அவசர நிலை பிரகடனம் குறித்து இந்திரா காந்தி அளித்த அரிய நேர்காணல்
50 ஆண்டுகளுக்கு முன்பு 1975ம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் பத்திரிகையாளர் பால் சால்ட்ஸ்மேனுக்கு இந்திரா காந்தி அளித்த பேட்டி இது:
கேள்வி: நேரு அல்லது காந்தி இப்போது உயிருடன் இருந்திருந்தால், உங்களை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள் என்றும், நீங்கள் எடுக்கும் தீவிர நடவடிக்கைகளால் அவர்கள் சிறையில் இருப்பார்கள் என்றும் பத்திரிகைகளில் கூறப்படுகிறது.
பதில்: காந்தி அல்லது என் தந்தையின் எண்ணம் என்ன என்பதை மேற்கத்திய நாடுகள் எனக்குக் கற்பிக்க முயற்சிக்கிறதா என சந்தேகிக்கிறேன். இது மிகவும் முரணாக இல்லையா?
நான் எந்த அதிகாரத்தையும் எடுக்கவில்லை. அரசமைப்புக்கு உட்பட்டே செயல்படுகிறோம். நாங்கள் செய்ததெல்லாம், பலரைக் கைது செய்தோம். இரு முக்கிய குழுவை தடை செய்தோம். அவர்கள் அரசியல் சாராத குழுக்கள், அராஜகம் மற்றும் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள்.
கேள்வி: ஆனால், ஜனநாயகத்தின் அடிப்படையே, நியாயமான எதிர்ப்பு இருக்கலாம் என்பதுதான். ஆனால், உங்களுக்கு வலுவான எதிர்ப்பு இல்லை. பத்திரிகை தணிக்கை காரணமாக பத்திரிகைகளில் உங்கள் மீதான விமர்சனம் இல்லை. நான் பேசியவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருப்பது என்னவென்றால், ஒருவரை சிறையில் அடைக்க முடியும், ஆனால் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய முடியாது. நிச்சயமாக, இது கூடுதல் அதிகாரம்தானே.
பதில்: இது சிறிதளவு கூடுதல் அதிகாரம்தான். ஆனால், இங்கே என்ன சூழ்நிலை உருவாக்கப்பட்டது என்பதை தொடக்கத்திலேயே விளக்கிவிட்டேன். இப்போது கேள்வி என்னவென்றால், அது ஜனநாயகமாக இருந்தாலும் சரி, வேறு எந்த வகையான அரசாங்கமாக இருந்தாலும் சரி, எந்தவொரு அரசாங்கத்தின் முதல் கடமை என்பது நாட்டின் ஒற்றுமையையும் அதன் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதே. அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக நினைக்கிறேன்.
கேள்வி: சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதைப் பற்றிப் பேசலாம். உங்கள் நெறிமுறைகள் உயர்ந்தது என்றே வைத்துக்கொள்வோம். ஒரு உண்மையான கொடுங்கோலன் உங்களுக்கு பின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால், அது அவர் எளிதில் சர்வாதிகாரியாக மாறுவதற்கான வழியைத் திறக்கவில்லையா?
பதில்: குடியரசுத் தலைவரை பொறுத்தவரை, அவருக்கு எப்போதும் இந்த அதிகாரம் உள்ளது. இது இப்போது குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமருக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாரையும் பாதுகாப்பது இதன் நோக்கமல்ல, மாறாக அரசியல் நோக்கங்களுக்காக வழக்குகள் தொடரப்படுவதைத் தடுப்பதுதான்.
உண்மையான சர்வாதிகாரி இருந்தால், நிச்சயமாக அவர் நாடாளுமன்றத்தையும், எல்லாவற்றையும் ஒழித்துவிடுவார்.
கேள்வி: ஆனால், மக்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்கொணர்வு உரிமை இல்லை என்றால் அது கிட்டத்தட்ட அதே விளைவையே ஏற்படுத்தும்.
பதில்: லிங்கன் என்ன சொன்னார் என்று தெரியுமா?அமெரிக்க வரலாற்றில் ஒரு கட்டத்தில் நீங்கள் ஒற்றுமையை விரும்புகிறீர்களா அல்லது ஆட்கொணர்வு உரிமையை விரும்புகிறீர்களா என்று கேட்டார். இந்தியா ஒருங்கிணைந்த அமைப்பாக தொடர விரும்புகிறீர்களா அல்லது அராஜகம் நிறைந்த நாடாக இருக்க வேண்டுமா என்ற சூழல் இருந்தது.
அது போன்ற சூழல் வந்திருந்தால் ஜனநாயகம் பற்றிய கேள்வியே இருக்காது. உறுப்பினர்கள் மிரட்டப்பட்டு ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டால் அது நிச்சயமாக ஜனநாயகம் அல்ல. ஜனநாயகத்தின் அர்த்தம் அதுவல்ல. இது எதிர்க்கட்சிகளில் சிலரின் திட்டமிடப்பட்ட செயல், அவர்கள் நாடாளுமன்றத்திலும் அதையே செய்யப் போகிறார்கள்.
கேள்வி: இந்த கட்டத்தில், அந்த அச்சுறுத்தல்களை நீங்கள் நீக்கிவிட்டதாக தெரிகிறதே?
பதில்: இன்னும் இல்லை.
கேள்வி: இந்த நேரத்தில் பலர் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
பதில்: வெளிப்படையாகச் சொன்னால், பயப்பட வேண்டியவர்களைத் தவிர வேறு யாரும் பயப்படுவதாக நான் நினைக்கவில்லை. நான் சொன்னது போல, அவர்கள் தவறு செய்பவர்கள். மக்கள் எனக்கோ, வேறு யாருக்கோ அல்லது வேறு எதற்கோ பயப்படுவதை நான் விரும்பவில்லை.
கேள்வி: மக்கள் உங்களைப் பார்த்து பயப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், ஏன் ஆட்கொணர்வு உரிமையை மீண்டும் கொண்டு வரக்கூடாது? மக்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவதால், தாங்கள் காணாமல் போவோம் என்று உணர மாட்டார்களே, இப்போது ஏன் அதைச் செய்யக்கூடாது?
பதில்: யாரும் காணாமல் போவதில்லை.
கேள்வி: விமர்சிக்கப்படுவதை நீங்கள் பொருட்படுத்தவில்லையா?
பதில்ள்: விமர்சிக்கப்படுவதை நான் பொருட்படுத்தவில்லை.
கேள்வி: அப்படியென்றால் பத்திரிகை தணிக்கை நீக்கப்படும் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: பத்திரிகைகள் என்னை விமர்சிப்பதால் நான் அவற்றை தணிக்கை செய்யவில்லை, அது இந்திய மக்களின் மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் குறைத்தது.
கேள்வி: நேரு அல்லது காந்தி இப்போது உயிருடன் இருந்திருந்தால், உங்களை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள் என்றும், நீங்கள் எடுக்கும் தீவிர நடவடிக்கைகளால் அவர்கள் சிறையில் இருப்பார்கள் என்றும் மீண்டும் பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளது.
பதில்: காந்தி அல்லது என் தந்தையின் எண்ணம் என்ன என்பதை மேற்கத்திய நாடுகள் எனக்குக் கற்பிக்க முயற்சிக்கிறதா என சந்தேகிக்கிறேன். இது மிகவும் முரணாக இல்லையா?
கேள்வி: இந்தியாவை மாற்றுவதில், வறுமையை ஒழிப்பதில் நீங்கள் செய்தது மகத்தான வேலை. அவசரநிலை காலத்தில் இப்போது இருக்கும் சூழல், அதை சிறப்பாக செய்ய உங்களை மேலும் தூண்டலாம். அப்படி உங்களுக்கு தூண்டுதல் இருக்கிறதா?
பதில்: இல்லவே இல்லை. ஜனநாயகம் என்பது வெறும் கோட்பாடாக அல்ல, ஒரு நடைமுறைச் சூழலிலும் இது தான் செயல்படும் ஒரே முறை என்றும் நம்புகிறேன். இந்தியாவைப் போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் இதுவே சாத்தியமான ஒன்று என நினைக்கிறேன். வேறுபட்ட மதங்கள், மொழி குழுக்கள் மற்றும் கலாசார குழுக்கள் முழுமையான உணர்வை கொண்டிருந்தால் மட்டுமே அவர்களை ஒன்றாக வைத்திருக்க முடியும்.
கேள்வி: நாட்டுக்கு செய்யும் சிறந்த விஷயம் பதவி விலகுவது என்று நீங்கள் நினைக்கும் தருணம் வரக்கூடும் என்று எண்ணுகிறீர்களா?
பதில்: அது நிச்சயமாக வரக்கூடும். எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக நான் என்றென்றும் அதிகாரத்தில் இருக்க முடியாது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



