இலங்கையில் பேரிடர் மீட்பு, நிவாரணப் பணிகளில் இந்தியா, பாகிஸ்தான் - காணொளி
"இலங்கையில் திட்வா புயல் எதிரொலியாக பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளனர். 352 பேர் காணாமல் போயுள்ளனர். 432 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. சுமார் 13 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்று அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
புயல் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இலங்கையுடன் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன.
இலங்கைக்கு உதவ இந்தியா ஆபரேஷன் 'சாகர் பந்துவை' அறிவித்தது. அதன் கீழ் இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி போர்க்கப்பல் ஆகியவை நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நவம்பர் 28-ஆம் தேதி கொழும்பு சென்றன.
இந்தியாவிலிருந்து 9 டன் நிவாரணப் பொருட்கள், மீட்புப் பணிக்கான உபகரணங்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் 80 என்.டி.ஆர்.எஃப் வீரர்கள் அடங்கிய குழு விமானப்படை விமானத்தில் நவம்பர் 29-ஆம் தேதி இலங்கை சென்றது. அவர்கள் படகில் சென்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இலங்கையில் பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் சைஃப் போர்க்கப்பல் மீட்புப் பணிகளில் உதவியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



