You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் வான் தாக்குதல்: உடைந்த பாகங்கள் பற்றி தெரியவந்தது என்ன?
- எழுதியவர், ஷ்ருதி மேனன் & டாம் ஸ்பென்சர்
- பதவி, பிபிசி வெரிஃபை
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட இந்திய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்பதைக் காட்டும் காணொளிகளை பிபிசி வெரிஃபை ஆராய்ந்தது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாம்போர் (Pampore) பகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாக காட்டும் ஒரு காணொளியில், போர் விமானம் ஒன்றின் எரிபொருள் நிரப்பப்படும் டேங்கின் (drop tank) உடைந்த பாகத்தைக் காட்டுகிறது.
விமானத்தின் இந்த பாகம் பறக்கும்போதே கழட்டி எறியப்படலாம் என்பதால், இது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை குறிப்பதில்லை.
இதே பாம்போர் பகுதியில் எடுக்கப்பட்ட மற்றொரு காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியும் எரிபொருள் டேங்கின் பாகம் இருப்பதைக் காட்டுகிறது.
ஜேன்ஸ் டிஃபென்ஸ் எனப்படும் பாதுகாப்பு தொடர்பான இதழின் நிபுணர்கள், இந்த குறிப்பிட்ட டேங்க், டசால்ட் மிராஜ் 2000 (Dassault Mirage 2000) விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று நம்புகின்றனர், இந்த விமானம் இந்திய விமானப் படையில் இயக்கப்படுகிறது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டாவில் உள்ள அக்லியன் காலன் கிராமத்துக்கு அருகே அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றின் உடைந்த பாகங்கள் இருப்பதை மற்றொரு வீடியோ காட்டுகிறது.
பிரிட்டிஷ் ராணுவ முன்னாள் அதிகாரி ஜஸ்டின் க்ரம்ப், பாதுகாப்பு தொடர்பான நெருக்கடி குறித்து பணிபுரியும் சிபிலைன் (Sibylline) எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த பாகங்கள், இந்திய விமானப் படையில் இயக்கப்படும் மைரேஜ் 2000 மற்றும் ரஃபேல் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும், போர் விமானத்தைத் தாக்கி அழிக்கவல்ல பிரான்ஸ் வடிவமைத்த ஏவுகணையாக இருக்கலாம் என ஜஸ்டின் க்ரம்ப் கூறினார்.
இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறுவது குறித்து இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை.
மேலும், பாகிஸ்தானின் கூற்றை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்தமுடியவில்லை
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு