You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
9 ஆண்டு தலைமறைவு குற்றவாளி: பிஸ்கட் சாப்பிடும் பழக்கத்தால் சிக்கியது எப்படி?
- எழுதியவர், பார்கவா பாரிக்
- பதவி, பிபிசி குஜராத்திக்காக
தினமும் காலையில் தேநீருடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம்.
ஆனால் குஜராத்தில் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடிய ஒரு குற்றவாளியை இந்தப் பழக்கம் சிக்க வைத்துள்ளது.
மனைவியைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஒரு குற்றவாளி, பரோலில் வெளியே வந்த பிறகு ஒன்பது ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்த காலகட்டத்தில், அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டில் குடியேறினார்.
ஆனால் ஒரு பிஸ்கட் பாக்கெட்டால், போலீசார் அந்தக் குற்றவாளியைப் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?
சூரத் நகரில் உள்ள ஒரு பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுரேந்திர வர்மா, சச்சின் பகுதியில் உள்ள வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். அங்கு அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.
2007-ஆம் ஆண்டு, சுரேந்திரா தனது மனைவியைக் கொலை செய்ததாக, போலீசார் அவரைக் கைது செய்தனர்.
வலுவான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில், சூரத் அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதன் பிறகு அவர் லாஜ்போர் சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வந்தார்.
"2016-ஆம் ஆண்டு சுரேந்திர வர்மா பரோல் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு, அவருக்கு 28 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. ஆனால், பரோல் காலம் முடிந்தும் அவர் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவானார். இதனால் அவர் மீது சச்சின் காவல் நிலையத்தில் 'சிறைச் சட்டத்தின்' (Prison Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார்," என்று சூரத் ஏசிபி நிரவ் கோஹில் கூறினார்.
சுரேந்திராவின் உறவினர் ரவீந்திர குமார் கூறுகையில், "சுரேந்திராவின் குடும்பத்திற்கு உத்தர பிரதேசத்தில் சொந்தமாக நிலம் இருந்தது, ஆனால் அதிலிருந்து பெரிய வருமானம் இல்லை. சுரேந்திரா அதிகம் படிக்காதவர். விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால், தனது கிராமத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கர்வி பகுதியில் ரிக்ஷா ஓட்டி வந்தார். மக்களைத் தனது ரிக்ஷாவில் ஏற்றி சித்ரகூட் பகுதிக்கு அழைத்துச் செல்வார்"என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அப்போது அவர் ஒரு பெண்ணைக் காதலித்தார். அது கிராமத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் 2005-ஆம் ஆண்டில், அவரது சொந்த சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன் பிறகு வேலை தேடி, கிராமத்தைச் சேர்ந்த சிலருடன் சூரத் நகருக்கு வந்த அவர், சச்சின் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் வாடகை ரிக்ஷாவையும் ஓட்டி வந்தார்," என்றார்.
சுரேந்திரா தனது மனைவியிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டுத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. வரதட்சணைப் பணம் கிடைத்தால், வாடகை ரிக்ஷா ஓட்டுவதற்குப் பதிலாகச் சொந்தமாக ரிக்ஷா வாங்கலாம் என்று அவர் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
அதன் பின்னர், சுரேந்திரா தனது மனைவியைக் கொலை செய்த விஷயம் உறவினர்களுக்குத் தெரியவந்தது.
ஒன்பது வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி பிடிபட்டது எப்படி?
பரோலில் இருந்தபோது தலைமறைவான 42 வயதான சுரேந்திராவைப் பிடிக்க போலீசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
"முதலில் சுரேந்திராவின் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து சில தகவல்களைச் சேகரித்து ஒரு தனிப்படையை அமைத்தோம். அந்தத் தனிப்படை விசாரணைக்காக உத்தர பிரதேசத்தில் உள்ள சுரேந்திராவின் சொந்த ஊரான பியோரா கிராமத்திற்கு அனுப்பப்பட்டது. நாங்கள் உத்தர பிரதேச போலீசாருடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்," என்று ஏ.சி.பி கோஹில் கூறினார்.
என்றாவது ஒரு நாள் போலீசார் தன்னைத் தேடி வருவார்கள் என்று சுரேந்திரா எதிர்பார்த்திருந்தார். எனவே, பரோலில் தப்பியது முதல் அவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
போலீசாரின் கூற்றுப்படி, உத்தர பிரதேசத்தில் உள்ள சுரேந்திராவின் கிராமம் மிகவும் சிறியது என்பதால், அவர்கள் பொறுமையுடன் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுரேந்திரா பியோராவிலிருந்து சற்று தொலைவில் உள்ள கர்வி பகுதியில் ரிக்ஷா ஓட்டி வருவது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் சில ரிக்ஷா ஓட்டுநர்களிடம் விசாரித்தனர்.
சுரேந்திராவின் புகைப்படத்தை ரிக்ஷா ஓட்டுநர்களிடம் காட்டியபோது, சுரேந்திரா அங்கு ஒரு மின்சார ரிக்ஷாவை ஓட்டி வந்ததை ஒருவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தனது மனைவி மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது.
ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் சங்கர்பூர் கிராமத்தில் நடந்த தனது மைத்துனரின் திருமணத்திலும் கலந்து கொண்டுள்ளார். சுரேந்திராவின் இரண்டாவது மனைவியின் சகோதரரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் குருகிராமில் தொழிலாளியாக இருப்பது தெரியவந்தது.
இதன் மூலம் போலீசாருக்கு அவரது மனைவியின் தொலைபேசி எண் மற்றும் முகவரி கிடைத்தது.
சுரேந்திராவிற்கு தினமும் காலையில் தேநீருடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருந்தது. எனவே, போலீசார் சாதாரண உடையில் அவரது வீட்டிற்கு அருகில் இரண்டு நாட்களாகக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், நவம்பர் 14-ஆம் தேதி, சுரேந்திரா தனது மகனுடன் பிஸ்கட் வாங்க வந்தபோது, போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு, உத்தர பிரதேசத்திலிருந்து சூரத்திற்கு கொண்டு வரப்பட்டு சுரேந்திரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஒரு கொலை குற்றவாளிக்கு எப்போது பரோல் கிடைக்கும்?
தனது மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக சுரேந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், அங்கிருந்துதான் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
ஒரு கொலைக் குற்றவாளி எப்போது பரோல் பெற முடியும் என்பது குறித்து வழக்கறிஞர் ஆசிஷ் சுக்லா குறிப்பிட்டார்.
"கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதி இரண்டு வழிகளில் பரோல் பெற முடியும். முதலாவதாக, கைதியின் குடும்பத்தில் யாருக்காவது கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது வேறு ஏதேனும் தகுந்த காரணம் இருந்தால், அவர் தனது வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம். நீதிமன்றம் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டால், அவருக்கு பரோல் வழங்கப்படும்."
"இரண்டாவதாக, ஒரு கைதி தனது தண்டனைக் காலத்தில் சில ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு, சிறைக் கண்காணிப்பாளரின் பரிந்துரை படிவத்தைப் பூர்த்தி செய்து பரோலுக்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு, சிறையில் அந்தக் குற்றவாளியின் நடத்தை, மற்ற கைதிகளுடனான பழக்கம் போன்றவை குறித்து கண்காணிப்பாளர் தனது கருத்தைத் தெரிவிப்பார், அதை காவல்துறை சரிபார்க்கும்.
காவல்துறையும் சிறைக் கண்காணிப்பாளரும் அந்தக் குற்றவாளியின் விண்ணப்பம் பொருத்தமானது என்று கருதவில்லை என்றால், பரோல் வழங்கப்படாது." என்று அவர் விளக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு