You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழகம்' என்று குறிப்பிட்டது ஏன்?: ஆளுநர் தந்த விளக்கம் - சர்ச்சை முடிவுக்கு வருமா?
பண்டைய காலத்தில் தமிழ்நாடு என்பதே இல்லாததால்தான் காசியுடன் தமிழ் மக்களுக்கு உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
அவரது விளக்க அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை அவர் 6 முறை பயன்படுத்தியுள்ளார். தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டதால் எழுந்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.
திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தின.
இதன் பின்னணியில், தமிழ்நாட்டை தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டது ஏன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
"அண்மையில் நடந்து முடிந்த ஒரு மாத கால, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு ஆளுநர் மாளிகையில் கடந்த ஜனவரி 4-ம் தேதியன்று பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசிக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள தொடர்பை குறிக்கவே 'தமிழகம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.
அந்த காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. ஆகவே, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை, 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்திற்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள் விவாதப் பொருளாகியுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்." என்று அந்த அறிக்கையில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு என்று குறிப்பிடுவதைத் தவிர்ப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது இந்த விளக்க அறிக்கையில் 6 இடங்களில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சை தொடங்கியது எப்படி?
ஜனவரி 5ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
அதில் பங்கு பெற்ற தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிரதமர் மோதியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. பல அரசியல் கட்சிகளும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் அவ்வப்போது தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில் சர்ச்சை நீடித்தது.
இந்நிலையில் தனது உரை குறித்து இன்று விளக்கமளித்துள்ளார் ஆளுநர் ஆர். என். ரவி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்