ரயில் விபத்து: காப்பீட்டு தொகையை பெறுவது எப்படி? - நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 10 விஷயங்கள்

ஒடிஷா மாநிலம், பாலாசோர் அருகே சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிரிழந்தனர். பல நூறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. அத்துடன் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணம் மேற்கொள்வோர் அதற்கான காப்பீடு எடுப்பது குறித்த விவாதம், ஒடிஷா ரயில் விபத்துக்குப் பிறகு பெரிய அளவில் எழுந்துள்ளது.

“ரயில் பயணத்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதே பயணிகள் காப்பீடு எடுக்கும் நடைமுறை தற்போது உள்ளது. ஆனால் இதில் பிடித்தம் செய்யப்படும் பிரீமியம் தொகை மிகவும் குறைவாக உள்ளதாகவும், இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒடிஷா ரயில் விபத்துக்கு பிறகு கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இதையடுத்து, ரயில் பயணக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று தெற்கு மத்திய ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

ரயில் பயணத்துக்கான காப்பீடு எடுப்பதன் பயன்கள் என்ன? இந்த காப்பீட்டுக்கான கட்டணம் (பிரீமியம்) எவ்வளவு? எந்தெந்த தருணங்களில் காப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவர்கள் பெறலாம்?

இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கு காண்போம்.

காப்பீடு எடுப்பது எப்படி?

ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவின்போதே, அதற்கான காப்பீட்டையும் (Insurance) பயணிகள் எடுக்க வேண்டும். இந்தக் காப்பீட்டை எடுப்பதற்கான வசதி, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) இணையதளம் அல்லது அதன் செயலியில் உள்ளது.

முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகள் அல்லது ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்குப் பதிலாகத் தரப்படும் டிக்கெட்களுக்கு (RAC) மட்டுமே பயணக் காப்பீடு பொருந்தும்.

அத்துடன், இந்திய குடிமகன்களுக்கு மட்டுமே இந்தக் காப்பீடு திட்டம் பொருந்தும். அதாவது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் பயணிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.

படுக்கை வசதி அல்லது இருக்கை முன்பதிவு இல்லாமல் பயணிக்கும் ஐந்து வயதுகு உட்பட்ட குழந்தைகளுக்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது.

பிரீமியம் தொகை எவ்வளவு?

பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணி ஒருவர் தனது பயணக் கட்டணத்துடன், காப்பீட்டுத் தொகையாக 35 பைசா செலுத்த வேண்டும்.

2021 நவம்பர் 1 முதல் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு பிஎன்ஆர் (PNR) எண்ணுக்குக் கீழே பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் இருக்கும் அனைத்துப் பயணிகலுக்கும் சேர்த்து காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையைச் செலுத்த வேண்டும்.

எந்தெந்த தருணங்களில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது?

ரயில் விபத்துகளின்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பயணக் காப்பீட்டுத் தொகையைப் பெற வாய்ப்புள்ளது. இதற்கு, விபத்து நிகழ்ந்த நாளில் இருந்து நான்கு மாதங்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும். இதேபோன்று விபத்தில் சிக்கி நிரந்தர உடல் ஊனத்துக்கு ஆளாகும் நபர்களுக்கும் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும்.

விபத்தில் காயமடைந்த பயணிகள், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்பட்சத்தில், அவர்களின் மருத்துவச் செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும்.

விபத்தின் விளைவாக, உடலில் பகுதி அளவு ஊனம் ஏற்படும் நபருக்கு 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும்.

இதேபோன்று, விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் லேசான காயம் அடைவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும் காப்பீட்டு நிறுவனத்தால் அளிக்கப்படும்.

இவை தவிர, ஒடிஷாவில் தற்போது நிகழ்ந்துள்ளதைப் போன்று சற்றும் எதிர்பாராத விதமாக கோர விபத்துகள் நிகழும் தருணங்களில், பாதிக்கப்படுபவர்களுக்கோ அல்லது இழப்பீடு கோர உரிமையுள்ளவராக காப்பீட்டில் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கோ (Nominee) விண்ணப்பங்கள் ஏதுமின்றி இழப்பீடு அளிக்கப்படும்.

விபத்தில் பாதிக்கப்படும் ஒரு பயணியின் நாமினி, இழப்பீடு தொடர்பான விவரங்களை அளிக்கவில்லையென்றால், சட்டப்பூர்வமாக இழப்பீட்டைப் பெற தகுதியானவருக்கு அந்தத் தொகை சென்று சேரும்.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லவோ அல்லது அந்த உடலைத் தகனம் செய்யவோ 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தத் தொகையைப் பெறுவதற்கு உடனடியாக ஆவணங்கள் எதையும் தர வேண்டியதில்லை.

விபத்தில் சிக்கி, உயிர் தப்பும் பயணிகள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு விபத்து நிகழ்ந்த அன்று தாங்கள் வாங்கிய ரயில் பயணச் சீட்டு அல்லது நடைமேடை சீட்டை ஆதாரமாக அளிக்க வேண்டும்.

ரயில் பயணக் காப்பீடு பெறுவது எப்படி?

தங்களின் ரயில் பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டதும், பயணக் காப்பீடு குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு குறுந்தகவலாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ காப்பீட்டு நிறுவனங்கள் அனுப்பும்.

நிறுவனங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் இருக்கும் பிரத்யேக இணைப்புக்குள் சென்று, பயணிகள் தங்களின் பெயர், நாமினி குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதையடுத்து பயணிகளின் பயணச்சீட்டு பதிவு விவரங்களில், அவர்களின் பயணக் காப்பீடு எண் இடம்பெறும்.

விபத்தின்போது மட்டும்தான் இழப்பீட்டைப் பெற முடியுமா?

எதிர்பாராத சூழலில் நிகழும் ரயில் விபத்துகளின்போது ஏற்படும் பயணிகளின் உயிரிழப்புக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்படும் என்று ரயில்வே சட்டம் 1989 இன் 124 பிரிவு கூறுகிறது.

இந்தச் சட்டப் பிரிவில், 1994 ஆகஸ்ட் 1இல் மத்திய அரசு சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, ரயில் விபத்துகளில் மட்டுமின்றி, பயங்கரவாத தாக்குதல், வன்முறைச் சம்பவங்கள், திருட்டு, கொள்ளை, மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களில் பயணிகள் உயிரிழக்க நேர்ந்தாலும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

ரயில் பயணத்தின்போதோ அல்லது ரயில் நிலைய வளாகத்திற்குள்ளோ விபத்து அல்லது தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து, அதனால் பாதிக்கப்படும் பயணிகள் மட்டுமே இழப்பீடு பெற இயலும்.

இதேபோன்று பயணச்சீட்டுப் பதிவு அலுவலகம், காத்திருப்போர் அறை, நடைமேடை உள்ளிட்ட இடங்களில் விபத்துகள் நிகழ்ந்து, அதனால் பயணிகள் இறக்கவோ, காயமடையவோ நேர்ந்தால் அவர்களும் அதற்கான இழப்பீட்டைப் பெறலாம்.

குறிப்பிட்ட ஒரு ரயிலில் பயணம் செய்ய விரும்பி, பயணச்சீட்டு முன்பதிவு செய்து, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகள், அந்த ரயிலில் பயணம் செய்ய முடியாதபோது மற்றொரு ரயிலில் அவர்கள் பயணிக்கும் வசதியை ‘வில்காப்’ திட்டம் வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளும் விரும்பத்தகாத சம்பவங்கள் நேரும்போது இழப்பீடு பெறத் தகுதியானவர்கள்தான்.

எதற்கெல்லாம் இழப்பீடு கோர முடியாது?

ரயில்வே சட்டத்தின் பிரிவு ‘124 ஏ’வின்படி, தற்கொலை, தானாக ஏற்படுத்திக் கொள்ளும் காயங்கள், குற்றச் செயல்கள் மற்றும் நோய்களின் காரணமாகப் பயணத்தின்போது பயணிகள் இறக்க நேர்ந்தால் அப்போது அவர்கள் இழப்பீடு கோர முடியாது.

இதேபோல், ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது இறப்பவர்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படாது.

பயணச்சீட்டு உறுதி செய்யப்படாதபட்சத்தில் ஒருவர் ரயிலில் பயணிக்கும்போது விபத்து நேர்ந்து, அதில் அவர் இறக்க நேர்ந்தாலும் அதற்கு இழப்பீடு வழங்கப்படாது.

பயணக் காப்பீட்டுக்கான தொகை, ஒரு குறிப்பிட்ட விபத்தில் பாதிக்கப்படும் பயணிகளின் பல்வேறு தேவைகளுக்கு வழங்கப்படாது.

யாரிடம் விண்ணப்பிப்பது?

ரயில் பயணிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தை எஸ்பிஐ ஜெனரல் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் லிபர்ட்டி இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைத்து செயல்படுத்தி வருவதாக ஐஆர்சிடிசி நிர்வாகம் கூறுகிறது.

இவற்றில், தாங்கள் செலுத்தும் பயணக் காப்பீட்டுக்கான பீரிமியம் தொகை எந்த நிறுவனத்துக்குச் செல்கிறது என்பது குறித்து பயணிகள் தங்களின் பயணச்சீட்டு முன்பதிவு விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தியில் இருந்து அறியலாம்.

ரயில் விபத்து போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நேரும்போது அதில் பயணிகள் இறக்கவோ, மாற்றுத்திறனாளி நிலைக்கு ஆளாகும்போதோ அதற்கான இழப்பீடு கோரி, விபத்து நேர்ந்த தேதியில் இருந்து நான்கு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விபத்தில் பாதிக்கப்பட்ட பயணி அல்லது அவரின் நாமினி அல்லது சட்டரீதியாக அவரது பாதுகாவலராக உள்ளவர் இந்த இழப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே சட்டத்தின் 125வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?

விபத்து நேர்ந்தது குறித்தும், அந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயணிகளின் விவரம் குறித்தும் ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பெறப்படும் அறிக்கையை, இழப்பீடுக்கான விண்ணப்பத்துடன் அவசியம் அளிக்க வேண்டும்.

இதுதவிர, காப்பீட்டு நிறுவனம் கோரும் பிற கூடுதல் ஆவணங்களையும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

விபத்தில் காயமடைந்த நபர் தாமாகவோ அல்லது அவரது உறவினர்கள் அல்லது அவர் அங்கீரித்துள்ள நபரின் மூலமாகவோ காப்பீட்டுத் தொகையைக் கோரலாம்.

விபத்தில் பயணி உயிரிழந்துவிட்டால், அவருக்கான இழப்பீட்டை அவரது மனைவி, பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் கோரலாம். இதுவே விபத்தில் 18 வயதுக்குட்பட்ட நபர் இறக்க நேர்ந்தால் அவரது பாதுகாவலர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம்.

காப்பீட்டுத் தொகை எப்போது கிடைக்கும்?

உரிய அனைத்து ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டபின், 15 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் இந்தத் தொகையை ( Sum Insured) விண்ணப்பதாரர்களுக்கு அளிக்க வேண்டும்.

எனினும் ரயில் விபத்துகளைப் பொருத்தவரை, அதிகமான பிரீமியம் தொகை காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செல்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் காப்பீட்டுத் தொகை ஒவ்வோர் ஆண்டும் குறைவாகவே உள்ளது.

இதுதொடர்பாக, ‘எக்னாமிக்ஸ் டைன்சில்’ ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர் என்பவர், ரயில் பயணக் காப்பீடு தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற முக்கியமான தகவல் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பயணக் காப்பீட்டுத் தொகையாக ஐஆர்சிடிசி மற்றும் பயணிகள் இடமிருந்து காப்பீட்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 46.18 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையில் வெறும் 7 கோடி ரூபாய் மட்டுமே பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு காப்பீட்டுத் தொகையாக திரும்ப அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: