இந்தியாவின் தாக்குதல் பற்றி ஊடகங்களுக்கு விளக்கமளித்த பெண் அதிகாரிகள் யார்?

பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தனர்.

இந்திய ராணுவம் தனது நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டது. இந்த பதில் நடவடிக்கைக் குறித்த தகவல்களை வழங்க, இந்திய ராணுவத்தின் இரண்டு பெண் அதிகாரிகள் புதன்கிழமை காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

கர்னல் சோஃபியா குரேஷி

2016ஆம் ஆண்டில், ஒரு பன்னாட்டு களப் பயிற்சி இந்தியாவின் புனே நகரத்தில் நடைபெற்றது. 'ஃபோர்ஸ் 18' எனப்படும் இந்தப் பயிற்சி, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (ASEAN Plus) உள்ளடக்கியது. இந்திய மண்ணில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய தரைப்படைப் பயிற்சி இதுவாகும்.

இந்தக் களப்பயிற்சியில், 40 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைக்கு லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரேஷி தலைமை தாங்கினார். முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் பன்னாட்டு களப்பயிற்சியில் இந்திய ராணுவப் பயிற்சிக் குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்த தகவலை தனது முந்தைய பதிவுகளில் ஒன்றில் வழங்கியிருந்த பாதுகாப்பு அமைச்சகம், சோஃபியா குரேஷியின் படங்களையும் பகிர்ந்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த குரேஷி, உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். குரேஷி ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்.

சோஃபியா குரேஷியின் கணவரும் இந்திய ராணுவ அதிகாரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சோஃபியா குரேஷி ஆறு ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். இதில் 2006ஆம் ஆண்டு காங்கோவில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றியதும் அடங்கும்.

அப்போது அவரது முக்கிய பணி என்பது அமைதி நடவடிக்கைகளுக்கான, பயிற்சிகள் தொடர்பான பங்களிப்புகளை வழங்குவதாகும்.

வ்யோமிகா சிங்

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி ஊடகங்களுக்கு விளக்கிய இரண்டாவது அதிகாரி விங் கமாண்டர் வ்யோமிகா சிங் ஆவார்.

வ்யோமிகா சிங் இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக உள்ளார். செய்திகளின்படி, ஒரு விமானியாக வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை லட்சியமாக இருந்துள்ளது.

வ்யோமிகா சிங், என்சிசி-இல் இருந்தவர். பொறியியல் படித்துள்ளார். அவர் 2019ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் முழு நேர விமானியாக நியமிக்கப்பட்டார்.

வ்யோமிகா சிங் 2500 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஓட்டிய அனுபவம் கொண்டவர். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கடினமான சூழ்நிலைகளில் சேடக் மற்றும் சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை அவர் இயக்கியுள்ளார்.

பல மீட்பு நடவடிக்கைகளிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். அதில் ஒன்று அருணாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 2020இல் நடந்த மீட்பு நடவடிக்கை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு