You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராமஜெயம் கொலை வழக்கி்ல் போலீஸ் தொடர்ந்து விசாரணை: எடப்பாடி பழனிச்சாமி
தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் ஐந்தாண்டுகளுக்கு முன்பாக கொலைசெய்யப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை இன்னமும் விசாரணை செய்துவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார்.
திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார். பிறகு அன்றே அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கை தமிழக குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை விசாரணை செய்துவருகிறது. இதுவரை குற்றவாளிகள் கைதுசெய்யப்படாத நிலையில், வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ) மாற்ற வேண்டுமெனக் கோரி அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வியாழக்கிழமையன்று சட்டப்பேரையில் விளக்கமளித்தார்.
இந்த வழக்கை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை 12 தனிப்படைகளை அமைத்து விசாரித்துவருவதாகக் கூறிய அவர், தொழில்போட்டி, அரசியல் விரோதம், குடும்பப் பிரச்சனை ஆகியவற்றால் இந்தக் கொலை நடந்திருக்கலாமோ என விசாரித்து வருவதாகக் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் இதுவரை 1,100 பேருக்கு மேல் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 294 வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டிருப்பதாகவும் 2910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் பழனிச்சாமி கூறியிருக்கிறார்.
மேலும், ராமஜெயத்துடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் அளித்த வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாகவும் அவர்களில் இருவர் உண்மையறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டதாகவும் ஒருவர் ஒப்புக்கொள்ளவில்லையென்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.
ராமஜெயத்திற்கு தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட வழியிலும் பல விரோதங்கள் இருந்துள்ளன என்றும் இது தொடர்பாக அவருக்கு நெருக்கமானர்கள் கூடுதல் விவரங்களை அளித்தால், அவை விசாரணை செய்யப்படும் என்றும் சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இந்த கொலை விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பழனிச்சாமி இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்