குவைத்தில் தீப்பற்றிய குடியிருப்பில் வசித்த தமிழர்கள் என்ன ஆயினர்?
குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.
30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி கூறுகிறது. அவர்கள் குவைத்தின் அல்-அதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான ஹெல்ப்லைன் எண்ணையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
+965-65505246 என்ற எண்ணை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், உதவிக்காகவும் மக்கள் அழைக்கலாம். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
குவைத்தில், தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வசிக்கிறார் மணிகண்டன். இவர் தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்தவர். பணிக்காக குவைத் சென்றுள்ள இவர், நடந்த சம்பவம் குறித்து விவரித்தார்.
"குவைத்தில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், பெரும்பாலானோர் இரவு நேரப் பணிக்கு செல்வார்கள். வேலையை முடித்துவிட்டு அதிகாலை குடியிருப்புக்கு திரும்பி வந்தவர்களில் சிலர் உணவு சமைத்துள்ளனர். கட்டிடத்தின் அடித்தளத்தில் சமையலறை உள்ளது. அப்போது சமையலறையில் பற்றிய தீ, கட்டுக்கடங்காமல் மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது." என்று கூறினார்.
அதிகாலை நேரம் என்பதால் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மூச்சுத்திணறி இறந்ததாகவும், சிலர் தப்பிக்க நினைத்து மாடிகளில் இருந்து குதித்ததால் உயிரிழந்ததாகவும் கூறினார் மணிகண்டன்.
"இங்குள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தமிழர்களும் தங்கி இருந்தனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை." என்று கூறுகிறார் அவர்.
முழு விவரம் காணொளியில்....

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



