சென்னை மழை: ஜூன் மாதத்தில் வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு 'எல்நினோ' காரணமா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜூன் மாதத்தில் மழை பெய்து வருகிறது. ஒரே மாதத்தில் அதிக வெயிலுக்காகவும் கன மழைக்காகவும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த மழைக்குக் காரணம் என்ன? இந்த மழை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்?
சென்னை நகரில் நேற்று இரவு முதல் தற்போதுவரை விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. நகரில் நேற்று அதிகாலை முதலே மழை தொடர்ந்து பெய்துவந்தாலும் பிற்பகலில் சற்று நின்றது. பிறகு, இரவு பத்து மணிக்கு மேல் பெய்ய ஆரம்பித்த மழை, தற்போதுவரை தொடர்ந்து பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக விமான நிலையத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தரமணியிலும் ஆலந்தூரிலும் 14 செ.மீயும் செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீயும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு தாம்பரம், குன்றத்தூர், டி.ஜி.பி. அலுவலகம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை தவிர, கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சில வட மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது.
எதிர்பாராமல் பெய்த இந்த மழையின் காரணமாக, சென்னைக்கு வந்து சேரும் 10க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டன. பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

ஒரே நாளில் அதிகம், ஜூனில் குறைவு
தற்போது பெய்திருக்கும் மழைக்கு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியே காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், காற்று தென் பகுதியிலிருந்து வடபகுதியை நோக்கி சென்றபோது காற்றின் வேகம் அதிகரித்து, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.
இதன் காரணமாகவே நேற்று முதல் மழை நீடித்து வருகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும்" என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழ்நாட்டில் பொதுவாக ஜூன் மாதத்தில் மிகக் குறைவாகவே மழை பெய்யும். இது தென்மேற்குப் பருவமழைக் காலம் என்பதால், மேற்குத் தொடர்ச்சி மழையின் மேற்கு பகுதியிலேயே அதிக மழை பெய்யும். ஆனால், சென்னையில் ஜூன் மாதத்தைப் பொறுத்தவரை கடந்த 73 ஆண்டுகளில் ஒரே நாளில் அதிக மழை பெய்த நாட்களின் பட்டியலில் இந்த ஜூன் 19ஆம் தேதியும் இடம்பெற்றுள்ளது.
"சென்னை மீனம்பாக்கத்தைப் பொருத்தவரை கடந்த 73 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச மழை பெய்துள்ளது. இதற்கு முன்பாக 1996ல் 282.2 மி.மீ மழை பதிவானது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 158.2 மி.மீ பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தைப் பொறுத்தவரை, கடந்த 73 வருடத்தில் இது மூன்றாவது அதிகபட்ச மழை. 1996ல் 347.9 மி.மீட்டர் பெய்தது. 1991ல் 191.9 மி.மீ. பதிவானது. தற்போது 84.7 மி.மீ. பெய்துள்ளது" என்று பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
ஜூன் மாதத்தின் மொத்த மழையளவை எடுத்துக்கொண்டால், குறைவாகவே மழை பதிவாகியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் தற்போதுவரை தமிழ்நாடு - புதுவை பகுதியில் இயல்பான மழை அளவு 34.4 மி.மீ. ஆகும். ஆனால், இந்த காலகட்டத்தில் 30.5 மி.மீட்டர் மழையே பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 11 சதவீதம் குறைவு.

எல்நினோவுக்கும் கனமழைக்கும் தொடர்பா?
இருந்தபோதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்த அளவுக்கு மழை பெய்ததற்கு என்ன காரணம்?
"சாதாரணமாக தென்மேற்குப் பருவ மழை காலத்தில் பொதுவாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை இருக்காது. வெப்பச் சலனம் ஏற்பட்டால் ஆங்காங்கே மழை பெய்யும். எப்போதெல்லாம் தென்மேற்குப் பருவமழை பலவீனமடைகிறதோ அப்போது தமிழ்நாட்டில் மழைபெய்யும். தற்போது தென்மேற்குப் பருவமழைக் காலம் துவங்கிவிட்டாலும்கூட, கேரளாவில் பெரிய அளவில் மழை பெய்ய ஆரம்பிக்கவில்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அங்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இங்கு மழை குறைய ஆரம்பித்துவிடும்" சுயாதீன வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்த்.

இந்த ஆண்டு எல் - நினோ ஆண்டாக இருப்பதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா? "எல் -நினோவுக்கும் இந்த மழைக்கும் தொடர்பு இல்லை. எல் - நினோ என்பது மிகப் பெரிய காலநிலை நிகழ்வு. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கடலின் வெப்ப நிலை இயல்பைவிட ஒரு டிகிரி அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது.
அந்தக் கடல் பகுதியில் 3 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்தால், தீவிர எல் - நினோ ஏற்படும். இது புயல்களின் எண்ணிக்கை, புயல்கள் செல்லும் பாதை ஆகியவற்றை தீர்மானிக்கும். புயல்களின் உயரத்தையும்கூட இது பாதிக்கலாம். ஆனால், தற்போது ஏற்பட்டிருப்பது வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு காற்றுச் சுழற்சியால் ஏற்பட்டுள்ளது" என்கிறார் ஸ்ரீகாந்த்.
இன்னும் இரண்டு நாட்களில் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்வது நின்று, உள் மாவட்டங்களில் பெய்ய ஆரம்பிக்கும் என்கிறார் அவர்.
சுரங்கப் பாதையில் மழைநீர் தேக்கம்
இந்த மழையின் காரணமாக, சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னை நகரில் ஆறு இடங்களில் மரங்கள் விழுந்து, அவை அகற்றப்பட்டதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












