டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் - காணொளி
36 பந்துகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவை. களத்தில் அதிரடி வீரர் மேக்ஸ்வேல் ஆக்ரோஷமாக ஆடிக் கொண்டிருந்தார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இரட்டைச் சதம் அடித்து ஆப்கானிஸ்தானை அழ வைத்த மேக்ஸ்வெல் இந்த முறையும் அதைச் செய்ய காத்திருந்தார்.
பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்க குல்பதீன் நயிப்பிடம் பந்தை வழங்கினார் கேப்டன் ரஷீத் கான். நயீப் வீசிய 4வது பந்தை மேக்ஸ்வேல் ஓங்கி அடிக்க முயன்று அது கேட்சாக நூர் அகமது கைக்குச் சென்றது. போட்டியை வென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருந்த ஆஸ்திரேலியாவின் கனவு மேக்ஸ்வெல் விக்கெட்டால் சுக்குநூறாகிப்போனது. ஆஸ்திரேலியா 127 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியைத் தழுவியது.
ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது.
நாங்கள் இனியும் கத்துக்குட்டி அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை ஆஃப்கானிஸ்தான் நிரூபித்திருக்கிறது.
நியூசிலாந்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பலரையும் வியக்க வைத்த ஆப்கானிஸ்தான், இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர்களில் தொடர் வெற்றிகளை ருசித்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு தற்போது கசப்பு மருந்து புகட்டியிருக்கிறது.
நடப்பு டி20 தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் பலமான ஆஸ்திரேலிய அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கான பந்தயத்திலும் ஆப்கானிஸ்தான் நீடிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



