You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை செய்யும் சிபிசிஐடி: எப்படி நடத்தப்படும்?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 சந்தேக நபர்கள் 'பாலிகிராஃப்' என்ற உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வரும் இந்த வழக்கில், உண்மை கண்டறியும் சோதனையை நடத்த டெல்லியில் இருந்து இரண்டு நிபுணர்கள் வந்துள்ளனர். அதேநேரம், 'பாலிகிராஃப்' சோதனையில் கிடைக்கும் தகவல்களை வைத்து மட்டுமே வழக்கை நிறைவு செய்ய முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2010இல் திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபரான ராமஜெயம் காலை நடைபயிற்சி சென்ற நேரத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முதலில் திருச்சி மாவட்ட காவல்துறை விசாரணை செய்தது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது உண்மை கண்டறியும் சோதனை செய்யப்பட்டு வருவதால், இந்த வழக்கு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
உண்மை கண்டறியும் சோதனை என்றால் என்ன?
உண்மை கண்டறியும் சோதனை இரண்டு விதங்களில் நடைபெறுகின்றன. முதல் வகை பாலிகிராஃப் சோதனை (polygraph), இரண்டாவது நார்கோ அனாலிசிஸ் (Narco analysis) என்று சொல்லப்படும் மயக்க மருந்து பயன்படுத்தப்படும் சோதனை.
இந்த இரண்டு சோதனைகளும் எவ்வாறு செய்யப்படும் என்று ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர் திலகவதியிடம் கேட்டோம். அவர் அளித்த விளக்கம்:
பாலிகிராஃப் முறையில் நடைபெறும் சோதனையில், ஒரு நபரிடம் கேள்விகள் கேட்கப்படும்போது, பதில் சொல்லும் நேரத்தில் அந்த நபரின் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சுவாசிக்கும் பாங்கு, வியர்வை வெளியேறுவது மற்றும் கை, கால் அசைவுகள் போன்ற உடலியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்.
அதற்காக பிரத்யேகமாக உள்ள பாலிகிராஃப் இயந்திரம் பொருத்தப்பட்ட இருக்கையில் அவர் அமர வைக்கப்படுவார். சாதாரணமாக ஒரு நபர் பேசும் நேரத்திலும், பொய் சொல்லும்போது பேசும் நேரத்திலும் உடலியல் நிகழ்வுகள் வித்தியாசமாக இருக்கும் என்பதால், பாலிகிராஃப் சோதனையில் அந்த வித்தியாசங்களை அறிய முடியும்.
குறைந்தது 100 கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அந்த நபர் ஒரு கட்டத்தில் உண்மையைச் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதோடு, ஒவ்வொரு கேள்விக்கும் அவர் எப்படி பதில் சொல்கிறார், குற்றச் சம்பவம் பற்றிப் பேசும்போது, அவரின் அசைவுகள் எப்படியுள்ளன என்பதை வைத்து அவர் பொய் சொல்கிறாரா இல்லையா என்று தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
நார்கோ அனாலிசிஸ் முறையில், மருத்துவர்களின் உதவியுடன் விசாரணை செய்யப்படும் சந்தேக நபருக்கு மயக்க மருந்து கொடுப்பார்கள். மயக்க மருந்து நிபுணர் சந்தேக நபரின் உடலில் மருந்தைச் செலுத்திய பிறகு, அவர் மயக்கம் கலந்த தூக்க நிலையில் இருப்பார். அந்த நேரத்தில் அதிகாரிகள் குற்றச் சம்பவம் தொடர்பான கேள்விகளைக் கேட்டு விவரங்களைத் தெரிந்துகொள்வார்கள்.
உண்மை கண்டறியும் சோதனையின் முடிவுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவையா என்று தெரிந்துகொள்ள அந்தச் சோதனையில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். பெயர் சொல்ல விரும்பாத அந்த அதிகாரி, 2005இல் தமிழ்நாட்டில் அரசு தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானது தொடர்பான வழக்கு ஒன்றில் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தியவர்.
''இதுபோன்ற சோதனைகளில் குற்றவாளியாக இருக்கும் நபரின் மனவலிமையைப் பொறுத்துத்தான் முடிவுகள் அமையும். குற்றவாளி மிகவும் 'அலெர்ட்' டாக இருந்துகொண்டு, இந்தச் சோதனையைப் பற்றிய அச்ச உணர்வு எதுவும் இல்லாமல், முன்கூட்டியே தீர்மானம் செய்த விவரங்களை மட்டும் சொல்லவேண்டும் எனத் தீர்க்கமாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.
நாங்கள் செய்த நார்கோ அனாலிசிஸ் சோதனையில் வழக்கிற்குத் தேவையான ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் எல்லா வழக்குகளிலும் இது சாத்தியமில்லை,'' என்கிறார் அந்த அதிகாரி.
தமிழ்நாட்டில் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்பட்ட வழக்குகள்
பாலிகிராஃப் முறையைப் பயன்படுத்தி விசாரணை செய்த அனுபவம் கொண்டவர் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி. 1997இல் சென்னையில் நடந்த விபத்து வழக்கு ஒன்றில் பாலிகிராஃப் முறையில் தரவுகளைப் பெற்றது குறித்து அவர் பிபிசி தமிழிடம் பேசினார்.
''பாலிகிராஃப் முறையில் சுமார் 100 கேள்விகளைத் தயார் செய்துகொண்டு சந்தேக நபரிடம் விசாரணை நடத்தப்படும். வழக்குடன் தொடர்புள்ள கேள்விகள் மட்டுமல்லாது சாதாரணமாக அந்த நபரைப் பற்றிய கேள்விகளும் கலந்த கலவையாக கேள்விகள் கேட்கப்படும்.
அதனால், அந்த நபர் எப்படி பதில் சொல்கிறார் என்பதை பாலிகிராஃப் கருவி காட்டிவிடும். வழக்கு தொடர்பாகப் பேசுகையில், பொய் சொல்லும்போது அவர் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார் என்று பாலிகிராஃப் பதிவில் தெரியவரும்.
ஆனால் ஒரு சில குற்றவாளிகள் மிகவும் கவனமாகக் கேள்விகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளதால் இந்த விசாரணை முடிவுகள் மட்டுமே இறுதி முடிவாகாது,'' என்கிறார் கருணாநிதி.
வழக்கு விசாரணையில் உறுதியான தகவல்களைப் பலமுறை முயன்றும் திரட்ட முடியவில்லை என்கிற சூழலில்தான் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படும் என்கிறார் திலகவதி.
''அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறிய எம்எல்ஏ பாலன் என்பவர் டிசம்பர் 2001இல் கொலை செய்யப்பட்டார். எம்.கே.பாலன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. அது தொடர்பாக 10க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர். பலகட்ட விசாரணைக்குப் பின்னர், அவர்களிடம் இருந்து தரவுகளைப் பெறுவதற்காக உண்மை கண்டறியும் சோதனை நார்கோ அனாலிசிஸ் நடைபெற்றது. அதில், அவர் கொல்லப்பட்ட இடம், எரிக்கப்பட்ட இடம் குறித்த தகவல்கள் பெறப்பட்டன. அந்த வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைதான் உதவியது,'' என்கிறார் திலகவதி.
மிகவும் அரிதாகத்தான் உண்மை அறியும் சோதனைகள் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதாகக் கூறும் மூத்த பத்திரிகையாளர் செல்வராஜ், 2005இல் கிரேடு 2 கான்ஸ்டபில் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான சம்பவத்தில் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தியது மிகவும் பேசப்பட்டது என்றார்.
''காவல்துறையில் கான்ஸ்டபிள் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான சம்பவம் மிகவும் சர்ச்சையானது. இந்த வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்ததால், வெளிப்படைத்தன்மை தேவை என்று வெளிமாநிலமான பெங்களுருவில் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தினார்கள்.
சோதனையில் கிடைத்த விவரங்கள் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மிகவும் உதவின. ஆனால் அந்த வழக்கு பின்னர் நீர்த்துப்போனது,'' என்றார்.
உண்மை கண்டறியும் சோதனையின் பயன் என்ன?
உண்மை கண்டறியும் சோதனை வழக்கு விசாரணையில் எந்த விதத்தில் உதவும் என்று தெரிந்துகொள்ள ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் ரவியிடம் பேசினோம். வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாகத்தான் இந்த சோதனைகளைப் பார்க்க வேண்டும் என்கிறார் ரவி.
''இதுபோன்ற சோதனைகளில் விசாரணை அதிகாரிக்கு பல துப்புகள் (clues) கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சோதனையின் முடிவுகளை வைத்து மட்டுமே, குற்றவாளி என்று ஒருவரைச் சொல்ல முடியாது.
அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளாது. ஆனால், இந்த சோதனைகளில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஒரு வழக்கில் ஆதாரங்களை மேலும் சேகரிக்க முடியும். அதனால், இதுவே இறுதி முடிவு அல்ல,'' என்கிறார் ரவி.
உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாகப் பல வழக்குகள் இந்தியா முழுவதும் பல உயர்நீதிமன்றங்களில் நடந்துள்ளன.
2010இல் நடந்த வழக்கு ஒன்றில் உண்மை கண்டறியும் சோதனை குறித்து உத்தரவுகளைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம், சந்தேக நபரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் அவரை சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்று தெரிவித்தது.
ஒரு நபர் தனது சுயநினைவில் இல்லாத நேரத்தில் சொல்வதை வைத்துக்கொண்டு வழக்கை முடிக்கக்கூடாது என்றும் வழக்குக்குத் தேவையான ஆதாரங்களைப் பெறுவதற்காக உண்மை கண்டறியும் சோதனையின் முடிவுகளைப் பயன்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்