You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதலில் வெறும் 7 நாள் முதல்வர் - நிதிஷ் குமாரின் பயணம் எப்படிப்பட்டது?
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
இடையில் ஜிதன் ராம் மஞ்சி முதல்வராக இருந்த காலத்தைத் தவிர, நிதிஷ் குமார் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக தொடர்ந்து பிகாரின் முதல்வராக இருந்து வருகிறார்.
லாலு பிரசாத் யாதவின் 15 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்துப் போராடி ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார், பின்னர் சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி இல்லாமல் பிகாரில் ஆட்சி அமைப்பது கடினம் என்பதை உணர்ந்தார்.
அதனால்தான், ஜே.பி. மற்றும் கர்பூரி தாகூரின் பாரம்பரியத்தில் அரசியல் கற்ற லாலு பிரசாத் யாதவும் நிதிஷ் குமாரும் ஒன்று சேர்ந்தனர்.
2013இல், நரேந்திர மோதியை காரணமாகக் கொண்டு, நிதிஷ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
அப்போது பாஜக, மோதியை தனது தேர்தல் பிரசாரத் தலைவராக அறிவித்தது. அவர் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படுவார் என்பதை நிதிஷ் எதிர்பார்க்கவில்லை. இதில் அவருக்கு விருப்பமுமில்லை.
மோடியின் தலைமையிலான கூட்டணியில் இருந்தால், தனது இஸ்லாமிய வாக்காளர்கள் தன்னை விட்டு விலகிவிடுவர் என்று நிதிஷ் குமார் நினைத்தார்.
2013 க்கு முன்பு, அதாவது 2010 பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, நரேந்திர மோதியை பிகாரில் பிரசாரம் செய்ய நிதிஷ் குமார் அனுமதிக்கவில்லை. 2005 பிகார் சட்டமன்றத் தேர்தலிலும் நிதிஷ் அவ்வாறே நடந்து கொண்டார்.
2014 மக்களவைத் தேர்தலில், நிதிஷ் குமாரின் கட்சி பிகாரில் தனித்துப் போட்டியிட்டு வெறும் 2 இடங்களை மட்டுமே வென்றது.
அதனைத் தொடர்ந்து வந்த 2015 பிகார் சட்டமன்றத் தேர்தலில், அவர் ஆர்ஜேடியுடன் (ராஷ்டிரிய ஜனதா தளம்) கூட்டணி அமைத்து பெரும் வெற்றி பெற்றார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, நிதிஷ் குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். 2019 மக்களவைத் தேர்தலில், பிகாரின் 40 இடங்களில் 39 இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது.
2020 பிகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி பிகாரில் மூன்றாவது கட்சியாக மாறியது, ஆனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் முதலமைச்சரானார்.
அதன் பிறகு, 2022 இல், மீண்டும் ஆர்ஜேடி உடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார், ஜனவரி 2024 இல், மீண்டும் பாஜக உடன் கூட்டணியில் இணைந்தார்.
மொத்தத்தில், நிதிஷ் குமாரின் அரசியல் பயணம் ஏற்றத் தாழ்வுகளால் நிறைந்தது.
'என்ஜினியர் பாபு' என்று அழைக்கப்பட்ட நிதிஷ் குமார்
மார்ச் 1, 1951 அன்று பாட்னாவுக்கு அருகிலுள்ள பக்தியார்பூரில் பிறந்த நிதிஷ் குமார், பிகார் பொறியியல் கல்லூரியில் மின்பொறியியல் படித்தார்.
அப்போது அவர் 'என்ஜினியர் பாபு' என்று அழைக்கப்பட்டார்.
பொறியியல் கல்லூரியில் பயின்றபோது அவரின் நண்பரும் வகுப்புத் தோழருமான அருண் சின்ஹா தனது 'நிதிஷ் குமார்: தி ரைஸ் ஆஃப் பிகார்' என்ற புத்தகத்தில், கல்லூரி காலத்தில் நிதிஷ், ராஜ் கபூர் திரைப்படங்களின் தீவிர ரசிகர் என்றும், அதைப் பற்றி நண்பர்கள் செய்த நகைச்சுவைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.
அப்போது நிதிஷ் குமாருக்கு மாதம் ரூ.150 உதவித்தொகை கிடைத்தது. அந்த பணத்தில் அவர் புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும் வாங்குவார்.
அத்தகைய வசதி அந்த காலத்து பிகார் மாணவர்களுக்கு அரிதான ஒன்று.
சுதந்திரப் போராட்ட வீரரின் மகனான நிதிஷ், சிறு வயதிலிருந்தே அரசியல் மீது நாட்டம் கொண்டிருந்தார்.
1995ஆம் ஆண்டு சமதா கட்சி வெறும் ஏழு இடங்களை மட்டுமே வென்றது. அப்போது, மாநிலத்தில் மூன்று கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை நிதிஷ் உணர்ந்தார். அதன்பிறகு, 1996இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் பாஜகவை வழிநடத்திய காலம் இது.
இந்தக் கூட்டணி நிதிஷ் குமாருக்குப் பெரிதும் பயனளித்தது. அதன் பிறகு அவர் 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக பிகாரின் முதல்வரானார்.
அவர் வெறும் ஏழு நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தாலும், லாலு பிரசாத் யாதவுக்கு ஒரு வலுவான மாற்று தலைவராக தன்னை நிலைநிறுத்தினார்.
மகா தலித் அரசியல்
2007ஆம் ஆண்டு, தலித்துகளுக்குள் மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்காக 'மகா தலித்' என்ற பிரிவை நிதிஷ் குமார் உருவாக்கினார். அவர்களுக்காக பல்வேறு அரசு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2010இல், வீடு, கல்விக் கடன், பள்ளி சீருடை போன்ற நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.
இன்று பிகாரின் அனைத்து தலித் சமூகங்களும் மகா தலித் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு, பாஸ்வான் சமூகத்திற்கும் மகா தலித் அந்தஸ்து வழங்கப்பட்டது.
ராம் விலாஸ் பாஸ்வான் பிகாரின் மிகப்பெரிய தலித் தலைவர் என்றாலும், தலித்துகளுக்காக குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்தது நிதிஷ் குமார் தான் என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
மக்கள் தொகையில் சுமார் 4 சதவீதம் கொண்ட குர்மி சமூகத்தை சேர்ந்தவர் நிதிஷ் குமார்.
ஆனால், ஆட்சியில் இருந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் வாக்குப் பலம் கொண்ட கட்சிகளுடன் அவர் தொடர்ச்சியாக கூட்டணி வைத்திருந்தார்.
பாஜகவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட போது, பாஜக ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட உயர் சாதி வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றார்.
அதன்பின், 2015இல், யாதவ்- இஸ்லாமிய வாக்கு வங்கியைக் கொண்டிருந்த ஆர்ஜேடியுடன் இணைந்து போட்டியிட்டார்.
நிதிஷ் குமார் பணிவான, மென்மையான பிம்பத்தை கொண்டவராக இருந்தாலும், மற்ற அரசியல்வாதிகளைப் போலவே கடினமான நிலைப்பாடுகளை எடுக்கும் தன்மை அவருக்கும் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு