ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்'

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் மற்றும் இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர்
    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராஜ்கோட்டில் இன்று நடக்கும் 3வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றும் முயற்சியில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றபின் சூர்யகுமார் தலைமையிலான டி20 அணி இதுவரை எந்த டி20 தொடரையும் இழக்காமல் இருந்து வருகிறது. அந்த நற்பெயரை தக்க வைக்கும் முயற்சியில் விளையாடும் என நம்பலாம்.

டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது அதில் 15 ஆட்டங்களில் வென்று 2 ஆட்டங்களில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது. இந்த 17 போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி இ்ல்லாமல்தான் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால், 3-0 என தொடரைக் கைப்பற்றும்.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஸ்கை மீண்டும் சதம் அடிப்பாரா?

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த இரு போட்டிகளிலும் திலக் வர்மா, அபிஷேக் சர்மா இருவரின் ஆட்டம்தான் அணிக்கு வெற்றி தேடித்தந்தது.

சாம்ஸன், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் என யாரும் தங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்கவில்லை.

அதிலும் கேப்டன் சூர்யகுமார் கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. அவர் ஃபார்மின்றி தவிக்கிறாரா அல்லது கேப்டன் பதவிக்கான சுமையால் திணறுகிறாரா என்று தெரியவில்லை.

இதே ராஜ்கோட் மைதானத்தில்தான் கடந்த 2023-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக சூர்யகுமார் சதம் விளாசினார். அதே நினைவுகளுடன் இந்த ஆட்டத்திலும் விளையாடி அவர் பெரிய ஸ்கோரை எட்டினால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம்.

2வது ஆட்டத்தில் வெற்றிக்காக போராடிய இந்திய அணியை திலக்வர்மாவின் அற்புதமான பேட்டிங் காப்பாற்றியது. தொடக்க வீரர்களும் நடுவரிசை வீரர்களும் கடந்த இரு போட்டிகளிலும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. சூர்யகுமார், சாம்ஸன், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் ஓரளவுக்கு சிறப்பாக ஸ்கோர் செய்தால் அடுத்து களமிறங்குவோருக்கு சுமை குறையும்.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிக்காக போராடிய இந்திய அணியை திலக்வர்மாவின் அற்புதமான பேட்டிங் காப்பாற்றியது.

ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு

இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த ஆட்டத்தில் துருவ் ஜூரெல் சிறப்பாக ஆடாததால் இன்றைய ஆட்டத்தில் ஷிவம் துபேவுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் பெரிதாக வேலையிருக்காது என்பதால் அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா இருவருடன் மட்டும்தான் இந்திய அணி களமிறங்கும்.

அதேசமயம், அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவரத்தி ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இடம் உறுதியாகும். ஷிவம் துபே இடம் பெற்றால், 7-வது பந்துவீச்சாளராக இருப்பார். அபிஷேக் சர்மா பந்துவீசினாலும் வியப்பில்லை.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷிவம் துபே இடம் பெற்றால், 7-வது பந்துவீச்சாளராக இருப்பார்.

இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்'

சூர்யகுமார் தலைமையில் விளையாடி வரும் அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்குரிய இடத்தை வலிமையாக பிடித்துவிட்ட நிலையில் அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சாம்ஸன் ஆகிய மூவரிடையே தொடக்க வரிசைக்கு கடும் போட்டி நிலவுகிறது.

ரோஹித் சர்மா, ஜடேஜா, கோலி டி20 போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில் இவர்களின் இடத்தை நிரப்ப வீரர்களைத் தேர்வு செய்வதுதான் பயிற்சியாளர் கம்பீர் முன்னுள்ள மிகப்பெரிய பணியாக இருக்கிறது.

ஏனென்றால் ஒவ்வொரு வீரரும் ஏதாவது ஒரு ஆட்டத்தில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக, காரணமாக அமைந்துவிடும் நிலையில் யாரை பெஞ்சில் அமர வைப்பது, ப்ளெயிங் லெவனில் இடம் அளிப்பது என முடிவு செய்வது கடினமான பணியாக மாறிவிட்டது.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சாம்ஸன் ஆகிய மூவரிடையே தொடக்க வரிசைக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இங்கிலாந்து அணியின் செயல்பாடு எப்படி?

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின், அந்த அணியால் வெள்ளைப் பந்தில் நடக்கும் ஆட்டங்களில் பெரிதாக வெற்றியை குவிக்க முடியவில்லை.

ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் இங்கிலாந்து அணி மோசமாகவே செயல்பட்டது.

டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக வந்த பிரண்டென் மெக்கலம் ஒருநாள், டி20க்கும் சேர்த்து பணியைக் கவனித்த போதிலும் இவரின் பேஸ்பால் பாணி ஆட்ட முறை பெரிதாக கைகொடுக்கவில்லை. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பையும் மோசமாக அமைந்தது. இந்திய அணிக்கு எதிராக இந்த டி20 தொடரும் கடும் சவாலாக மாறியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருண் வீசும் கூக்ளி பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரும் திணறுகின்றனர்.

இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சும் பெரிதாக பலன் அளிக்கவில்லை. மார்க் உட் பந்துவீச்சில் வேகம் இருக்கிறதே தவிர, பேட்டர்களை திணறடிக்கும் வகையில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதில்லை (சரியான லைன் அன்ட் லென்த் இல்லை). ஆல்ரவுண்டர்களையும், ஸ்பெசலிஸ்ட் பேட்டர்களையும் வைத்திருந்தாலும் இரு ஆட்டங்களிலும் அந்த அணி பெரிதாக ரன் குவிக்கவில்லை.

இந்தியாவின் சுழற்பந்துவீச்சுப் படையைப் பார்த்து இங்கிலாந்து பேட்டர்கள் எப்படி ஆடுவது எனத் தெரியாமல் விக்கெட்டை இழக்கிறார்கள். அதிலும் வருண் வீசும் கூக்ளி பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரும் திணறுகின்றனர். இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பது பெரிய தலைவலியாக இருக்கும்.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பது பெரிய தலைவலியாக இருக்கும்.

மைதானம் யாருக்கு சாதகம்?

ராஜ்கோட் நிரஞ்சன் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. தட்டையான பிட்சை கொண்டுள்ள இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்ய படாதபாடு படவேண்டும். சரியான லைன் லெத்தில் (Line Length?) மட்டுமே பந்தை பிட்ச் செய்ய முயல வேண்டும், இல்லாவிட்டால் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியேதான் பார்க்க முடியும்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்கும், ஆனால் பந்து நன்றாக திரும்பும் எனக் கூற முடியாது. ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களுக்கு விருந்தாக இந்த ஆடுகளம் இருக்கும்.

இந்த ஆடுகளத்தில் குறைந்தபட்ச ஸ்கோரே 189 ரன்கள்தான். அதிகபட்சமாக 228 ரன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதலால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து பெரிய ஸ்கோரை எட்டுவது பாதுகாப்பானது. இரவு நேர பனிப்பொழிவுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும்.

இந்த மைதானத்தில்இந்திய அணி இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டிகளில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த 5 ஆட்டங்களிலும் 3 போட்டிகள் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன, 2 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணிகள் வென்றுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)