இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை கடற்றொழில் அமைச்சு கூறுகிறது.

இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள், கடற்றொழில் திணைக்களம் மற்றும் போலீஸாரின் உதவியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் மீன்பிடிப் படகுகளை, இலங்கை அரசாங்கம், அரசுடமையாக்கி வருகின்றது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 127க்கும் அதிகமான படகுகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மன்னார் பகுதிகளில் இந்தப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

''கைப்பற்றப்பட்ட படகுகள் சில கடலில் மூழ்கடிக்கப்படவுள்ளன. ஏனைய படகுகள் இரும்புக்கு விற்பனை செய்யப்படவுள்ளன'' என இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதோடு, இந்த ஆண்டில் இதுவரையான காலம் வரை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 40 இந்திய படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த 167 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கைதாகும் மீனவர்களுக்கு விலங்கிட்டு, தடுத்து வைப்பு

இலங்கை கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து வரப்பட்டமை மற்றும் மருத்துவமனையில் தளபாடங்களில் விலங்கிட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களை நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்ல இரவு வேளை வரை ஆகியுள்ளது.

இதன்போது, இந்தச் செய்தியை சேகரிப்பதற்காக நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு வெளியில் செய்தியாளர்கள் காத்திருந்தனர். அவர்களில் ஒருவரே ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன்.

கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை சிறைச்சாலையின் பேருந்துக்கு மீள அழைத்து வந்து ஏற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதை வீடியோ பதிவு செய்ய ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் முயற்சி செய்துள்ளார். இதை அவதானித்த சிறைச்சாலை அதிகாரி, ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணனின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இந்திய மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோ பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலை அதிகாரியின் செயல்பாடு காணப்பட்டதாக ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து, இவர்களை சிறைச்சாலை பேருந்தில் ஏற்றும்போது, அதை வீடியோ பதிவு செய்தேன். வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் வந்து, வீடியோ எடுக்க இயலாது என்றார், நான் மீடியா எனக் கூறினேன்.

'இல்லை இல்லை எடுக்க இயலாது' எனச் சொல்லி கேமராவுடன் சேர்த்து என்னையும் தள்ளிவிட்டார். நான் ரெகோட் ஆவதை நிறுத்தவில்லை. நான் கொஞ்சம் பின்னால் வந்து, ரெகோட் போட்டுக்கொண்டு நிற்க, போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வந்து வீடியோ எடுக்க வேண்டாம் எனச் சொல்லி மறித்தார்" என்று தெரிவித்தார்.

அப்போது, "யார் எடுக்கக்கூடாது எனச் சொன்னது என்று நான் கேட்டேன். அப்போது 'நான் தான் சொன்னேன்' என்று சொல்லிக் கொண்டு சிறைச்சாலை அதிகாரி வந்தார். நீதிமன்றத்திற்கு வெளியில் எடுப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் தடை செய்ய வேண்டாம் என்று கூறினேன். அவர் 'இல்லை எடுக்க முடியாது' எனச் சொன்னார்.

நீதிமன்றத்திற்குள்ளும் நான் வரவில்லை. சிறைச்சாலைக்குள்ளும் நான் வரவில்லை. நான் வீதியில் இருந்தே எடுக்கின்றேன் என சொன்னேன். வழமையாக நாங்கள் முறைப்படியே வீடியோக்களை எடுப்போம் எனச் சொன்னேன். இல்லை முடியாது. நான் உங்களைக் கைது செய்வேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என சொன்னார். நான் பரவாயில்லை என்றேன்'' என ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் கூறுகிறார்.

''நாங்கள் பல வழக்குகள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்குச் சென்றுள்ளோம். இதுவரை யாரும் தடை விதித்தது இல்லை. இப்போது அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது" எனவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், விலங்கிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை மாத்திரமன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் காலில் சங்கிலியிட்டு, அந்த சங்கிலி மருத்துவமனை கட்டிலில் கட்டப்பட்டிருக்கும் விதத்திலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் பிபிசி தமிழ் வினவியது.

குறித்த விடயம் தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் பதிலளித்தார்.

சிறைச்சாலை திணைக்களம் கூறுவது என்ன?

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விலங்கிடப்பட்டு, சங்கிலியில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் பிபிசி தமிழ், சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்கவிடம் வினவியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் பதிலளித்தார்.

சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் தற்போதைய நிலை என்ன?

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 31 பேர் தற்போது சிறையில் இருப்பதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் க.கிரிஷாந்தன் தெரிவிக்கின்றார்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அளித்த தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 40 இந்திய படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த 167 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறாகக் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறைவைக்கப்படுவதுடன், பின்னரான காலத்தில் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் விடுவிக்கப்படுவதாகக் கூறுகிறார் கிரிஷாந்தன்.

இந்த நிலையில், எல்லை தாண்டி வரும் மீனவர்கள் எந்த அடிப்படையில் கைது செய்யப்படுவார்கள் என்பது குறித்தும் கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் க.கிரிஷாந்தன் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

''படகின் உரிமையாளர், படகோட்டி ஆகியோருக்கு உடனடியாகவே சிறைத் தண்டனை வழங்கப்படும். ஏனைய மீனவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்படும். இரண்டாவது முறை அதே மீனவர் கைது செய்யப்படும் பட்சத்தில் முதல் குற்றத்திற்கும் சேர்த்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்."

அதோடு, "கைவிரல் அடையாளங்களை எடுத்த பிறகே மீனவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைப்போம். அவர்கள் மீண்டும் வரும்போதும் கைவிரல் அடையாளங்கள் எடுக்கப்படும். பொதுவாக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்.

ஒரு குற்றச்சாட்டுக்கு 6 மாதங்கள் என்ற அடிப்படையில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, அந்த சிறைத் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும். இந்த ஐந்து வருட காலத்திற்குள் வந்து மீண்டும் பிடிபடும் பட்சத்தில், பழைய குற்றச்சாட்டு மற்றும் புதிய குற்றச்சாட்டு இரண்டுக்கும் சேர்த்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்" என்றும் கிரிஷாந்தன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

எல்லைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு, அவர்களின் உடமைகள் அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு மீண்டும் அறிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு