட் டிரம்ப் உண்மையில் வெள்ளை மாளிகையில் பணியில் இருந்தாரா என்ற கேள்விகளுக்கு வழிவகுத்தது.

புகைப்படத்தில் மாறுபாடுகள்

ஒவ்வொரு டிஜிட்டல் கேமரா சென்சாரிலும் சிறிய தவறுகள் உள்ளன. இவை டிஜிட்டல் படங்களில் சில தவறுகளுக்கு வழிவகுக்கும். இதனால், அப்படம் போலியானதா என்பதை அறிவதற்கான தடயங்கள் இருக்கும். இது ஒரு குறிப்பிட்ட கேமராவுடன் தொடர்புடையது மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படத்தின் பகுதிகளை அடையாளம் காண உதவும். ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களும் வித்தியாசமாக தோன்றும்.

சரிபார்க்கும் கருவிகள்

கூகுள் போன்ற நிறுவனங்கள், ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களை சரிபார்ப்பதற்கென சில கருவிகளை வெளியிட்டுள்ளன. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை மெட்டா தளங்களிலிருந்து வரும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. மேலும், பிற நிறுவனங்களின் ஏஐ கருவிகளால் உருவாக்கப்பட்ட படங்களுக்கும் இதைச் செய்யத் திட்டமிட்டுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)